களவாடிய தருணங்கள் – சிறுகதை

களவாடிய தருணங்கள் – சிறுகதை

இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு பலத்த காற்று தென்னங்கீற்றை வருடி எடுத்து வந்த தென்றலின் இன்னிசை கூடிய ஓர் இதமான காற்று சட்டென்று அவன் மீது வீச என்ன காரணமென்று புரியவில்லை. அது ஒரு மாலை பொழுது மேற்கே கீழ் வானம் சிவந்து கிடந்தது வீசிய காற்று மேற்கே அவனை திருப்பியது. கீழ் வான சிவப்பிற்க்கு போட்டியாக வெட்கம் சிவக்க அவள் நடந்து வந்தாள். விற்றென்று அந்த சிவப்பில் ஓர் மின்னால் வெட்டியது அவள் கடைக்கண் பார்வையின் வீச்சு அது.

மையம் கொண்ட புயலை எதிர்பார்வையிட மின்னல் வந்த நேரமது. சிவந்த வெட்கம் கொஞ்சும் நானம் கொஞ்சம் பார்வையென அவள் நெருங்கி வரும்போதே அவன் உடம்பெல்லாம அனலேறியது ஆயிரம் அரிவைகள் கூடி நின்றபோதிலும் கண் பார்ப்பவன் இன்று இவள் கண்னை பார்க்கமுடியாமல் வெட்கம்தலைக்கேற அவள் கால் கொலுசின் ஓசை வெளிவரும் இடம் பார்க்க சென்றான். ஆண்கள் வெட்கப்படும் தருணத்தை முழுமையாக அன்று தான் உணர்ந்தான். எத்துனையோ முறை பார்த்து பழகிய முகம், இருந்தபோதும் இன்று அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் அது ஒரு ரசாயன மாற்றமாக இருக்கலாம் காதல் அனுக்களை உயிர்க்காற்று ரசாயன கலவையின் துணை கொண்டு எங்கோ கடத்தி சென்று கொண்டிருந்தன் காரதணமாக இருக்கலாம்.

முதல் பார்வையிலே காதல் வந்து தொற்றிக்கொள்ள அவன் அவ்வளவு பலவீனமாகவும் இல்லை அதேபோல முதல் சந்திப்பிலே காதலில் விழும் பலம் அவள் அகராதியிலே இல்லை ம்ஹூம் அது பெண்கள் அகராதியிலே இல்லை.

புயல் கரையைகடப்பதற்கு மாறாக அன்று மின்னல் புயலை கடத்தி சென்றது.

இப்படி சில காதல் சேஷ்டைகள் நடைபெறுவது வழக்கம் தான் ஆனால் இந்த சேஷ்டை உணர்வுகளுக்குள் ஊடுருவி காதலின் வெட்கசிவந்த குழம்பில் இருவரையும் தள்ளிவிட்டு இருவரும் தத்தளிப்பதை பார்த்து வேடிக்கை பார்க்கும் காதலின் கோர இன்முகம் எவ்வளவு இனிமையானது என்று உணர்திட மனிதனாய் ஜனனம் எடுத்த அத்துனை பிறவிகளையும் காதல் கடலில் முங்கி தூய்மைபடுத்த இறைவன் எத்தனித்த அவதாரமே என்று வகையறுக்க வந்தது தான் காதல் என்று இங்கு குறிப்பிடும் போது அதை உணர்ந்தவர்கள் பொன்முறுவலும் உணராதவர்கள் நமட்டு சிரிப்பையும் வெளிப்படுத்துவது இங்கே தவிர்க்க முடியாதது. அப்படி நமட்டு சிரிப்போடு மேற்கொண்டு பின் தொடர்ந்து காதலில் விழுந்து விடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்பவில்லை ஏனென்றால் அதுதான் காதலின் சாசனம். அது காயங்கள் தரும் காயத்திற்கு மருந்துகள் தரும் வலியின் உணர்வை தரும் உணர்வில் வடுவை தரும் மொத்தத்தில் அது இறைவனை காண ஏங்கும் முடிவில்லா பேரின்பத்தை தரும்.

அப்படி பேரின்ப வரத்தை பெற தான் தயாரானான் அவன். பார்வையின் விழித்திரையில் சிக்கியவளையெல்லாம் மனையாள் என்று நினைப்பவன் ஆண்வர்கத்தின் அகவரிசையிலே இல்லாதவன். அப்படி எண்ணிலடங்கா பெண்களை பார்த்த கண்கள் இவள் கண்களில் சிக்குண்டு தவிப்பதை உணர்ந்தான் அவன் தாயை உணர்ந்தான் அவன் துணையை உணர்ந்தான் தனக்கானவள் இவள் என்று உணர்ந்தான். அவளை ரசிக்க சித்தமானான் உச்சி எடுத்த வகிட்டை தாமரை மலர் முகத்தை அதில் பனி துளி போல் சிதறிகிடந்த மூக்குத்தியை அவள் காதுகளில் சிம்ம சொப்பனமிட்ட கம்மலை கைவிரல் மோதிரத்தை கால் கொலுசை கொலுசின் ஓசையை என அவன் ஒரு தலை காதலை இராவணனின் பத்து தலை கொண்டு சேமித்தான்.

‘அவளுக்கும் தான் நம்மீது அபிராயம் இருக்குமோ ம்ஹூம் இருக்காது நம்மலலாம் யாரு காதலிப்பா’ என்று அவன் மனம் கிடந்து தவித்தது. ஆனால் அவள் கண்களில் காதல் தெரிகிறதே! ஒரு பெண்ணின் கண்கள் என்ன சொல்கிறது என்று தெரியாதளவிற்கா இந்த ஆண் வகையறாக்கள் முட்டாளிகிடக்கின்றன. இல்லை இது காதல் இல்லை ம்ம் இது காதல் தான் என்று ஏங்கி வெம்பி துடிக்கும் அவன் இதயத்தை அவள் கேட்டாலோ என்னவோ.
காதல் அசைவுகளை மெதுவாக கடத்தினாள்.

பெண்கள் பார்த்ததும் காதல் கொள்ள மாட்டார்கள் அழகை பார்த்து கொள்ள மாட்டார்கள் பின்பு எதை பார்த்து கொள்வார்கள் ஆகச்சிறந்த  நடத்தயை பார்த்து கொள்வார்கள். அப்படி என்ன அந்த நடத்தை அவளை காதல் வயப்பட செய்தது என்று அவளுக்கு தான் வெளிச்சம் ம்ஹூம் அவள் மனதுக்கு தான் வெளிச்சம்.

அவளுக்கு கொஞ்சம் திமிர் அதிகம்தான் அந்த திமிர் தான் அவள் அழகும் கூட. அதை அவன் வெகுவாக ரசித்தான் அந்த திமிர் அவனை இன்னும் காதல் கொள்ள செய்தது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்த போதும் பெரிதாக பேசியதில்லை ஆனால் அவர்கள் கண்கள் பேசியது தினமும் பேசியது. அந்த கண்களின் சம்பாஷனையில் ஊடல் இருந்தது காதல் இருந்தது மோதலும் இருந்தது. அப்படிபட்ட சம்பாஷனையின் விளைவை தான் அவன் கவிதையாக வடித்தான் காதல் அவனை கூட கவிஞனாக்கியது காலத்தின் கொடுமை.

அவள் காதல் சீற்றங்கள் அதிகமானது அவன் மனம் கனமானது காதல் அவன் மனதை நிறைத்தது நிரம்பி வழிய தொடங்கியதை வழிந்தவற்றை எங்ஙனம் நிரப்ப அவளுக்கு உரித்தானது அவளுக்கே சேரட்டும் என ஒரு வழியாக முடிவுக்கு வந்தான்.

காதலை சொல்ல ஒரு நொடி போதும் ஆனால் காதல் களவாடிய தருணங்களை சொல்ல ஒரு ஆயுள் வேண்டும்

காதலை சொல்லி காத்திருப்பது சுகம் தான் இருந்தும் விலகி சென்றால் தான் அது தீர்ந்திடுமா
பாரக்காமல் பேசாமல் இருந்தால் தான் அவை மறந்திடுமா

இப்படி காதல் களவாடிய தருணங்களை சேமித்து ஒரு காதல் வரலாற்றையே எழுதிடலாம். அப்படி தான் தன் காதல் வரலாற்றின் நடுப்பக்கங்களை எழுத தொடங்கினான். அந்த பக்கங்களை உரையாடலாக தான் உணர முடியும் வாக்கியங்களாக வர்ணிக்க முடியாது.

காதல் அவன் வாழ்க்கையில் பலவற்றை களவாடியது அவன் நெடுநாள் தூக்கத்தை பசியை சிரிப்பை வேதனையை பாரத்தை அந்த இனிமைகளை அவன் வாயாற சொல்லும் நேரம் வந்தது அவளை அவன் பார்த்த அதே நல்வேளையில்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”

“ம்ம் சொல்லு”

“உன் கண்ணு என்ன கொல்லுது”

“என்ன சொல்ற”

“ஆமா உன் கண்ண பார்த்து என்னால பேசமுடியல”

“இதுல எல்லாமே இருக்கு இதுல என் கவிதைகள் நான் சொல்ல நினைக்கிறது எல்லாமே இருக்கு என் கவிதையின் இலக்கனமே நீ தான் நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ எல்லாம் உனக்கு சேர வேண்டியது தான்

என் மனசுல இருந்ததல்லாம் இதுல சொல்லிட்டேன்

ஆனா உன் மனசுல இருக்குறத தான் நீ சொல்ல மாட்டேங்குற….

ஆம்பளய்ங்க காதல் தேன் மாறி அதுல எந்த கலப்படமும் இருக்காது 
அந்த காதல் பார்த்தவுடன வர்றது 
அது பழக்கத்துனாலயோ
அழக பார்த்தோ குணத்த பார்த்தோ வர்றதில்ல

அது அப்படியே பார்த்தவுடன வரும் பார்த்தவுடனே இவ நமக்கு பொண்டாட்டியா வந்தா நல்லா இருக்குமுனு தோனும்  
அது அப்படி எல்லாருகிட்டாயும் வந்துறாது உன்கிட்ட வந்துச்சு….

நீ கோச்சுகலனா ஒன்னு சொல்றேன் எனக்கும் உனக்கும் இப்ப இரண்டு பிள்ளைங்க தெரியுமா…

எனக்கு புரியுது 
சாதி மதம் ம்ம் தெரியும்….

நான் நல்லவனா உன்ன வச்சு காப்பாத்துவேனானு உனக்கு சந்தேகம் வரலாம் தப்பே இல்ல

பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவ 
25 வருஷமா பாசத்த ஊட்டி வளர்த்த அப்பாவ 
கூடவே ஒட்டி உறவாடி வளர்த்த தங்கச்சிய நினைக்கனும்… அவங்க வேதனைப்படகூடாது சந்தோஷமா இருக்கனும்… எல்லாம் ரைட்டு நீ நினைக்கிறதுல எந்த தப்பும்மில்ல…

ஆனா அதுகாக காதல மனசுகுள்ளயே வச்சு என்னயும் கொன்னும் உன்னை கொன்னுட்டு இருக்கியே அந்த கொடுமைய நான் எங்கனு போய் சொல்ல…

பொம்பளய்ங்க காதல் கடல் மாறி அதுல என்ன இருக்குனு தெரியாது எவ்ளோ ஆளமுனு புரியாது.

காதலுங்குறது புனிதமானது மா !
அது சாதி மதம் இனம் அவ்ளோ ஏன் சில சமயம் அன்புக்கும் பாசத்துக்கும் கூட அப்பாற்பட்டது…

அத பூட்டி வச்சு மறச்சு வாழ்க்க முழுக்க வேதனைப்பட்டு திரியுறதுக்கு தைரியமா சொல்லி எது வந்தாலும் பாத்துகலாமுனு சொல்லறது தான் நம்ம பண்ற காதலுக்கே மரியாதை.

இப்ப கூட உம்ம்ம்ம்ம்னு சொல்லு எங்க வீட்ல இருந்து கூட்டி உன் வீட்ட தேடி உன்ன பொன்னு கேக்க

அதுக்கும் முடியாதுனா ஒன்னும் சொல்றதுகில்ல வாழவே பயபடுறவகிட்ட வேற என்னத்த சொல்ல…

காதல் வாழும் !!
காதலர்கள் ஹ்ம்.”

இன்னும் தான் அவள் வார்த்தைகள் மௌனம் காத்தன இன்னும் அது எத்துனை காலம் தான் நீளுமோ ஆனால் கண்ணீர் மட்டும் தாரை தாரையாக சிந்தியது அந்த கண்ணீர் தான் பதில் கூறுமோ அந்த கண்ணீரின் பாஷை தான் யார் அறிவாரோ. மெல்லிய நிசப்தம் எதோ ஒன்று சொல்ல அவள் நா துடித்தது.

அவள் சொல்ல வாயெடுத்தாள் வானத்து மின்னல் வெட்டியது புயல் மையம் கொள்ள தயாரானது கீழ்வானம் சிவக்க கார்மேகங்கள்  மழை துளிகளை அள்ளி வாரியனைத்து வந்து கொட்ட காத்திருந்தன புயலும் மின்னலும் மையல் கொள்ளும் நேரம் தான் வந்தன வான் மழை பொங்கி நிலத்தில் விழுந்திட்ட இலைகளை நனைத்தன புயலும் மின்னலும் மையல் கொள்ளும் அழகை கண்டு சிலிர்த்தன.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

“கடைசியா என்ன தான்மா சொல்ற

சி திஸ் லாஸ்ட்”
“நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார்


ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க”

‘தடக் தடக் தடக் தடக்’

“லுக் மிஸ்டர் காருண்யா, ஏற்கனவே பதிமூனு வாய்தா!

இதான் லாஸ்ட் ஹியரிங் 
நோ ஃப்ர்தர் டிலே”

“எல்லாத்தயும் ஏற்கனவே சொல்லியாச்சு சார் எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல”

“இங்க பாரு தம்பி! உனக்கு விருப்பமில்ல அந்த பொண்ணு விரும்புதுல்ல

லெட் இட் பி முயூட்சுவல்

ஏற்கனவே உங்களுக்கு நிறைய டைம் கொடுத்தாச்சு, மனசு விட்டு பேசியும் தொலயமாட்றீங்க

இதுக்கு மேல இழுத்துட்டு இருக்க முடியாது”

‘தடக் தடக் தடக் தடக்’

“ம்ம் கொடுத்துருங்க சார், இது வரைக்கும் அவ என்கிட்ட எதும் கேட்டதில்ல நானாவும் எதும் கொடுத்ததில்ல

மனசுக்குள்ள இருக்குறத வெளிய வாய்விட்டு சொல்லிருந்தா நானே விலகிருந்துப்பேன்.

இப்பயும் ஒன்னுல்ல, கொடுத்துருங்க”

“ஹே சீன் கிரியேட் பண்ணாத ஒகே

டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்
‘ஃப்ராடு’ ‘மென் ஆர் ஃப்***ங் ஹைப்போக்ரைட்ஸ்”

“மா! இது கோர்ட், நான் ஜட்ச் ஒரு மட்டு மரியாதை இல்ல”

“சாரி சார்!”

“ஜீவனம்சம் எதும் வேனும்மா மா”

“சார் என் வாழ்கைய எனக்கு வாழ தெரியும் அதுக்கு யார் தயவும் தேவையில்ல காசும் தேவையில்ல”

“அவ்ளோ வெறுப்பு சார்,

சார் என் பையன்?”

“என் குழந்த என் கூட தான் இருப்பான், யார்கிட்டயும் தரமுடியாது”

“குழந்தைக்கு வயசென்ன மா”

“இரண்டு வயசு சார், நான் கொடுக்கமாட்டேன், நெவர்”

“இரண்டு வயசு ஒன்னும் பண்ணமுடியாது சட்டப்படி அம்மா கிட்ட தான் இருக்கனும். நீ வேனா மாசத்துக்கு ஒரு இரண்டு நாள் போய் பாத்துக்க”

“மாசத்துக்கு இரண்டு நாள் ம்ம்ம் என் பையன பாக்க இரண்டு நாள் மட்டும் தான் டைம்,

ம்ம்

ஒகே சார் தேங்க் யூ”

“சார் இதோட 113 ம்ம்” என்று டவாலி கூற.

“வாய மூடுற படுவா! ஹூம் இந்த பாவத்தலாம் எங்க போய் கழுவ போறேனோ” என்று அங்கலாய்த்தார் நீதிபதி.

‘தடக் தடக் தடக் தடக்’

வாழ்க்கையில் எத்தனையோ உரையாடல்களை அவள் நினைத்து ரசித்ததுண்டு.

காதுமடலின் ஓரத்தில் மென்காற்று வீசி பின் முடியின் கழுத்தோரம் முத்தமிட்டு காதல் மொழிகள் கிசு கிசுத்த உரையாடல்களை நினைத்து நினைத்து களித்த மனது

மறுஜென்மத்தின் நல்வேளையில் அடிவயிற்றின் பாரம் தாங்காது கால் விரித்து கதறி அழுத தருணத்தில் உச்சந்தலையில் முத்தமிட்டு ஆறுதல்  செப்பிய வாய்மொழிகளை நினைத்து கண்கள் கசிந்த மனது

ஆனால் மூவாண்டுகள் ஆனபோதும் இன்று இந்த உரையாடல்கள் திரும்ப திரும்ப அவள் காதுகளில் கேட்டு கொண்டு இருக்கிறது. அத்துனை கோபங்களும் தாபங்களும் தாங்கிய அந்த உரையாடலின் பரிசு வெறுமையான தனிமை வெண்மதிக்கு அது பிடித்து போனதா? அல்ல அவள் அதை பழகி கொண்டாளா! என்பதை அவளே அறியமாட்டாள் நினைத்து நினைத்து பேசும் மனதும் பேசிய வார்த்தைகளை நினைத்து கண்ணீர் விடும் மனதும் உளவியலுக்கே சாவல்விடும் பெண்ணின் குணம்.

இரயிலில் அன்று கூட்டம் அவ்வளவாக இல்லை ஜன்னலோரம் வீசும் காற்றை கூட தீண்ட முடியாமல் தவித்தாள் வெண்மதி.

இரயில் புறப்பட தயாரானது புதுமண தம்பதிகள் வெண்மதியின் எதிரே வந்து அமர்ந்தனர். கடைசி நிமிடத்தில் சட்டென இரயிலை பிடித்து வெண்மதி எதிரே அமர்ந்தான் ஜீவா. “சார்! ஏன் இப்படி அரக்க பரக்க வர்றீங்க சிலிப் ஆகிருந்தா” என புதுமாப்பிள்ளை கேட்டார்.

“சார் நீங்க வேற சென்னைல ப்ளைட்ட புடிக்கனும்”

“ஹோ அதுக்காக இப்படியா”

“என்ன சார் பன்றது அர்ஜன்ட்”

“எங்க சார் போறீங்க”

“வாழ்க்கைய தேடி சார்” என கூறி ஜன்னலோரம் பார்த்தான். வெண்மதி தலைசாய்ந்து கண்மூடி கிடந்தாள்.

மனதில் சில வண்ணத்துபூச்சிகள் சிறகடிக்க தொடங்கியது அவள் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான். அவள் காது மடல்களை, மூக்கின் வளைவுகளை அதில் மின்னிய மூக்குத்தியை, இதழ்களை, அவள் கழுத்தை சற்று கிழ் இறங்கி அவள் மடியை பார்த்து கொஞ்சம் கலங்கி போனான்.

தடக்கின் வேகம் குறைய சட்டென்று கண்முழித்து மடியில் கிடந்த கண்ணனை பத்துரபடித்தினாள் இது நடக்க சில விநாடிகள் எடுத்து கொண்ட நேரத்தில்.

புது மாப்பிள்ளைக்கு பதில் கிடைத்தது.

“சிங்கப்பூர் சார்” என்று.

“ஒஹோ”

“வோர்க்குகாக போறீங்களா”

“இல்ல சார் நிரந்திரமா போறேன்”

“ம்ம் என்ஜாய் சார், உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்ச”

“இல்ல சார்! ஐயம் ஹன்ட்ரட் பர்சன்ட் ப்யூர் சிங்கிள்,

நீங்க நீயூ மேரிடா வாழ்த்துகள், ஒரு சின்ன அட்வைஸ் மனசுவிட்டு பேசுங்க உள்ள போட்டு எதையும் மறைக்காதிங்க”

“சிங்கிள்னு சொன்னீங்க செம டிப்ஸ் கொடுக்கறீங்க”

இந்த உரையாடல் நீண்டு கொண்டே போனது அவ்வ போது ஜீவா கண்கள் வெண்மதியை வேட்டையாடியது.

வெண்மதிக்கு உள்ளம் சலசலக்க ஆரம்பித்து விம்மி வாய்விட்டு அழ துடித்தது. தன்னவனின் நினைவுகளை சுமக்கலானாள். அவன் தொடாத பாகம் தன்னுள் இல்லை என்றபோதும் எதோ ஒன்றை அவன் மறந்துபோனதை நினைத்து புழுங்கினாள். இனி அவனை செல்லுலாய்டுகளில் சிறைபிடித்த தருணங்கள் மட்டும்  தான் அவளுக்கு துணை. இதற்கு காரணம் அவனை மறக்கமுடியாத மனதும் வேறொரு ஆடவனை நினைக்க முடியாத மனதும் தான்.

‘தடக் தடக் தடக் தடக்’

சத்தத்தின் வேகம் தான் சற்று குறைந்தது ஆனால் மனதில் ஏற்பட்ட சத்தத்தை தான் அடக்க முடியவில்லை ஏதோ ஒரு உணர்வு மனதின் சுவரோரத்தில் அரித்து கொண்டிருந்தது இப்படியே தான் இந்த பயணம் தொடர்ந்திடாதா  வார்த்தைகள் மௌனித்து கண்கள் பேசி கலந்திடாதா என்று துடித்தாள். தூரத்து பார்வையின் சல்லாபம் கூட அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும்  கிடைத்ததில்லையே என மனம் ஏங்கியது ஆக்ஸிஜன் கூட காதல் காற்றையே நுரையீரலுக்கு கடத்தி சென்றது நினைத்த பாகம் என்னதென்று தெரிந்திற்று ஆனால் அந்த வலித்த பாகத்தை  எங்ஙனம் போய் தேடுவது வலித்த மனதிற்கு எப்படி தான் மருத்துவம் பார்ப்பது. எங்கு ௐளிந்து கொண்டு உயிரை உறுவி எடுக்கிறாய் என்று மனக்குரல் மனதிடம் கேட்டது, அதற்கு மனது எப்படி பதில் கூறமுடியும்!.

எல்லோரும் இறங்கிவிட்டார்கள் அவனும் தான், இரயில் கூட அடுத்த பயணத்திற்கு தயாராகிவிட்டது பாவம் அந்த சண்டாளிக்கு தான் நிலை கொள்ளவில்லை. இரயிலின் ஜன்னல் ஓரம் அவன் முகம் தெரிந்திட அள்ளி மாரனைத்து ஓடி வந்தாள் இரயிலின் படிகளில் நின்று கண்களை உலவவிட்டாள் அதோ அகபட்டுவிட்டான் ! அப்படியே சிறைபிடித்திட மாட்டோமா என்று வலித்த பாகம் ஏங்கியது அது முடியுமா!.

மெள்ள அருகில் வந்து அவள் வாயெடுப்பதற்குள்ளே விழித்த கண்ணன் அழைத்தான் “அப்பா! அப்பா!” என்று.

கொஞ்சம் மகிழ்ச்சி தான் இருந்தும் மௌனித்து நின்றான் அள்ளி அணைக்க கைகள் துடித்தது நடுவில் தடுத்து பறித்தாள் வெண்மதியின் தாய், கண்கள் கலங்கியது. வெண்மதியின் கண்களை பார்த்தான் கண்களில் சம்பாஷனை நிகழ்ந்தது வார்த்தைகள் விடுமுறை எடுத்து கொண்டது மொழிகள் காலவரையின்றி மௌனமானது. கண்கள் பேசிக்கொண்டே இருந்தன. இரயில் புறப்பட ஆயத்தமானது. தண்டவாளங்கள் திசை மாற காத்துகொண்டிருந்தது. இப்போதாவது வாய்விட்டு ‘நீ எனக்கு வேனும்’ என்று சொல்வாளா என சந்திப்பில் விடைபெறும் இரயில்கள் கூட அதிசய்த்து இருந்தது. பாதகத்தி சொல்லாமலே நிற்கிறாள் என கோபங்கொண்டு கிளம்பியது. ஜீவாவின் கண்கள் பரபரத்தன இரயிலை பிடிக்க மூளை உத்தரவிட்டது வெண்மதியின் கரங்களை பற்ற நெஞ்சம் 
சொன்னது. நாவும் சதி செய்தது ‘சொல்லி தொலயடா !’ என உருவமில்லா ஒரு குரல் கூச்சலிட்டது இருந்தும் இருவர் மனதிலும் அந்த உடன்படிக்கை வாசிக்கப்பட்டது.

“ஜீவகாருண்யாவுக்கும் வெண்மதிக்கும் செய்யப்பட்ட விவாகத்தை சட்டப்படி இந்த கோர்ட்டு ரத்து செய்கிறது”

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

காலனை கவியில் கதறவைத்த கவிஞன்

காலனை கவியில் கதறவைத்த கவிஞன்

நெய்யிட்டு மீசை வளர்த்தாய்

கவியிட்டு தமிழை வளர்த்தாய்
தேடிச்சோறு நிதம் தின்ன மறுத்தாயோ…
காலனையும் புல்லென மதித்தாயே 
செல்லமாவை எண்ணி காலங்கழித்தாயே….
​‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவனின் ஆக்கங்களை நிறுத்திவிட முடியாது. சமூக ஆர்வலன், பத்திரிகையாளன், எழுத்தாளன், பாடலாசிரியன், சுதந்திரப் போராட்ட வீரன், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவன், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என பன்முகத்தன்மைகொண்ட தமிழன், பாரதி. இந்திய விடுதலைப் போரில் இவனின் தமிழ் பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை `தேசிய கவி’ எனப் போற்றிப் புகழ்ந்தனர். தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் மிகமுக்கிய இடத்தைப் பிடித்தவன் இந்த மீசைக்கவிஞன்

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இவனின் ஒவ்வொரு வார்த்தையும் ஆற்றல்மிக்கதாகவும் அக்னிக்குஞ்சுகளாவும் எழுச்சி கண்டன. குறிப்பாக, சுதந்திரப் போராட்டத்தின்போது இவரின் கருத்துகளும் கட்டுரைகளும் உணர்ச்சிப் பிழம்பாகவும், காட்டுக் கனலாகவும் எழுந்து விடுதலை உணர்வை உலகம் முழுக்க பறைசாற்றின. சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையான தமிழில் கவி புனைந்து கட்டுரைகள் எழுதி, மக்கள் மத்தியில் விடுதலை விழிப்பு உணர்வை உருவாக்கியதில் பாரதி, பார் போற்றும் கவிஞரானார். இவரின் எழுச்சிமிகு உரையில் தமிழர்கள் விழிந்தெழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர், பாரதியின் பல்வேறு படைப்புகளுக்குத் தடைவிதித்து, அவரை சிறையில் அடைத்தனர்.

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன்முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. ‘சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

பாரதிக்கு பத்திரிகை குரு ‘தி இந்து’ ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் ஆசான், திலகர். ஆன்மிக வழிகாட்டி, அரவிந்தர். பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி!
தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும், ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. ‘ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்!

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து ‘பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்!

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்

கனகலிங்கம்நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிவித்தார். பாரதி பூணூல் அணிய மாட்டார். ‘பூணூலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது!

கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

“மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்” என்று இவர் சொன்னபோது, “கூட்டத்தை மறுநாளுக்கு மாற்ற முடியுமா?” என்று கேட்டார் காந்தி. “அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி” என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந் தார் காந்தி. “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலை யில் அழைத்துச் செல்வார். ‘பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், ‘நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். போலீஸ் விசாரணையின்போது, ‘நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?’ என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது. தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந் தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க… அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் ‘கோயில் யானை’ என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

‘ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20-க்கும் குறைவானவர்களே

தமிழ் இலக்கியம் தத்தெடுத்துக்கொண்ட அந்த மீசைக் கவிஞன், தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் மட்டுமல்லாது, அகில உலக இலக்கிய ஆர்வலர்களின் மூத்த மகனாக, தமிழ் மொழியின் தலைமகனாக விளங்கியது காலம் என்கிற காலனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லைபோலும். பாரதியின் காலத்தைச் சுருக்க எத்தனித்த காலன், யானை வடிவில் உருவெடுத்து தமிழ் போற்றும் நல்லுலகத்திடமிருந்து பாரதியைப் பிடிங்கிச் சென்றான். ஆம், சூழ்நிலை காரணமாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் தமிழ் உலகைவிட்டு பிரிந்தது பாரதி என்கிற சுப்பிரமணியனின் உயிர்.

வாரணம் மிதித்தா எம்பாரதி இறந்தான்

காற்று வெளியிடையில் காதல் மொழி பேசியவள் 

வார்த்தை தவறிவிட்டதால் அல்லவா இறந்தான்…

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

– ரணதீரன் புகழேந்தி

Advertisements

இலக்கியத்தின் இலக்கணம் சுஜாதா

இலக்கியத்தின் இலக்கணம் சுஜாதா

”தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது” – இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர், எழுத்தாளர் சுஜாதா. 

இலக்கியங்களுக்குள் கோலோச்சியிருந்த எழுத்துகளை, தன் கற்பனையாலும் சிந்தனையாலும் நவீன உலகுக்குள் கொண்டுவந்து, இளைஞர்களுக்கு நளினம் பாய்ச்சியவர், சுஜாதா. அறுபதுகளில் ஆரம்பித்த அவருடைய எழுத்துப் பயணம், அவர் இறக்கும்வரை தொடர்ந்தது. கி.ரங்கராஜன் என்னும் இயற்பெயர்கொண்ட சுஜாதா, தன் மனைவியின் பெயரையே புனைபெயராக்கிக்கொண்டார். யாரும் பயன்படுத்தாத ஒரு புதிய மொழிநடையையும் கருப்பொருள்கள்கொண்டு எழுதுவதையும் அவர் உருவாக்கினார். அறிவியலுக்கும், இலக்கியத்துக்கும் புதிய பங்களிப்பைத் தந்தார். அவருடைய எழுத்து, தமிழுக்கு ஒரு பாய்ச்சல் என்றால் மிகையாகாது.

சிறுகதைக்கு இலக்கணம்!

”இன்றைக்கு எல்லாரும் ஒப்புக்கொள்ளும்படியாகச் சிறுகதையை அறுதியிட்டால், ‘சின்னதாகச் சொல்லப்பட்ட கதை’.  அவ்வளவுதான்… வேறு எந்த விதிகள்  இருந்தும் அதன் வீச்சைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை. ‘சின்னதாக’ என்பதும் ஓர் அளவுக்குத்தான்” என்று சிறுகதைக்குச் சின்னதாக இலக்கணம் சொல்லும் சுஜாதா, ‘ஒரு சிறுகதை, எப்படி இருக்க வேண்டும்’ என்பதை இப்படி விவரிக்கிறார்.

”எனக்குத் தெரிந்தவரை ஒரேயொரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. நல்ல சிறுகதை என்பது, சிறிதாகச் சிறப்பாக விவரிக்கப்பட்ட கதை. சிறிதாக என்றால், சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லலாம் என்று குத்துமதிப்பாகக்கொள்ளலாம். நூறு பக்கம் இருந்தால், அதைச் சிறுகதை என்று ஒப்புக்கொள்வது கடினம். அதேபோல், ஒரு பக்கத்தில் இருந்தால்… அது, கதைச் சுருக்கம். நான்கு வரிகளுக்குக் கீழிருந்தால் கவிதையாகச் சொல்லிவிடலாம். சில நேரங்களில், சில கட்டுரைகளைக்கூடச் சிறுகதையாகக் கருதலாம். கதை, சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள். ஒரு கதை, ஜீவித்திருக்க… அது, சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம்; நூற்றாண்டுக்காலத்தையோ…  சில நிமிஷங்களையோ சொல்லலாம். கறுப்போ… சிவப்போ, ஏழையோ… பணக்காரனோ, வயதானவர்களோ… இளைஞர்களோ, நோயாளிகளோ… தர்மகர்த்தாக்களோ, விஞ்ஞானிகளோ… வேதாந்திகளோ எந்தக் கதாபாத்திரங்களும் தடையில்லை. மனிதர்களே இல்லாமல்கூட கதை சொல்லலாம்; கண்ணீர் வரச் சொல்லலாம்; சிரிக்கச்சிரிக்கச் சொல்லலாம். கோபம், ஆர்வம், வெறுப்பு போன்ற ஒன்பதில் ஏதேனும் ஒன்று வரும் அளவுக்கு ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.”

‘கணேஷ் – வசந்த்’ கதாபாத்திரங்கள்!

அவர் சொன்ன சிறுகதைக்கான இலக்கணத்தை அனைவரும் பின்பற்றியதால்தானோ என்னவோ தெரியவில்லை, இன்று அவர் வழியில் ஆயிரம் சிறுகதை எழுத்தாளர்கள் முளைத்துள்ளார்கள். ”சுஜாதாவைப் பற்றியும், அவருடைய எழுத்துகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்” என்று  அவர் வழியிலேயே அறிவியல் புனைவுக் கதைகள் எழுதிவரும் அவருடைய பரமவிசிறியும், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஒருவரிடம் பேசினோம். ”நறுக்…நறுக்கான வார்த்தைகளையும், சட்… சட்டெனச் சொல்வதையும் அவர் கடைபிடித்தார். சங்க இலக்கியங்களுக்கும், திருக்குறளுக்கும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையான முறையில் உரை எழுதியுள்ளார்.

சின்னச்சின்ன வார்த்தைகளைக்கொண்டு எளிமையாக எழுதினார். உதாரணத்துக்கு, ‘இறங்கினான்’ என்ற வார்த்தையை ஒவ்வொரு வரியாக… அதாவது, ஓர் எழுத்தை மட்டும் வரியாகப் போட்டு ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதும் புதுமையைக் கையாண்டார். நிறைய விஞ்ஞானக் கதைகளையும், துப்பறியும் கதைகளையும் எழுதினார். துப்பறியும் கதைகளில், ‘கணேஷ் – வசந்த்’ என்கிற இரண்டு கதாபாத்திரங்களைவைத்து கதை எழுதியிருப்பார். ‘கணேஷ் – வசந்த்’ கதை என்றாலே, அந்தக் காலத்தில் பிரபல வார பத்திரிகைகளின் விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டும். கணேஷும், வசந்த்தும் சம்பந்தப்பட்ட ஒரு கதையில், இருவருக்கும் சண்டை வந்து பிரிந்துபோகும்படியான சூழ்நிலை உருவாகும். இதைப் படித்த அவர்களுடைய வாசகர்கள் துடித்துப்போனதுடன், சுஜாதாவுக்கு போன் செய்து முடிவை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ‘அவர்கள் பிரியமாட்டார்கள்’ என்று அவர் சொன்னபிறகே, அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. அவருடைய மற்றொரு கதையில், வசந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அப்போதும் இதேபோன்று பிரச்னை எழுந்தது.

‘ஏன், எதற்கு, எப்படி?’

கணேஷ் – வசந்த்தைப் போன்று அறிவியல் கதைகளில் ஆத்மா – நித்யா என்ற கதாபாத்திரங்களை உருவாக்கினார். அந்தக் கதைகளில் செவ்வாய்க்கிரகத்தைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார். ஆனால், நம் பிரச்னைகளை அறிவியல் மூலமாக உணர்த்தியிருப்பார். திருப்பதியைப் பற்றி ஒரு கதை எழுதியிருப்பார். அதில், வேற்றுக்கிரகவாசிகளிடம் திருப்பதியைச் சுற்றிக்காட்டும் நபர், ஒரு கடலைக் காண்பித்து… ‘இதுதான் திருப்பதி, இதைக் கும்பிட்டுக்கோங்க’ என்று சொல்வார். காரணம், இயற்கை மற்றும் அறிவியலால் திருப்பதி கடலுக்குள் மூழ்கியதாகத் தன் கற்பனையைப் பதிவுசெய்திருப்பார். அவர் எழுதிய அறிவியல் கதைகளில், ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ போன்றவை மிகவும் பிரபலமானவை. இவையிரண்டும் ‘ஆனந்த விகடனி’ல் வெளியானவை. இதுதவிர, அறிவியல் கேள்வி – பதில்கள் பற்றி, ‘ஏன், எதற்கு, எப்படி’ என்கிற தலைப்பில், ‘ஜூனியர் விகடனி’ல் ஒரு தொடர் எழுதினார். இதை வாசகர்கள் வெறிகொண்டு படித்தனர். ‘அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இப்படியான ஒருமுறையில் எழுதுகிறார்கள்’ என புதுப்புது எழுத்தாளர்களை அவர் உருவாக்கினார். ஒருமுறை தொலைக்காட்சி நேர்காணலின்போது, வாசகர்கள் அவரிடம் பலவாறு கேள்வி கேட்டனர். அவற்றுக்கு எல்லாம் மிகவும் பொறுமையாக விடையளித்த அவர், நிகழ்ச்சியின் முடிவில், ‘இதுவரை நீங்க என்னைக் கிழிகிழினு கிழிச்சதுக்கு நன்றி’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லிவிட்டுச் சென்றாராம்” என்றார், சுவைபட.

”எழுத சலித்துக்கொண்டதில்லை!”

”உண்மையில், என் சிந்தனையும் அவருடைய கதை சித்தரிப்பும் ஒப்பாகவில்லை. காரணம், தன்னுடைய கதைகளில் புதுமையான சிந்தனை இருக்க வேண்டும் என விரும்பினார். நான் அப்படியில்லை. மிகவும் பழமையான சிந்தனைகொண்டவள். திருமணமான புதிதில், அவரது கதையை விமர்சனம்செய்தது உண்டு. பின்னாளில் அதை விட்டுவிட்டேன். அவரைப் பொறுத்தவரையில் தனக்குள்ளேயே வாழ்ந்தவர்; உணர்ச்சிகளைப் பெரும்பாலும் வெளியே காட்டாதவர்; அவர் எழுதிய கதைகளைப் பொறுத்தவரை… ஒரு கர்த்தாவாக மட்டுமே பேசுவார்; விருப்புவெறுப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்; எதையும், எப்போதும் வெளியே சொல்லமாட்டார். கதை பற்றிய விஷயமும் அதுபோல்தான். என்ன எழுதுகிறார், எதைப் படமாக எடுக்கிறார்கள் என எதையும் பகிர்ந்துகொள்ள மாட்டார். என்றுமே அவர், எழுத்துப் பணியில் சலித்துக்கொண்டதில்லை. எழுத ஆரம்பித்துவிட்டால்… அவருக்கு சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டியதில்லை. எழுதுவது , படிப்பது… இவை இருந்தால் போதும். ‘சாகும்வரை எழுதிக்கொண்டிருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டார். அதுபோலத்தான் நடந்தது” என்று தன் கணவரின் குணங்களை, ‘விகட’னின் நேர்காணலின்போது ஒருமுறை சொல்லியிருந்தார் அவர் மனைவி சுஜாதா.

”நான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலவில்லை. அவற்றை, ஒழுங்காக விவரிப்பதில்தான்… சொல்வதில்தான் அக்கறை காட்டியுள்ளேன்” என்று சொல்லும் சுஜாதா, ”ஒரு வாசகன், தனக்குப் பிடித்தமான எழுத்தாளனை… நண்பனைப்போலத் தேர்ந்தெடுக்கிறான். காரணம், அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது” என்று அவர் சொன்னதால்தான்…  இறந்த பிறகும் இன்றைய இளம் தலைமுறையினரின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

”மொத்தத்தில் சிறுகதை என்பது, அற்புத கணத்தை நிரந்தரமாக்கும் ரசவாதம்” என்று சுஜாதா சொன்னது எத்தனை உண்மை?

இலக்கியம் கடத்துகிறேன்!

இளம் தமிழ் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் இரண்டு வகை. ‘சுஜாதா மாதிரியே எழுதறீங்க…’, ‘சுஜாதா மாதிரி இல்லை’. விசேஷம் என்னவென்றால், இரண்டுக்குமே சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சந்தோஷமாகப் புன்னகைத்து விடுவதுதான்!

”இவர் தமிழ் எழுத்தாளர்…”

”நல்லது… சாப்பாட்டுக்கு என்ன பண்றார்?” என்பது போன்ற உரையாடலுக்கு வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கி, எழுத்தாள சாதிக்குச் சமூக அந்தஸ்து வாங்கிக்கொடுத்தவர், சுஜாதா. உள்ளூரில் இருந்தால் சொல் தொகுப்பில் (Word Processor) தன் படைப்புகளை அடித்து விடுகிறார். தூரதேசம் போனால் ‘மோடம்’ உபயோகித்து அனுப்பிவிடுகிறார். ‘கலைஞர்கள் அறிவியல் எதிரிகள்’ என்கிற வசையை ஒழித்தவர். அறிவியல் புனைகதைகளைத் தமிழில் பிரபலப்படுத்திய, புனைகதையல்லாத அறிவியல் கட்டுரைகளுக்கு மத்திய அரசு விருது வென்ற தமிழர். மனதைப் பாதிக்கும் எந்தச் சம்பவம் எப்போது நடந்தாலும், அதுபோல் ஒன்றைப் பற்றி சுஜாதா ஏற்கெனவே எழுதியிருப்பது நினைவுக்குவரும். முன்பு சென்னையிலும் போன வாரம் கல்கத்தாவிலும் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் எரிந்துபோனபோது இவருடைய ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ ஞாபகம் வந்தது.

பிரபலமாகாத பிற இலக்கியவாதிகளைத் தன்னுடைய ‘வாசக வங்கி’க்கு அறிமுகப்படுத்துவதை நியதியாகவே கடைப்பிடித்துவருபவர். ‘தீவிர இலக்கியத்துக்கும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளுக்கும் இடையில் பாலம் போட்டு நல்ல இலக்கியத்தைக் கொஞ்சமாகக் கடத்துகிறேன்’ என்று இவர் சொல்வது வெறும் அவையடக்கம்தான். ‘ரயில் பயணி ஒருவர் மாத நாவலைப் படித்துவிட்டு அதை வாழைப் பழத் தோல் போல ஜன்னலுக்கு வெளியே எறிவதைப் பார்த்த கையோடு, மாத நாவல் எழுதுவதை நிறுத்திக்கொண்டவர். பந்தயத்தில் கலந்து கொள்ளாமலேயே எப்போதும் முதல் இடம். ‘திறமையான கதை சொல்லி’ என்றாலும், கட்டுரை வாசிப்பையும் சுவாரஸ்யப்படுத்தியவர், ‘ரொம்ப நல்ல விஷயம் என்றால், அதிகபட்சம் மூன்று பக்கக் கட்டுரை எழுதலாம். குறைந்தபட்சம் என்று எதையும் சொல்லப்போவதில்லை’ என்கிறார்.

குறைந்தபட்சமாக மூன்று வாக்கியங்களில்கூட இவர் கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதிய கட்டுரைகள் வாசகர்களின் ஞாபகத்தில் பதிந்திருக்கின்றன. அவ்வப்போது மனதில் தோன்றி மறைந்த யோசனைகள் என்பதால், கணையாழிக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றுக்கு ‘நீர்க்குமிழிகள்’ என்று பெயர்வைத்தார். ஆனால், தீட்டிய எழுத்தால் அவை நிரந்தரம் பெற்று, அடுத்தடுத்த பதிப்புகளாக அச்சாகிக்கொண்டிருக்கின்றன.

இவருடைய மொத்தப் புத்தகங்களில் ‘நல்ல’ புத்தகங்கள் என்று குறிப்பிடப்போனால், ‘மணிமேகலைப் பிரசுரப் புத்தக விலைப் பட்டியல்’ மாதிரி ஆகிவிடும்.

”இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

”பாலுமகேந்திரா, ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதுதல், கல்லூரிகளுக்குப் போய் கம்ப்யூட்டர், இன்டர்நெட் பற்றி பிரசங்கம் செய்தல், சிங்கப்பூர் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனில் ‘சின்னக் குயிலி’ என்கிற கதை தொடராகிறது. புறநானூறுக்கு ‘புதுநானூறு’ என்கிற பெயரில் புதுக்கவிதை வடிவத்தில் உரையெழுதுகிறேன். அதற்கு விஸ்தாரமான ஒரு முன்னுரையும் யோசனையில் இருக்கிறது. விஜய் டி.வி-யில் ‘ஏன், எதற்கு, எப்படி’ மாதிரி அறிவியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”

”உங்கள் சமீப எழுத்துக்களில் ஒரு ‘திடுதிப்’ மாற்றம் தெரிகிறது. நீதி, அநீதி போன்ற மதிப்பீடுகள் சார்ந்து எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். இதை ‘சுஜாதாவின் வயோதிகம்’ என்று வர்ணிக்கலாமா?”

”திரும்பத் திரும்ப மர்மக் கதைகள் எழுதிக் கொண்டிருக்க எனக்குச் சம்மதம் இல்லை. அறிவியல், சமூக நெறிகள் சார்ந்து யோசிக்கிறேன் என்பது உண்மைதான். ‘என் கவலைகள் மாறுகின்றன’ என்பதைத்தான் இது குறிக்கிறது.”

‘கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருக்கும் சிறுவனை’ப் பார்த்து விசனப்படும்போது ‘கவிஞர்’ சுஜாதா;

‘தேசாயின் ஆட்சியிலே சந்தோஷம் – பேசாமல்

பாத்திரம் ஒன்றை எடுத்துக்    கொண்டெல்லோரும்

………………………………….. குடிக்க வாரும்’

என்று வெண்பாவில் விமர்சிக்கும்போது குறும்பர்;

‘நைலான் கயிற்றி’ல் ஆரம்பித்து ‘ரவுடியைச் சுட்ட குண்டுக்கு இலக்காகிச் செத்துப்போன இளைஞனின் அம்மாவைப் பேட்டி எடுக்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி செய்தியாளன்’ வரை நிகழ்காலச் சூட்டை இலக்கியத்தில் பதிவுசெய்யும் சமூகக் கதை எழுத்தாளர்.

‘புரவி’களைத் தலையில் தட்டி ‘குதிரை’களாக்கிய சரித்திரக் கதாசிரியர்; மேடை நாடகத்திலேயே ரசிகர்களை உணர்ச்சிவசப்படவைக்க முடிந்த நாடகக்காரர்; எஸ்.பி.முத்துராமனிலிருந்து பாரதிராஜா வழியாக மணிரத்னம் வரை வர முடிந்த ஒரே வசனகர்த்தா…

இவருடைய (கணேஷ்) வசந்த் பாணியில் பிரமித்துச் சொல்லப் போனால், ‘என்ன மாதிரி ஆளுய்யா இவரு
ஞாயிற்றுக்கிழமையானால் நான் தவறாமல் பார்ப்பது – ஹிண்டு பத்திரிகையின் ‘மேட்ரிமோனியல்’ விளம்பரங்களை. எனக்குக் கல்யாண உத்தேசம் எதுவும் இல்லை. அது 37 வருடங்களுக்கு முன்னேயே நிகழ்ந்து, சண்டை போட சப்ஜெக்ட் தீர்ந்துபோய் நானும் மனைவியும் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டோம்.

‘ஹிண்டு’வின் இந்தத் திருமணப் பக்கங்கள் நம் சமூகத்தின் உண்மையான குறிகாட்டி. இந்த நாட்டில் குறிப்பாகத் தென் நாட்டில் அத்தனை சாதிகளும் பத்திரமாக இருக்கின்றன என்பதற்கு அத்தாட்சி.

உ-ம்: ஆர்சி வன்னியர், தெலுகு புராட்டெஸ்டன்ட், கிறிஸ்டியன் நாடார், ரோமன் கத்தோலிக், கள்ளர் – முக்குலத்தோர், தமிழ் முஸ்லிம், சன்னி உருது, பலிஜா நாயுடு, கேரளைட் விஸ்வகர்மா, பாலக்காடு ஈழவா, தெலுகு யாதவா, வன்னியகுல ஷத்ரியா, வடமா பரத்வாஜா, வடகலை நைத்ரியகாசியபம்!

‘ஆயிரம் உண்டிங்கு சாதி – இது ஞாயிறுதோறும் தவறாத சேதி’ என்று பாரதி இப்போது பாடியிருப்பார்.

இதை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்வதைவிட, இதில் பொதிந்துள்ள சமூகவியல் செய்திகள்தாம் எனக்கு முக்கியமாகப்படுகின்றன.

 1. சாதி இல்லை என்கிற கொள்கை வீட்டுக்கு வெளியே மற்றவர்களுக்கு.
 2. தங்கள் குடும்பத்துக்கு வரும்போது மட்டும் சாதி பாராட்டுகிறார்கள். இதற்குப் பல யதார்த்தமான காரணங்கள் இருக்கலாம். உணவுப்பழக்கங்கள், மொழி, பெறப்போகும் பிள்ளைகள் குழப்பம் இல்லாமல் வளர்வது.
 3. பிராமணர்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கத்தினரும் சாதி பாராட்டுகிறார்கள் – கல்யாணம் என்று வரும்போது.
 4. ‘கிரீன்கார்டு ஹோல்டர்’ என்கிற புதிய சாதி உருவாகிக்கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு, மெடிக்கல் அட்மிஷன் – இவற்றுக்கும் சாதி தேவைப்படுவது வேறு விஷயம்.

இவற்றை மீறித்தான் கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன. அதுவும் வேறு விஷயம். அதன் பின்னும் சாதிகள் பத்திரமாக இருப்பதுதான் செய்தி.

உதாரணம்: Mother brahmin, father vanniyar, 26-poorattathy, multinational company, five figure salary, seeks graduate girl brahmin or pure vegetarian..

இந்த விளம்பரத்தில் ஒரு நாவலுக்குரிய சமாசாரமே இருக்கிறது.

‘உத்தரகாசியில் இமாலய மலையின் மடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்துபோனார்கள்’ என்ற செய்தி என்னை எப்படிப் பாதித்தது எனில், நான் அந்த ஜோஷிமட் – தேவப்ரயாக் போன்ற இடங்களுக்குப் போயிருந்தபோது, நல்லவேளை பூகம்பம் வராமல் தப்பித்தோம் என்பதுதான் முதல் எண்ணமாக இருந்தது. மரணம் நம்மைப் பாதிக்க, அருகாமை வேண்டும். ‘சார், நம்ம ராமசாமி தெரியும் இல்லை… தெனம் அரக்கீர, மொளக்கீர…னு கூவிக்கினே போவானே… லாரி அடிச்சு உயுந்து பூட்டான் சார்’ என்று என் வீட்டு வாட்ச்மேன் சொல்லும்போது உத்தரகாசியில் இறந்த நூறு பேரைவிட அதிகமாக அனுதாபம் ஏற்படுகிறது. மனதில் – அந்த ராமசாமியைக் கொண்டுவந்து, எப்போது கடைசியாகப் பார்த்தோம் என்று யோசித்து, போனால் போகிறது என்று அவனுக்குச் சில நல்ல குணங்கள் சேர்த்து ஓர் இரங்கல் தெரிவிக்கிறோம். ‘சண்டையே போட மாட்டான்… குடுக்கற காசை வாங்கிட்டு போயிருவான்யா.’

ஒவ்வொரு முறை மரணத்தைச் சந்திக்கும்போதும் அந்த ஆசாமி போய்விட்டான். நாம இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்கிற ஆறுதல்தான் அடித்தளத்தில் இயங்குகிறது.

பொய்கையாரின்,

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு, ஒண்பூ

உயரும் கதிரவனே நோக்கும் – உயிரும்

தருமனையே நோக்கும் – ஒண் தாமரையாள் கேள்வன்

ஒருவனையே நோக்கும் உணர்வு

என்ற வெண்பாவில் போல நதி கடலையே நோக்கிச் செல்லும். மலர் சூரியனையே நோக்கும். அதுபோல் உயிர், மரணத்தையே நோக்கும். உணர்வு அல்லது ஞானம் பகவானை இயல்பாக அறியும் என்று உயிரையும் உணர்வையும் பிரித்துவிட்டால், மரண பயம் போச்சு!

மூன்று சுவாரஸ்யமான கிரிக்கெட் மேட்ச்கள்.

தென் ஆப்பிரிக்காவும் நியூஸிலாந்தும் ஆடிய ஆட்டத்தில் கேர்ஸ்டன் கடைசிப் பந்தில் நாலு ரன் எடுக்க வேண்டியிருந்தது. சிக்ஸர் அடித்து முடித்தார்.

லாரா தனியாக ஆஸ்திரேலியாவை எதிர்த்து, டெஸ்ட் மேட்ச்சில் சதம் அடித்து வென்றார்.

ஜடேஜா கேப்டனாக இருந்து சதம் அடித்து இலங்கையை வென்றது நிறைவாக இருந்தது.

ஆனால், உலகக் கோப்பை இந்தியாவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இன்றைய தேதிக்கு மிகச் சிறப்பாக ஆடும் இரண்டு அணிகள் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காதான்.

பாகிஸ்தானின் ஷோயப் அக்தர்தான் உலகத்திலேயே அதிவேகப் பந்து வீச்சாளர் என்கிறார்கள். வாஸிம் அக்ரம் நல்ல ‘வடிவத்தில்’ இருக்கிறார். உலகக் கோப்பையில் நாம் இருக்கும் பகுதியில் எல்லாப் பெரிய டீம்களும் இருக்கின்றன.

பொறுத்திருப்போம். ஓர் இந்தியன், தமிழ்நாடன் என்ற முறையில் சடகோபன் ரமேஷ், ராபின்சிங், டிராவிட் நன்றாக ஆட வேண்டும். டெண்டுல்கர் 18 ரன்னைத் தாண்ட வேண்டும். (அதன் பின் 90-ல்தான் கவனம் இழப்பார்.)

சிக்ஸர் அடிக்கக்கூடிய ஷார்ட் பிட்ச் பந்துகளை கும்ப்ளே திடீர் திடீரென்று போடக் கூடாது. கல்கத்தா ஈடன் கார்டன் போன்ற புல்வெளி பிட்ச்சில் இவர்கள் கோகோ கோலா, பெப்சி விளம்பரத்துக்குப் போகாமல் நன்றாகப் பழக வேண்டும் என்று நான்கூட, அரங்கனை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு கிரிக்கெட் பிரேமி என்ற ரீதியில் தென் ஆப்பிரிக்காதான் சிறந்த அணி என மதிப்பிடுகிறேன். அடுத்து பாகிஸ்தான். இங்கிலாந்துக்கு ‘நம்மாத்து’ சான்ஸ் இருக்கிறது. ஆனால், உலகக் கோப்பையை தென் ஆப்பிரிக்கா பெறுமா என்பது நிச்சயம் இல்லை. ஒரு நாள் கிரிக்கெட். அந்த நாள் யார் நன்றாக ஆடுகிறார்களோ, அவர்கள் அற்பமான பங்களாதேஷ் அணியாக இருந்தாலும், வெல்லலாம். இந்தியா 83-ல் அப்படித்தானே வந்தது. ஆகவே, ஜிம்பாப்வே கோப்பையை எம்பிப் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை. உலகக் கோப்பையை இந்தியா வென்றால், திருப்பதிக்கு யாரையாவது அழைத்துப் போய் மொட்டை அடித்துவைப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

—–

ஒரு தந்தை, ரூபாய் 5,000-க்கு தன் மூன்று வயதுப் பெண் குழந்தையை விற்றார். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இந்தத் தந்தை, போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளானவர். அதனால் தன் பெண் குழந்தையை ஒரு பெண் மூலம் அமிஞ்சிக்கரை ஏஜென்சிக்கு விற்றுவிட்டாராம்.

குழந்தையின் தாய், 3,500 ரூபாய் திருப்பிக் கொடுத்து பாக்கியைக் கூடியவிரைவில் தருகிறேன் என்று சொல்லி, குழந்தையை மீட்டார். 1,500 ரூபாய், போதைப்பொருள் வாங்கச் செலவாகிவிட்டதாம். போலீஸார் தந்தையைக் கைதுசெய்தபோது அவரிடம் மனைவியின் தங்க நகை சில இருந்தனவாம். இந்தச் செய்தியின் பரிதாபம் நம்மை உலுக்குகிறது.

எனக்குக் கீழ்க்காணும் சந்தேகங்கள்: எதற்காகப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்? அந்த அமிஞ்சிக்கரை ஏஜென்ட்டை என்ன செய்தார்கள்?

‘இங்கு வீட்டுமனை, தேக்குமரம், பழைய ஜன்னல்கள், பழைய பேப்பர், பால் பாக்கெட், போதைமருந்துக்கு அடிமையானவர்களின் குழந்தைகள் விற்கவும் வாங்கவும் படும். பெண் குழந்தைகள் கொண்டுவருபவர்களுக்கு ஒரு குபேர யந்திரம் இலவசம்’ என்று போர்டை மாட்டச் சொன்னார்களா? தெரிய வேண்டும். அடுத்து, அந்த அமிஞ்சிக்கரை ஏஜென்ட் என்ன வியாபாரம் செய்வதாக உத்தேசித்திருக்கிறாரோ?

——

16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்களை விழுங்கிக் கடத்தல்! கொழும்பில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த அகமது மொய்தீன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். கடத்தப்பட்ட ரத்தினக்கற்களின் எடை 475 கிராம். 27 ஆணுறைகளில் பொட்டலம் கட்டி அவற்றை அவர் விழுங்கியுள்ளார். விமான நிலையத்தில் இறங்கிய காயல்பட்டினத்தைச் சேர்ந்த மொய்தீன் மீது சந்தேகம் ஏற்பட்டது. எக்ஸ்ரே பரிசோதனையில் ரத்தினக் கற்கள் வயிற்றில் உள்ளது தெரிய வந்தது.

மொய்தீன் தன் பெயரை நூர் முகமது ஜமால் என்று பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விநோதமான சம்பவத்தில் எனக்குச் சில ஆதாரச் சந்தேகங்கள்.

 1. எக்ஸ்ரே பரிசோதனைக்குப் பின் எப்படி அந்தக் கற்கள் நீக்கப்பட்டன?
 2. ஆணுறைகள் வாங்கும்போது கடைக்காரர், அவரிடம் என்ன வினவியிருப்பார்?

”இருபத்தேழுங்களா?”

”ஆமாங்க…”

”ஒருத்தருக்கா…?”

”ஆமாங்க!”

”கை குடுங்க… என்னால ரெண்டு சமாளிக்க முடியலை.”

 1. பெயரை மாற்றிக்கொண்டவர் – மாற்றுப்பெயரையும் முஸ்லிம் பெயராகவே ஏன் வைத்துக்கொண்டார்? சடகோப ராமானுஜாச்சாரி என்று வைத்திருந்தால் ஒருவேளை சந்தேகம் வந்திருக்காதோ!

மொய்தீன் அல்லது நூர் முகமது ஜமால்பாய் இந்தியாவுக்கு வைரம் கடத்தச் சில சுலபமான வழிகள் இருக்கின்றனவே… கடைப்பிடிக்கவில்லையா? ஒரு சிறிய பெட்டியில் எடுத்து வந்திருக்கலாமே? எதற்கு விழுங்க வேண்டும்?

உதாரணம்:

அதிகாரி: பெட்டில என்னங்க?

மொய்தீன்: வைரக்கற்கள்ங்க…

அதிகாரி: என்ன மதிப்பு?

மொய்தீன்: 16 லட்சங்க.

அதிகாரி: இதெல்லாம் அனுமதி இல்லைங்க… ஸ்மக்ளிங்!

மொ: கொஞ்சம் பாத்துக்கங்க… காயல்பட்டினத்துல பெரிய குடும்பங்க.

அதி: 15 பர்சென்ட் வெட்டிட்டு எடுத்துக்கிட்டுப் போ…

மொய்: ஐயா, என் லாபமே 15 பர்சென்ட்-தானுங்களே… ஒரு லட்சம் கொடுத்துடறேங்க… வெலைவாசி என்ன?

அதி: ஏன்யா உனக்கு வெலைவாசின்னா… எனக்கு வெலைவாசி இல்லையா?

இந்த முறையை மொய்தீன் நிச்சயம் முயன்றிருப்பார். லட்சம் பெறாமல் தவிர்த்த சுங்க அதிகாரிக்கு ஒரு சபாஷ்!

——-

டிஷ்நெட் நிறுவனத்தின் அந்த இன்டர்நெட் விளம்பரம் இன்று வெளிவந்துள்ளது.

அதில் ‘மின்னம்பலம்’ என்னும் தமிழ் இணையச் செய்தித்தாள், வாரப் பத்திரிகை, இலக்கியக் கருவூலம், மின் வணிகம், மின்மருந்தகம் அவற்றையெல்லாம் தொடங்குவதில் அடியேனின் பங்கு இருக்கிறது.

பத்திரிகைத் துறையின் அடுத்த கட்டம் இது. இதை ஒரு ‘மின்’னோடி என்று சொல்லலாம்.

சம்பிரதாயப் பத்திரிகைக்கும் இன்டர்நெட் பத்திரிகைக்கும் முக்கியமான வித்தியாசம் – செய்தியைக் கணிப்பொறி மூலம் உள்ளிடும்போதே அது பிரசுரிக்கப்படுகிறது. பத்திரிகையில் அச்சுப்பிழை இருந்தால் திரும்ப வாங்கித் திருத்த முடியாது. இதில் திருத்தலாம்.

பாட்டுக் கேட்கலாம்… படத்தை இயங்க வைக்கலாம். கவிதைகள் படித்துக் காட்டலாம். கார்ட்டூன் போன்றவற்றுக்கு உயிர் கொடுக்கலாம். உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் பத்திரிகை ‘மின்’னேறிய அடுத்த நிமிஷமே பார்க்கலாம். அதாவது இன்டர்நெட் வசதியுள்ளவர்கள் பார்க்கலாம்.

இதற்கான புதிய சொற்பிரயோகங்களை அமைத்திருக்கிறோம். மின் ஏடு, மின் இதழ், மின் வணிகம், மின் சிரிப்பு…

இவை எல்லாவற்றையும்விட எனக்குப் பிடித்தது பேராசிரியர் தெய்வசுந்தரம் தேர்ந்தெடுத்தது – வேலை வாய்ப்புச் செய்திகளுக்கு மின் பணிக் காலம்!
பூமியில் நிகழ்வது எல்லாம் பெருமைப்படும்படியாக இல்லாததால், விண்வெளிக்குச் செல்லலாம்.

இன்சாட் 2E இந்திய செயற்கைக் கோள் ஆப்பிரிக்காவில் ‘குரு’வில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. ஹாசன் கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவர் டாக்டர் ரங்கராஜன் என்னைப் போல ஸ்ரீரங்கத்திலும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும் படித்தவர்.

அவருக்கும் அயராமல் உழைக்கும் எம்.சி.எஃப். கேந்திர வல்லுநர்களுக்கும் All the best!

 

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. 

>>>>> ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

>>> நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு ‘நைலான் ரதங்கள்’!

 

 

>>>>> முதல் சிறுகதை 1958-ல் ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. ‘கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்’ என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை ‘இடது ஓரத்தில்’ 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

 

>>> பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

 

>>>>> இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

 

>>> முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

 

 

>>>>> 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

 

>>> சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

 

>>>>> ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

 

>>> தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

 

 

>>>>> சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

 

>>> சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

 

>>>>> கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

 

>>> ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

 

>>>>> உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

 

>>> புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

 

 

>>>>> ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

 

>>> 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

 

>>>>> சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் பரபரப்பு பெற்றது!

 

 

>>> இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, ‘அம்மாவைப் பார்த்துக்கோ’ என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

 

>>>>> அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

 

>>> பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

 

 

>>>>> பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதுதான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

 

>>> கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

 

>>>>> சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா.

 

கிறிஸ்டோபர் நோலனின் சயின்ஸ் ஃபிக்‌ஷனான இன்டெர்ஸ்டெல்லரை  திரையில் பார்த்துக்கொண்டிருந்தேன். அறிவியல் ஆச்சர்யங்கள், பாசப்போராட்டங்கள் என இன்டெர்ஸ்டெல்லர் என்னமோ எனக்கு எழுத்தாளர் சுஜாதாவைதான் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது.

‘விண்வெளிக்கு சென்று திரும்பினான்

வயதாகிவிட்டது  காதலிக்கு’

– என்று எப்போதோ படித்த சுஜாதாவின் ஹைக்கூ,  படம் முழுக்கவே ஞாபகத்தில் இருந்தது. சமீபத்தில் தமிழில் வந்த இன்று நேற்று நாளை யில் விஞ்ஞானி ஒருவர் (படத்தில் அவர் காமெடியன்!) தானியங்கி காரை கண்டுபிடித்து,  சாலையில் ‘காப்பி… காப்பி’ என ரிமோட் சகிதம் வெள்ளோட்டம் பார்ப்பார். அது அச்சு அசல் சுஜாதாவின் வாட்டர் கார் விவகாரம் கதை நாயகன்  பிரின்சிபல், டாக்டர் ராகவானந்தாதான். உலக சினிமா அரங்கில் இந்தியாவுக்கு சயின்ஸ் –பிக்‌ஷன் இன்ட்ரோ கொடுத்த எந்திரன்,  சுஜாதாவின் செல்லக்குழந்தை!

இவையெல்லாம் வெறும் கற்பனையில் உதித்து, ஜால திரைக்கதையில் கை கால்கள் பொருத்தப்பட்ட மேஜிக்கல் சயின்ஸ் – பிக்‌ஷன் கிடையாது. எல்லாமும் உலக அறிவியல் ஆய்வாளர்கள் வருடக்கணக்கில் டெஸ்ட் ட்யூபும், வொயர் பண்டல்களுமாக தவம் கிடந்து கண்டுபிடித்த அறிவியல் ஆச்சர்யங்கள். ஆனால் அவை அத்தனையையும் தன் தலைமை செயலக மூளையால் பேனா முனைக்கு மாற்றி எழுத்துக்களாக்கியவர் எழுத்தாளர் சுஜாதா. 1980 களில் அவர் தமிழ் பத்திரிக்கை உலகில் நிகழ்த்தியது எல்லாம் பேனா கொண்டு நடத்திய சிலிக்கான் புரட்சி!

1980 களில் சுஜாதா கதையை படித்தவர்களுக்கு டச் ஸ்க்ரீன் ஃபோன்களும், எல்லா வேலையையுமே ஒரே மெஷின் செய்யும் என்ற சொல்லாடல்களும் கற்பனை உருவங்களாக நிச்சயம் பரிச்சயமாகியிருக்கும். கட்டுரைகள், கதைகளில் அறிவியல் சாதனங்களை சின்ன டாப்பிக்காக அல்லது வசனமாக பயன்படுத்திய சுஜாதா மொத்த அறிவியலையே  கதையாக்கியது, என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ வில். என் இனிய இயந்திரா கி.பி. 2020ல் நடக்கும்படி எழுதப்பட்ட பியூச்சரிஸ்ட் நாவல். மீண்டும் ஜீனோ அதன் சீக்வெல். இது எழுதப்பட்டது 1987ல்.

மெமரி சிப்கள், ஜீன் ஸ்டெம் செல்கள், ஹோலோகிராம், Heuristics என்ற விஞ்ஞான தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் ஹீரோ ஜீனோ. வெகுளியான நிலா, சர்வாதிகார ஜீவா, மனோ என சில கேரக்டர்களை கொண்டு மொத்த கதையுமே ஒரு சிந்தெடிக் கிராமத்தில் நடப்பதாக எழுதியிருப்பார். ஹீரோ ஜீனோ,  நாவல் முழுக்க ஐசக் அஸிமோவின் ரோபோ விதிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும்.

தானியங்கி கதவுகள், ஆக்சஸ் கார்டுகள், சி.சி.டி.வி கேமராக்களின் அடுத்த தலைமுறையான வி.வியும், லேசர் துப்பாக்கிகளும், காந்த கார்களும் கதை முழுக்கவே அதன் சயின்டிஃபிக் ஃபார்முலாக்களோடு சிந்தடிக் நகரத்தை வலம் வந்துக்கொண்டிருக்கும். நாம் இன்று பயன்படுத்தும் அத்தனை முன்னேறிய தொழில்நுட்பங்களும் ஏதோ ஒரு வகையில்  இக்கதையில் இடம்பெற்றிருக்கும்.  

சிலிக்கான் சில்லுப் புரட்சியாய் கணினி அறிவியலை தமிழ் இலக்கியத்தில், ஜனரஞ்சக எழுத்தில் சுமார் 170க்கும் மேற்பட்ட படைப்புகளின் வழியே  பதிவு செய்திருக்கிறார் சுஜாதா.

வரும் 16 ம் தேதி,  நாம் வாக்களிக்க பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கியவர் எழுத்தாளர் சுஜாதா!

எழுத்தாளர் சுஜாதா மறைந்த தினம் இன்று (27-02- 2008) . இன்றோடு அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன . எழுத்தாளர், வசன கர்த்தா , பொறியியலாளர் என பல முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு. அவரது புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. அவரது வசனங்கள் இன்னமும் மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும். அவர் இளைஞர்களுக்குச் சொன்ன  10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை. அவற்றை நினைவுகூர்வோமா?

 1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர் (அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
 3. மூன்று மணிக்குத் துவங்கும்  மதிய ஷோ  போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண  வேண்டிவரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்டதலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.
 4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
 5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்.
 6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள், இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித  மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.
 7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு  முக்கியம்.

8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

 1. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
 2. படுக்கப்போகும் முன் 10 நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில்  நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.

இந்த 10ல் தினம் ஒன்று என்று முயற்சிசெய்துதான் பாருங்களேன்…

சுஜாதா… இன்றைய இணைய உலகில், யார் இன்மையை நீங்கள் உணர்கிறீர்கள் என்று கேட்டால் சட்டென்று என் மனதில் தோன்றும் பெயர். “இல்லாதது நல்லதுதாண்டா. இருந்தா என்னையும் ட்ரோல் பண்ணிருப்பீங்க” என்ற அவரது கமென்ட்  அவர் இல்லாமலும் கேட்கிறது.

நண்பர் ஒருவர், தான் எழுதிய சிறுகதையை “கொஞ்சம் இம்ரூவ் பண்ணிக் கொடு” என்று சுஜாதாவிடம் கொடுக்கிறார். இவர் அதை முழுவதும் மாற்றி, திருத்தி எழுதிக் கொடுக்கிறார். அது நண்பன் பெயரில் வந்ததைக் கண்டு, நாமே எழுதலாமே என்று முயன்று ஒரு கதை எழுதி அனுப்புகிறார். “அதை எழுதும்போதுதான் எனக்கும் வார்த்தைகளைக் கோத்துவிளையாட முடியும் என்று கண்டுகொண்டேன். அப்படித்தான் எழுத்துத் துறைக்கு வந்தேன்” என்கிறார் சுஜாதா.

1963ல் முதல் சிறுகதை. அதற்குப் பிறகு நிற்காமல் ஓடிய குதிரை இது. எழுதாத துறைகள் இல்லை எனலாம். திருக்குறள், புறநாநூறு என்று இலக்கியங்கள் பற்றி எழுதியிருக்கிறார். கிட்னி ட்ரான்ஸ்ப்ளண்டேஷன் பற்றி நாவல் எழுதுகிறார். அதைப் படமாக்கும் விவாதத்தில், “டிஷ்யூ ரிஜக்‌ஷன்னா என்னன்னா..” என்று விஞ்ஞானம் பேசுகிறார். பீத்தோவனின் சிம்பனி பற்றி எழுதுகிறார். உலகப்படங்கள் பற்றி விவாதிக்கிறார். “இதெல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள்ல வந்ததுதானே.. உதாரணத்துக்கு..” என்று தாவுகிறார். லிமரிக் சொல்லிக் கொடுக்கிறார். கம்மிங்ஸ் (Cummings) கவிதைகள்தான் எனக்குப் பிடிக்கும் என்கிறார். பவுல்ஸ், லீகரி, வுட் ஹவுஸ், ஓ,ஹென்றி என்று ஆங்கில எழுத்தாளர்களைப் பற்றி எழுதிப் பரவலாக்குகிறார். எம்.டி. ராமநாதனின் சங்கீதம், ஓஸிபிஸாவின் ஜாஸ் இசை என்று கலந்து கட்டி அடிக்கிறார். இவர் ஒரு கவிதையைப் பாராட்டினால், அவர்மீது புகழ்வெளிச்சம் விழுந்து, அவரும் அதற்கு முயன்று உழைத்து முன்னேறுகிறார்.  நாற்பது வயதுக்கு மேல்தான் சினிமாவுக்குள் எட்டிப் பார்க்கிறார். ஆனாலும் திரைமொழியை தன் வசமாக்குகிறார்.

இவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு கார்ட்டூன். ஒரு சிறுவன், சுஜாதா போல மீசை வைத்துக் கொண்டிருக்க ஒரு வரி கமெண்ட்: ‘சுஜாதா மீசை வெச்சுகிட்டா மட்டும் எழுத்தாளனாய்டுவியா?’    

வெறும் வார்த்தை விளையாட்டுகள் அல்லாமல், கணினி அச்சுமுறையில் ப்ரிண்ட் ஆகிக் கொண்டிருந்த காலத்திலேயே பல புதுமைகளைச் செய்தவர். ஒரு கதையில் கதாபாத்திரம் மாடிப்படியில் இருந்து கீழே இறங்குவதை..

        ற

                ங்

                         கி

                                  னா

                                            ன் – என்று எழுதினார். இன்னொரு கதை, முடிவில் ‘இப்போது இந்தக் கதையின் ஆரம்ப வரிகளைப் படியுங்கள்’ என்றிருக்கும். முடிக்கிற இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கிற இடத்திற்கு வந்து.. தொடர்ந்து  இப்படி முடிவிலியாய் இருக்கும். மற்றொரு கதையில் ஒருவன் வீட்டுக்குள் வருவான்.

என்று வீட்டுக்குள்ளிருந்து குரல் வரும்..  அதற்கு வீட்டுக்குள் வருபவனின் பதில் இப்படி இருக்கும்: “அதிருக்கட்டும்.. இன்னும் சிரசாசனம் பண்ணி முடிக்கலயா நீ?”

அதுதான் சுஜாதா.

இவருக்கும் வாசகர்களுமான பிணைப்பு அலாதியானது.  காகிதச் சங்கிலிகள் நாவலைப் படித்துவிட்டு, சிறுநீரக அறுவைசிகிச்சை பற்றி, தொலைபேசியில் இவரிடம் அரை மணிநேரம் பேசி தெளிவு பெறுகிறார் ஒரு வாசகர்.  மிடில் ஈஸ்ட் விமானநிலையத்தில் இவரை அடையாளம் கண்டுகொண்ட வாசகர் ஒருவர், ஓடிப்போய் அங்கேயே ஒரு ரேடியோவும், டேப் ரெகார்டரும் இணைந்த  ‘டூ-இன்- ஒன்’ வாங்கிப் பரிசாய்த் திணிக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையை மையமாக வைத்து எழுதிய ‘நகரம்’ சிறுகதையைப் படித்துவிட்டு அந்த மருத்துவமனையின் டீன், இவரிடம் கடிதம் எழுதி விசாரிக்கிறார். . ‘வஸந்தைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். எங்கிருக்கிறான் அவன்?” என்று சுஜாதாவுக்கு வந்த தந்திகள் நிறைய. பெங்களூருவில் உள்ள பார்க் ஒன்றில் சுஜாதாவும், கமல்ஹாசனும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,  வந்த இளைஞரிடம், ‘கமல் உங்க ஆட்டோகிராஃபுக்காக வெய்ட் பண்றார்” என்றிருக்கிறார் சுஜாதா. அந்த இளைஞர், ‘இல்லை சார். எனக்கு உங்க ஆட்டோகிராப்தான் வேணும்” என்கிறார் சுஜாதாவிடம்.

இவர் எழுத்துக்கு சீரியஸான எதிர்ப்புகளும் நிறைய வந்ததுண்டு. இவரது நாவல் ஒன்றைப் படித்துவிட்டுத்தான் தன் தங்கை நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்தார் என்று அந்தப் பெண்ணின் அண்ணன் பெங்களூரு சென்று மிரட்டுகிறார். ஒரு நாவலில் இவரது கதாபாத்திரமான வஸந்த் குண்டடிபட, ‘அவனைக் காப்பாற்று… நீ வேண்டுமானால் போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொள்’ என்று ஒரு பெண் தந்தி அனுப்புகிறார். தொடர்கதையில்,  பிடிக்காத அத்தியாயம் வந்தால், இவருடைய கதையை, சுக்குநூறாகக் கிழித்து போஸ்டில் அனுப்புவார்கள். “வாங்கிப் படித்த அவருக்கு, நிச்சயம் கிழித்து அனுப்பவும் உரிமை உண்டு” என்பார் இவர். ஒருநாவலை நிறுத்தச் சொல்லி மிரட்டல் வர, நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி எழுதும்போது இப்படிச் சொல்கிறார்: ‘எனக்கு இடது கையில் எழுதிப் பழக்கம் இல்லை என்பதால் நிறுத்திக்கொண்டேன்”

இன்றைக்கு எழுதும் இளைய தலைமுறையிடம் எதாவது ஒரு வரியில், சிந்தனையில், உத்தியில் இருந்துகொண்டுதான் இருக்கிறார் சுஜாதா. சிறுகதை எழுத நிறைய உத்திகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்தார் சுஜாதா.

‘முதல் வரியிலேயே  வாசகனை கவருங்கள். ‘தலையில்லாத ஒரு ஆள் தெருவில் நடந்து வந்தான் என்று ஆரம்பியுங்கள். அடுத்தவரியில் ‘தலை என்றா சொன்னேன்.. தப்பு.. ஒரு விரல்தான் இல்லை’ என்று மாற்றிக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, ‘சார் தபால் என்ற குரலைக் கேட்ட சர்மா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு…’ என்று ஆரம்பித்தால், படிப்பவன் அடுத்தபக்கத்துக்குத் தாவிவிடுவான்.’

‘எதிர்படும் எல்லாரிடமும் கதை உண்டு. அதை உணருங்கள். உங்களைப் பார்த்ததும் சௌக்கியமா என்று கேட்கிறான். முழுசாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன சௌக்கியமா என்று கேள்வி என்று யோசித்து நூல் பிடித்தால், கதை பிறந்துவிடும்.’

இன்றைய கணினி யுகத்தில் ஏன் அவர் இன்மையை உணர்கிறேன் என்றால், இன்றைக்குப் பேசப்படும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் எளிய முறையில் அவரிடமிருந்து விளக்கங்கள் வந்து விழுந்திருக்கும்.  வாட்ஸப் வதந்திகளுக்கு சாட்டையடி பதில்கள் வந்திருக்கும். சட்டென்று தெறிக்கும் ட்விட்டுகள் இருந்திருக்கும். இவற்றின் எதிர்காலம் குறித்தும் பேசியிருப்பார். ஜிலேபி சுற்றும் வார்த்தை ஜாலமின்றி, எளிய முறையில் அறிவியலைக் கொண்டு சேர்த்திருப்பார்.

இவருக்கு எழுத்துதான் எல்லாம். யாரிடமாவது ஏதாவது பேசும்போது உருவாகிற சிறு பொறியை மூளைக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டே இருந்து, சரியான தருணத்தில் கதையாக்குவார். பலராலும் பாராட்டப்பட்ட, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ அப்படி உருவானதுதான். ‘ஒரு கிராமத்தில் நடைபெறும் மிஸ்ட்ரி ஒண்ணு எழுதுங்களேன்’ என்று பிரபலம் ஒருவர் சொல்ல, அதை மனதில் இருத்திக் கொண்டு, தொடர்கதையாக எழுதியதுதான் அந்த நாவல். அப்படி சுஜாதாவைக் கேட்டுக் கொண்ட பிரபலம்.. இளையராஜா.

என்னைப் போன்ற பலருக்கு,  என்றைக்கும்தான்.
 

Advertisements

ரகுமான் எனும் இசை ராவணண்

ரகுமான் எனும் இசை ராவணண்

சிரிக்க தெரியாத மனிதர்களை கூட காணலாம் ஆனால் இசைக்கு மயங்காத மனிதர்களை எங்கும் நாம் காணோம் அப்படி இருந்தால் மிருகத்தின் வகைப்பாட்டின் ஓரே இனமாக இருக்கலாம்.

நூற்றாண்டில் ஒரு நாயகன் தன் இசையால் மதி மயங்க செய்தான் கெஞ்ச செய்தான் இறக்க செய்தான்.

இசையெனும் விஷத்தை அனு அனுவாக ஊற்றி சுழல செய்தான். ஒரு இசை கலைஞனுக்கு ரசிகர்கள் உண்டு வெறியர்கள் உண்டு பக்தர்கள் ? உண்டு

ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி, தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று.

மேற்கத்திய இசை, கர்நாடக சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதைதான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே…’ என்று உருகவைப்பார், ‘போறாளே பொன்னுத்தாயி..’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோஜாவே…’யென கலங்கடிப்பார். இவரது இசை வெறும் சப்தம் அல்ல. அது உணர்வுகளின் வேறொரு பரிணாமம். அது தென்றலோடு சேர்ந்து வரும் மலர் வாசம். எளிமையே இவருக்கு அடையாளம். இவரே தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளம்


இசையை உண்டவர்

ரஹ்மான் இசையைப் பயிலவில்லை. சுவாசிக்கவில்லை. அவர் இசையைத்தான் உணவாய் உண்டார். இசையமைப்பாளரான தனது தந்தை முதல் படம் வெளியான நாளன்றே மறைந்துவிட, வறுமையின் பிடியில் வாடிய ரஹ்மானின் குடும்பம், அந்த இசைக்கருவிகளை விற்றே குடும்பம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இசை அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது. ஆனால் அதை தனது ஒவ்வொரு செல்களுக்கும் பாய்ச்சியவர் ரஹ்மான். வறுமையில் வேலை செய்துகொண்டே தனது இசைஞானத்தை வளர்த்துக் கொண்டார். டிரினிடி கல்லூரியின் ஸ்காலர்சிப்பால் இசை பயின்ற ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி போன்ற முன்னனி இசையமைப்பாளர்களின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டிக்கொண்டிருந்த ரஹ்மானை, 1992ம் ஆண்டு தனது ரோஜா படம் மூலம்  திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். முதல் படமே மாபெரும் வெற்றி. பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகனை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டின. அதன் விளைவு – முதல் படத்திற்கே தேசிய விருது பெற்று பட்டையைக்கிளப்பினார் ரஹ்மான். பாம்பே படத்திற்கு அவர் போட்டிருந்த பின்னணி இசை வெகு பிரசித்தி. 120 லட்சம் பிரதிகள் விற்றது இப்படத்தின் பாடல் கேசட்டுகள். அவ்விசையை பாலஸ்தீனியத்தின் ‘டிவைன் இன்டர்சேஞ்ச்’ படத்திலும், ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் நிகோலஸ் கேஜின் ‘லார்ட் ஆஃப் வார்’ படத்திலும் பயன்படுத்த,  உலகின் பார்வையில் பட்டது இந்த சென்னைப் புயல்.

1992 முதல் 2000 வரை தொடர்ந்து தமிழின் சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார் (1998ல் அவர் எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இசையமிக்கவில்லை).

https://youtu.be/MUzDXxbB8xA

எல்லயைக் கடந்த புயல்

தமிழில் மட்டும் நிற்கவில்லை ரஹ்மானின் வெற்றி. மொழிகள் கடந்து, எல்லைகள் கடந்து, தேசங்கள் கடந்து அவர் இசை ஒலித்தது. உலகின் மிகப்பெரிய இசைத்துறையான ஹாலிவுட் பக்கமும் வீசியது இந்தப் புயல். உலகின் பல நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார் ரஹ்மான். பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து பிரபு தேவா, ஷோபனா ஆகியோரை கொண்டு மாபெரும் இசை நிகழ்வை ரஹ்மான் நிகழ்த்த ‘மெட்ராஸ் மொசார்ட்’ என்று ரஹ்மானை அழைத்தது இசையுலகம். இசைத்துறையின் ஆஸ்கர் எனப்படும் கிராமி விருதையும் இரண்டு முறை கைப்பற்றி, அளப்பரிய சாதனை படைத்தார் ரஹ்மான்.


ஆஸ்கர் நாயகன்

கடைக்கோடி ஏழை இந்தியச் சிறுவனைப் பற்றிய ஹாலிவுட் படம் ‘ஸ்லம்டாக் மில்லியினர்’. படமே நம் நெஞ்சைக் கரைக்க,  அதன் உணர்வுப்பூர்வமான இசையால் உருக்கினார் ரஹ்மான். பல ஆண்டுகளாய் இந்தியன் ஏங்கிக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை இரு கைகளிலும் ஒவ்வொன்றாய்ப் பிடித்து “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிய அக்கணம் ஒவ்வொரு இந்தியனும் உச்சி முகர்ந்து போனான். திரைத்துரையின் மிகப்பெரிய மணிமகுடத்தைச் சூடிய முதல் தமிழனானார் ரஹ்மான். அதுமட்டுமின்றி கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வெல்ல, ஹாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநரானார் ஏ.ஆர்.ஆர்.

 

இன்று இந்தியாவைப் பற்றிப் பேசும்போது பின்னணியில் ‘ஜன கன மன…’ ஒலிக்கிறதோ இல்லையோ ‘ஜெய் ஹோ’வும், வந்தே மாதரமும் நிச்சயமும் ஒலிக்கும். அந்த அளவிற்கு அப்பாடல்களில் உயிர்ப்பைக் கூட்டியிருப்பார் ரஹ்மான். 2010ல் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான பாடலை இசையமைக்கும் பொறுப்பை தமிழக அரசு இவரிடம் கொடுத்தது. இவரது ஆளுமையைப் பயன்படுத்தி,  தனியாக அந்தப் பாடலை அவர் பதிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடகர்கள் மட்டுமின்றி,  சக இசையமைப்பாளர்களையும் அதில் ஈடுபடுத்தி மாபெரும் மனிதனாய் நின்றார். திரைப்படப் பாடல் செல்போனில் ரிங்டோனாக வைக்கப்படுவது சாதாரணம். ஆனால் அந்த செம்மொழிப் பாடலே பலரது செல்போனில் ரிங்டோனாய் ஒலிக்கிறது என்றால் அதுதான் ரஹ்மானின் மேஜிக்கல் டச். 

எளிமையின் சிகரம்:

எப்பேர்ப்பட்ட வெற்றியானாலும் அதை தன் கரங்கள் தாண்டி,  சிரம் செல்ல அனுமதிப்பதில்லை இவர். ஆஸ்கர் விழாவின் போது கூட “எனக்கு விருது கிடைக்காமலிருந்தாலும், என் தாயின் அன்பு குறையாது. எனக்கு அதுவே போதும்” என்று கூறியவர் ரஹ்மான். சிறிதும் நகைகள் அணிய விரும்பாதவர். தனது இசை சிறகுகள் விரித்துப் பறக்க வேண்டுமென்று இலவச இசைப் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழிப்பவர்.

ரஹ்மான் மிகவும் மெதுவாக இசையமைக்கும் பழக்கம் உடையவர். அதனால் சில இயக்குநர்கள் சங்கடப்பட்டதுண்டு. “நான் ஒவ்வொரு பாடலையும் ரசித்துதான் இசையமைப்பேன். அப்போதுதான் அதை சிறப்பாகக் கொடுக்கமுடியும்” என்று வெளிப்படையாகக் கூறியவர். மிகவும் இளகிய மனசுக்காரர் இவர்.  

ரஹ்மானின் வெற்றிகள் எளிதில் கிடைத்தவையல்ல. அவை வறுமையை வென்ற வெற்றிகள். காலத்தை வென்ற காவியங்கள். ஒருமுறை பாடகர் ஜேசுதாசிடம் ரஹ்மான் பற்றிக் கேட்டபோது, “அவர் மௌனத்திலிருந்து கூட இசையை உருவாக்குவார் என்றார்”. அதுதான் இசை உலகில் ரஹ்மானின் அடையாளம். யாரும் நிணைத்துப்பார்க்காத ஒன்றை முடித்துக் காண்பிப்பார் இந்த இசைப்புயல்.

 உலக மேடையில் இந்தியாவையும் தமிழையும் பெருமைப்படுத்தி,  சாதனைகளைத் தன் பின்னே காத்திருக்க வைத்திருக்கும் இந்த இசைப்புயல்,  தன் வலுவை இழக்காமல் உலகெங்கும் வீசிக்கொண்டேயிருக்கும்… வெற்றிகள் குவிந்த வண்ணம் இருக்கும்…!

ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்..

அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.


எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை.

பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்… லண்டன் இசைக்
கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.

ஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

“பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !” என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்


ஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.

இளம் வயதில் ‘சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.

தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர் மணிரத்னம் மூலம் ‘ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால் சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

சின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,”பிடிக்கலையா அம்மா ?” என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா

 “காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் ” என்றும் பதிவு செய்திருக்கிறார்.

ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக ‘ரோஜா’வை அறிவித்தது. ‘மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.

‘பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.

1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் ‘வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.

ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.

இளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாக
நகைகளை அணிய மாட்டார்

ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு  முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது “எனக்கொரு அன்னை இருக்கின்றாள்” என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்

‘அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, ‘மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’
எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.

அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்கவைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்

‘வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக ‘வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.

ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான்
பிறந்த நாள்.

ரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. “லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்”  என்று சொன்னார்

இசையை… ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ”இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை” என்பார்.

வெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான்
என்பார். ஈகோ என்பதை ‘edging god out !’ என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !” என்பது ரஹ்மானின் வாக்குமூலம்

காற்றோடு கலந்தாலும் அவன் புல்லாங்குழல் வழியே சுற்றி சுழன்று வழிந்திட வேண்டும்…

– ரணதீரன் புகழேந்தி


Advertisements

ஜெயகாந்தன் எனும் எழுத்து சிங்கம்

ஜெயகாந்தன் எனும் எழுத்து சிங்கம்

தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை   என்றால் அது ஜெயகாந்தனின் எழுத்துகள் தான். 

 எத்துனையோ பேரை எழுவித்தவர் எனையும் எழுத வைத்தார் என்று சொன்னால் அதை நிச்சயமாக அவர் மறுத்திருப்பார் ஆம் ஒரு முறை ஒரு எழுத்தாளர் “உங்களால் தான் நான் எழுத வந்தேன்” என்று சொன்ன போது அவர் உதிர்த்தது.
“டேய் நான் சிகரெட் பிடிக்கிறத பார்த்து நீ பிடிக்கிறதுக்குலாம் நான் பொறுப்பாக முடியாது நீ எழுத வந்ததுக்கு என்ன கூட்டு சேர்க்காத”

ஆம் அவர் தான் ஜெயகாந்தன். அந்த பொக்கிஷத்தின் சில பொக்கிஷ குறிப்புகளை விகடன் வாயிலாக தொகுத்துள்ளேன் உங்களுக்காக.

மிழ் இலக்கிய உலகில் வேறு எந்த எழுத்தாளரும் செய்யாத சாதனையை எழுத்தாளர் ஜெயகாந்தன் செய்தார். உலகில் வேறு எந்த எழுத்தாளரும் செய்திராத சாதனை என்று இதை நான் நினைக்கிறேன்.

இவர் எழுதிய கதைகளைப் போலவே இவரைப் பற்றிய கதைகளும் பிரபலம். கோபக்காரர், கர்வமானவர், ஜே.கே. முன் யாரும் நின்று பேச முடியாது… என இவருக்குப் பல பிம்பங்கள் உண்டு. 

‘நான் இனிமேல் எழுதப் போவதில்லை’ என்று ஜெ.கே. அறிவித்தார். சுமார் கால் நூற்றாண்டுகளாக எந்தப் படைப்பிலக்கியத்தையும் அவர் செய்யவில்லை. ஆனாலும், தமிழ் எழுத்தாளர்களின் அடையாளமாக இன்றுவரை அவர்தான் இருக்கிறார். அவர் எத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதினாரோ, அத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதாமலும் இருந்தார். அவர் எழுதாத அந்தக் காலத்திலும் கூட மக்களால் எழுத்து சிங்கமாகப் போற்றப்பட்டவர் அவர் ஒருவர்தான்.

எழுத்துத் துறையில் மட்டுமல்ல; மேடைப் பேச்சுகளிலும் உண்மையின் ஒளி பிரகாசிக்கும். பெரியார் அமர்ந்திருக்கும் மேடையிலேயே பெரியாருக்கு இலக்கியம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டவர் ஜெ. கே. அண்ணா அமர்ந்திருக்கும் மேடையிலேயே ‘எனக்கு அண்ணாவையும் பிடிக்காது; அவருடைய எழுத்துக்களையும் பிடிக்காது’ என்று கர்ஜித்தவர். எம்.ஜி.ஆர். முதல்வராக பொறுப்புக்கு வந்த நேரத்தில் ‘எம்.ஜி.ஆர் தமிழரா’ என விவாதித்தவர். அவருடைய சத்துணவுத் திட்டத்தை விமர்சித்தவர்.

Edit

ஆனால் பெரியாரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் ஒருபோதும் ஜெ.கே.வை விமர்சித்தது இல்லை. மாறாகப் போற்றினார்கள். மதித்தார்கள். அதுதான் உண்மையான எழுத்தாளனுக்குக் கிடைத்த மரியாதை. மரியாதைக்குரிய எல்லோராலும் மதிக்கப்பட்டவர் ஜெ.கே. காமராசர், கண்ணதாசன், ப.ஜீவானந்தம் என அவருடைய மதிப்பு வட்டம் மகத்தானது. சாதாரண அச்சகத் தொழிலாளியாக இருந்து மாபெரும் எழுத்தாளனாக, அறச்சீற்றம் மிக்க அரிய மனிதனாக ஜெ.கே. உயர்ந்தார். அவருடைய கால கட்டத்தில் தமிழ் எழுத்து கம்பீரமாக உலா வந்தது.

புதிய வார்ப்புகள், தரிசனங்கள், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, உண்மை சுடும், பிரளயம், அக்னி பிரவேசம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், ரிஷிமூலம்… என அவருடைய படைப்புகளுக்கு அவர் வைத்தப் பெயர்களே அன்று தமிழைப் புரட்டிப் போட்டன. சரஸ்வதியில் எழுத ஆரம்பித்து ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என அனைத்து இதழ்களிலும் எழுதினார். எழுதினார் என்பது இலக்கணக் சுருதி. கொடிகட்டிப் பறந்தார் என்பதே சரி.

Edit

சாகித்திய அகாதமி, ஞான பீடம் என இலக்கியத்துக்காக இந்திய அரசு வழங்கும் அனைத்து விருதுகளையும் அந்த விருதுகளைப் பெற்றவர்களைக்காட்டிலும் இளைய வயதில் பெற்றவர்.
அவருடைய வீட்டின் மாடியில் அப்போது ஓர் ஓலைக் குடிசை இருக்கும். அதிலே மாலை வேளைகளில் பலரும் கூடுவார்கள். பெரிய எழுத்தாளர்கள், டாக்டர்கள் முதல் ரிக்‌ஷா தொழிலாளி வரை அந்தச் சபையிலே இருப்பார்கள். கஞ்சா குடிப்பார்கள். அதை அவர் மறுத்ததில்லை.

நீங்கள் கஞ்சா குடிப்பீர்களா என கேட்டபோது, பகவான் ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் மகாகவி பாரதியும் கஞ்சா அடித்தவர்கள்தான். அந்த வரிசையில் நானும் அடிக்கிறேன் என்றார். வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாகச் சொல்லியும் கைது செய்யப்படாதவர் அவர்… இத்தனைக்கும் அவரால் விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் அப்போது இருந்தார்கள். அவர்களின் இயக்கங்கள் ஆட்சியில் இருந்தன. ஓர் மாபெரும் எழுத்தாளன் மீது அரசாங்கம் வைத்த பயபக்தியின் அடையாளம் அது.

சினிமா, திரைப் பாடல், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிலும் அவருடைய எழுத்துக்கள் பிரகாசித்தன. பத்திரிகையாளராகவும் பொதுவுடமை அரசியல்வாதியாகவும் திரைப்படக் கலைஞராகவும் எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர்.


‘எனக்கு நானே கடவுள்… எனக்கு நானே பக்தன்… என் வாழ்நாள் எல்லாம் திருநாள்… மரணம் எனக்கு கரிநாள்!’ என்றார் ஜெ.கே. எனும் ஜெயகாந்தன். எழுத்தில் மட்டுமின்றி வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆளுமையுடன் வலம்வந்த கம்பீர எழுத்தாளர். பேச்சு, சினிமா, அரசியல் என பன்முக உருவமாகத் தன்னை சமூகத்துக்குக் கொடுத்தவர்.


ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்… மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர், உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்!


சிறுகதைகள் 200-க்கு மேல், குறுநாவல்கள் 40, நாவல்கள் 15, கட்டுரைகள் 500, வாழ்க்கைச் சரிதத்தை ஆன்மிக, அரசியல், கலையுலக அனுபவங்களாகப் பிரித்து மூன்று புத்தகங்கள் என எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன்!

சுருதிசுத்தமாக வீணை வாசிக்கத் தெரியும். இசை படித்தவர். நல்ல சினிமா பாடல்களாக இருந்தால் சுருதி கூட்டி குரல் இசைய, லேசாக விரல்கள் தாளமிட, இது இந்த ராகம் என நண்பர்களிடம் சொல்வார்!

‘இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், ஆச்சர்யம் மட்டுமல்ல; வருத்தமும் அடைவேன்’ என்று ஜே.கே-விடம் சொன்னாராம் எஸ்.எஸ்.வாசன். நண்பர்களிடம் இதைச் சொல்லி, தனக்கு உத்வேகம் கிடைத்த விதத்தைச் சொல்லிப் பெருமைப்படுவார்!

காமராசரின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும்கொண்டவர். முதல்வராக இருந்தும், தனது தாய்க்கு வசதிகள் செய்து தராத அவரது நேர்மையைச் சொல்லும்போதெல்லாம் தழுதழுப்பார். காமராஜரை காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் எனக் குறிப்பிடுவார்!

ஜெயகாந்தனின் சபையில் பெரும்பாலும் அவரே பேசுவார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். கேள்வியும் அவரிடம் இருந்தே வரும். சிறிது நேரம் மௌனம் காப்பார். பிறகு பதிலும் அவரிடம் இருந்தே வரும்!ஜெயகாந்தனின் சபையில் அடிக்கடி ஆஜரானவர்கள், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, சந்திரபாபு, பீம்சிங், எம்.பி.சீனிவாசன், கண்ணதாசன், இளையராஜா, பார்த்திபன், லெனின் ஆகியோர் அடக்கம்!

ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாடமி, ஞானபீடம், நேரு விருது (சோவியத் நாடு கொடுத்தது) பத்மபூஷண் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே.கே-தான்!

1977 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் சிங்கம் சின்னத்தில் ஜெயகாந்தன் போட்டியிட்டார். 481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ‘சிங்கத்துக்குப் பிடித்த உணவு நம்ம டெபாசிட் போலும்’ என நகைச்சுவையாக அதை எடுத்துக்கொண்டார்!

கவிஞர் பாரதிதாசன் ஜெயகாந்தனின் மேல் பிரியம்கொண்டவர். திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டுடியோவில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இப்போதும் ஜே.கே-யின் வீட்டில் இருக்கிறது!

‘என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்’ எனச் சொல்வார். எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை. கேட்டால், ‘நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க’ என்பார். இன்னும் கேட்டால், ‘உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா. அதுக்காக, இன்னும் பெத்துக் குடுன்னு கேட்டுட்டே இருப்பியா?’ என்பார் கோபமாக!

பயணங்கள் என்றாலே நண்பர்களோடுதான். கிண்டலும் நகைச்சுவையும் கரை புரண்டோடும். யாரையும் புண்படுத்துவதாக அந்த நகைச்சுவை அமையாது!

கமல் தன் ஒவ்வொரு திரைப்படத்தையும் ஜெயகாந்தனுக்கு தனியாகப் போட்டுக் காண்பித்து, அபிப்பிராயத்தைக் கேட்டு அறிந்துகொள்வார்!பாரதியார் பாடல்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெறுமனே சொல்ல மாட்டார் ஜே.கே. ஒரு சந்தமும், சுதியும் சேர்ந்து வர அர்த்தங்கள் இயல்பாக வெளிப்படும்!

மிகுந்த ஞாபகசக்திகொண்டவர். தான் படித்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும், தனது பொருட் களைக் கவனமாக வைத்திருப்பதிலாகட்டும் மறதியைப் பார்க்கவே முடியாது!

ஜெயகாந்தனின் சிறு வயதுத் தோழர் கி.வீரமணி.

ஜெயகாந்தனின் படைப்புக்களான ‘புதுச் செருப்பு கடிக்கும்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘காவல் தெய்வம்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘கருணையினால் அல்ல’, ‘யாருக்காக அழுதான்’ ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன!

காலையில் சிறிது நேரம் யோகாசனம். அதற்குப் பிறகுதான் உணவு. எந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார் ஜே.கே!

ஜே.கே-யின் பிறந்த நாள் ஏப்ரல் 24 – 1934. ஒவ்வொரு வருடமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முதல் நாளில் இருந்தே நண்பர்கள் குவிய ஆரம்பித்துவிடுவார்கள். சபை களை கட்டி பாட்டும், சிரிப்பும், பேச்சுமாகக் கலகலக்கும். அன்றைக்கு எல்லோருக்கும் உணவு அவர் வீட்டில் பரிமாறுவது வழக்கம்

ஆசையுடன் நாய் வளர்த்தார். ‘திப்பு’ எனச் செல்லமாக அழைப் பார். ‘திப்பு’ இறந்த துயரத்துக்குப் பிறகு பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டார்!


‘எங்களுக்குள் இருப்பது முரண்பாடு இல்லை; வேறுபாடு. முரண்பாடு என்பது தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி… சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும் போல… சேர்ந்துவிடும்’ என்று கலைஞர் தன்னைப்பற்றி சொன்னதை, ரசித்து ரசித்துக் குறிப்பிடுவார் ஜெயகாந்தன்!

‘நாளை சந்திப்போம்…’ என்பது மாதிரியான வாக்குறுதிகள் கொடுத்தால், கூடவே ‘இன்ஷா அல்லா’ என்று சொல்லிதான் முடிப்பார்!

ஒரு கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது “இன்றைக்கு நீங்கள் விஸ்வரூபம் காட்டவில்லையே, ஏன்?” என்றார் ஒரு வாசகர். உடனே “விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல; காண்பது” என்றார் ஜெயகாந்தன்.

‘குப் குப்’ என்று புகைவிட்டு… ‘கூ கூ’ என்று கூச்சலிட்டு… ‘வருகுது வருகுது ரயில் வண்டி… வேகமாக வருகுது… புகை வண்டி.’-அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாட்டுக் களில் இதுவும் ஒன்று!

எந்தப் பிரச்னை என்றாலும் அது சரியாகும் என்று நம்புபவர். எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு என்பதில் உறுதிகொண்டவர். ஒருபோதும் ‘இது முடியாது’ என்றோ, ‘அவ்வளவுதான்’ என்றோ அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வராது!

ஜெயகாந்தன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் 

சில நேரங்களில் சில கேள்விகள் 

1.எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?

நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப் பத்திரிகைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதுமில்லை. நான் கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ படித்தவனல்ல, அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு! நான் நடைபாதையில், குழாயடியில், சில நாட்கள் வேலைக்குப் போன சிறிய தொழிற்சாலைகளில் பொதுவான நடைமுறை வாழ்க்கையில்தான் இலக்கியத்தைக் கற்றேன். பிறகு, அங்கேதான் எழுத்தும் இலக்கியங்களுமே பிறக்கின்றன என்று அறிந்தேன். அறிந்ததை – வாழ்க்கை எனக்கு அறிவித்ததை – திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். வந்தவன்தான் போவான். நான் வந்தவனும் இல்லை; போகிறவனும் இல்ல.

2.ஓர் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

பிழைப்பு என்றாலே ரொம்பச் சிரமமான காரியம்தான். ‘என்ன பிழைப்பு?’ என்பது அலுப்புக் குரல். இலக்கணப்படிப் பார்த்தால், பிழைப்பு என்பது குற்றம் என்றும் பொருள்படும். எழுத்தை வெறும் பிழைப்பாகக்கொள்வது ஒரு குற்றமே. பிழைக்க முடியுமா என்பதல்ல; கூடாது என்பது என் கொள்கை. என்னைப் பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்குக் காசு தருகிறார்கள். ஆனால், நான் எழுதுவதே காசுக்காக அல்ல. கல்லடி கிடைத்தாலும் நான் எழுதுவேன். எழுத்து, காசு தராவிட்டால்தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்!

3.தனித் தமிழில் எழுதுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அதில் யாரும் எழுதுவதில்லையே! எழுத வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஆசைக்கு ஒரு கடிதம், ஒரு கட்டுரை எழுத சிலர் முயலலாம். கதை எழுத முடியாது. கதை என்பது, இன்றைய வாழ்வின் பிரச்னை. இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழனுக்குப் பிரச்னை, தமிழின் தனிமையல்ல!

4. தங்கள் மனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? விமர்சகர் யார்?

கவர்ச்சி என்பதே ஒன்றின் வளர்ச்சி பற்றிய பிரச்னை. சின்னப் பிள்ளைக்கு, மண் பிடிக்கும், வாலிபனுக்கு, பெண் பிடிக்கும். வயது முதிர்ந்தால் அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப கவர்ச்சிகள் பேதப்படும். அதே போல் எனது ரசனை வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவரைப் பிடித்திருந்தது; பிடிக்கிறது. ஏதோ நீங்கள் கேட்டதற்காகச் சொல்வது என்றால், டால்ஸ்டாய் என்பேன். இந்தக் கவர்ச்சிக்குக் காரணம் கேட்பீர்களோ? என் வளர்ச்சிதான். விமர்சகரா? நானறிந்தமட்டில் அப்படி ஒருவர் இங்கே இல்லை ஐயா.

5.நீங்கள் ஏன் தொடர் கதைகள் எழுதுவதில்லை?

நான்தான் தொடர்ந்து கதை எழுதி வருகிறேனே! தொடர் கதை என்று இலக்கியத்தில் ஒரு பிரிவு கிடையாது. மேல் நாட்டில் மிகப் பெரிய எழுத்தாளர்களின் நாவல்களைக்கூட சில பத்திரிகைகள் வசதிக்காக அவ்விதம் பிரசுரித்தது உண்டாம். எனினும், அவை தொடர் கதைகள் என்பதற்காகப் பாராட்டப்படவில்லை. இங்கேயோ அது பெரும்பான்மை வாசகரை மயக்கும் ஒரு தந்திரமாகவே கையாளப்பட்டு வருகிறது. பத்திரிகைகளோ, வாசகரோ என்னிடம் அதை எதிர்பார்க்கவில்லை. எனக்கும் அதில் பழக்கமோ, விருப்பமோ இல்லை!

6.ஜனரஞ்சகமாக எழுதக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். ஜனங்கள் வளர்ந்துகொண்டே இருப்பவர்கள். வளர்ந்துகொண்டிருக்கும் ஒன்றின் அருகே குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக்குச் சமமாகப் போய் நின்றுவிட்டால், நாளைக்கு நாம் குறைந்துவிடப் போகிறோம் என்று அர்த்தம். ஜனங்களை விட்டு ஒதுங்கிவிடவும் கூடாது; கலந்துவிடவும் கூடாது. எப்போதும் ஓர் அடி முன்னே சென்றால்தான் ஜனங்களை இழுத்துச் செல்லவும் முடியும். அவர்கள் எதை வேகமாக விரும்பி ஏற்கிறார்களோ, அதை அவர்கள் அதே வேகத்தோடு வீசியும் எறிகிறார்கள். ஜனரஞ்சகம் என்ற பெயரால் என் எழுத்துக்கள் எறியப்பட வேண்டாம் என்றும் நான் நினைக்கிறேன்!

7.தாங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருக்கிறீர்களா? அதனால் உங்கள் எழுத்து பாதிக்கப்படுகிறதா?

நான் ஒரு கம்யூனிஸ்ட். வாழ்க்கையின் எத்தனையோ பாதிப்புகளினால்தான் எழுத்தே உருவாகிறது. பாதிக்கட்டுமே!

8.ஓர் எழுத்தாளன் என்ற முறையில் தமிழ்ப் பட உலகைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?

நான் தமிழ்ப் படம் பார்த்து மூன்று வருஷம் ஆகிறது. ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் சொன்னால்… வேண்டாம் சார், விடுங்கள்!

9.திரைப்படங்கள் எதற்கேனும் எழுத உத்தேசித்திருக்கிறீர்களா?

எழுத உத்தேசமில்லை; எடுக்க உத்தேசம் உண்டு. அப்போது ஒருவேளை எழுதலாம்!

10.உங்கள் மாத வருமானம் என்ன? அது போதுமானதாக இருக்கிறதா? இல்லையென்றால் பற்றாக்குறைக்கு என்ன செய்து சமாளிக்கிறீர்கள்?

வாழ்க்கை ஐம்பது ரூபாயிலும் இருக்கிறது, நூறு ரூபாயிலும், ஆயிரம் ரூபாயிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் வாழ்க்கை வண்டியில் எல்லா ‘கிளாஸ்’களிலும் பிரயாணம் செய்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கு ரூ.350-ல் தாங்குகிறது. நாளைக்கு முடியாவிட்டால், வேறு ‘கிளாஸு’க்கு இறங்கி விடுகிறேன். முடிந்தால் உயரே போவது. ஆனால், கடன் வாங்க மாட்டேன். பொருளாதார வாழ்க்கை என்பது, வாழத் தெரிந்தவர்களுக்கு ரொம்பச் சாதாரணமானது. பொருளாதார வீழ்ச்சியும் சரி, உயர்வும் சரி ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியோ உயர்வோ ஆகாது. அவை யாவும் அனுபவங்கள் அல்லவா? எனக்குப் பிரச்னை, என்னுடைய ஆன்மிக வாழ்க்கையும், பிறருடைய சமூக வாழ்க்கையும்தான். பிரச்னைகளுக்குப் பற்றாக்குறை ஏது?

11. எல்லாவற்றுக்கும் ஆயுள் என்று ஒன்று உண்டு. ஒரு படைப்பாளியின் எழுத்தின் ஆயுளைத் தீர்மானிப்பது எது?”

”’எழுத்தாளன் ஒரு சட்டத்தின் துணைகொண்டு, ‘இது சரி… இது தப்பு…’ என்று தீர்ப்பும் தண்டனையும் அளிக்கும் சாதாரண ஒரு நீதிபதி அல்ல. வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும், சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே அவன் நாடிச் செல்கிறான்’- எழுத்தாளன் பற்றி நான் சொன்ன இந்தக் கருத்து எழுத்துக்கும் பொருந்தும். எழுத்தின் ஆயுளைத் தீர்மானிப்பவர்கள் அதை எழுதிய எழுத்தாளர்கள்தான். வேறு யாரும் வெளியில் இருந்து தீர்மானிக்க முடியாது. ஆனால், எழுத்தைக் கீழான நோக்கங்களுக்குப் பலர் பயன்படுத்தியதால், அது கூர்மை மழுங்கிப்போய் இருக்கிறது. எழுத ஆரம்பித்திருக்கும் இளைஞர்கள்தான், அதற்குக் கூர்மை கொடுக்க வேண்டும்!”

12. ”’வாழ்க்கை, முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தொடக்கக் கால வாழ்வோடு இப்போது எந்த அளவுக்கு முரண்பட்டிருக்கிறீர்கள்?”

”எல்லா விஷயங்களிலும் வாழ்க்கை முரண்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் அமைப்பே அப்படித்தான் இருக்கிறது. இயற்கையிலேயே இருக்கிற முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால், செயற்கையான பல முரண்பாடுகளை சில வியாபாரிகள் உருவாக்கி வருகிறார்கள்!’

13. ‘கதைகளில் வேகம் இருக்க வேண்டும், விறுவிறுப்பு இருக்க வேண்டும்’ என்று சொன்னபோது ‘குதிரைப் பந்தயத்துக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளை எல்லாம் இலக்கியத்துக்குப் பயன்படுத்தக் கூடாது’ என்றீர்கள். இப்போது ஸ்பீட் கதைகள், ஒரு நிமிடக் கதைகள், குறுங்கதைகள் என்றெல்லாம் இலக்கியம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கால மாற்றத்துக்கு இந்த வடிவங்கள் எல்லாம் தேவை என்று நினைக்கிறீர்களா?”

”இந்த மாதிரி கதைகளைப் பற்றி நான் ஒன்றுமே நினைப்பது இல்லையே!” (முகத்தை உயர்த்திப் பார்க்கிறார்)

14. ”எழுத்தாளர், பத்திரிகையாளர், சினிமாக்காரர்… எனப் பல முகங்கள் உங்களுக்கு உண்டு. எழுத்தாளனாக உச்சம் தொட்ட நீங்கள், மற்ற துறைகளில் எதில் நிறைவு கண்டதாக உணர்கிறீர்கள்?”

”பத்திரிகைத் துறை பங்களிப்பில் நிறைவு கண்டதாக நினைக்கிறேன். அதுவும் ஓரளவுதான். பத்திரிகை என்பதுதான் பலருடைய எண்ணங்க ளுக்கு இடம் அளிக்கவேண்டிய துறை. அதில் பலருடைய எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. பலருடைய நிலைமைகளையும் அனுசரித்து நிறைவேற்றிய நிறைவு, எனக்கு ஓரளவு உண்டு.’

15. ”இப்போது வாசித்துக்கொண்டிருக்கிற புத்தகம்?”

”தஸ்தாயெவ்ஸ்கியின் ‘கேம்ப்ளர்’ நாவலை இப்போது வாசித்துக்கொண்டி ருக்கிறேன். அது எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. என்றாலும், அது எனக்குப் புதிதாகவே இருக்கிறது. படிக்கும்போது அது எழுதப்பட்ட கால வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”

16. ”எழுத்தாளர்களைச் சமூகம் கொண்டாட வேண்டும் என்று சில எழுத்தாளர்கள் சொல்கிறார்களே?

”எழுத்தாளனை எழுத்தாளனாகக் கொண்டாட வேண்டும் சமூகம். ‘என்னைத் தனியாகக் கவனியுங்கள், என்று எழுத்தாளன், மக்களிடம் மனு போட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால், எழுத்தாளனின் ஸ்தானத்தை எழுத்தாளர்கள்தான் கெடுத்துக்கொள்கிறார்கள். இது தனி மனித உரிமை என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. பிரச்னைகளை அக்கறையோடு அணுகி, தீர்வு காண வேண்டும் என்பதுதான் கலைஞனின் சமூகக் கடமை. அது இல்லாதபட்சத்தில் அவனை சமூகம் விட்டுத்தள்ள வேண்டும். இதற்குக் கூட்டம் கூட்டி ஒன்றும் செய்ய முடியாது!”

17. ”ஓர் எழுத்தாளனாக முழு திருப்தியோடு வாழ்ந்திருக்கிறீர்களா?”

”எழுத்து, எனக்கு ஜீவனம் அல்ல; ஜீவன். நான் வாழ்ந்திருக்கிறேன். அது போதாது. எல்லோரும் நிறைவோடு வாழ வேண்டும் என்பதும் என் அவா!”

18. ”இப்போது, உங்களுடைய ஒரு நாள் வாழ்க்கை எப்படி அமைகிறது?”

”ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. மாற்றம் எதுவும் இல்லை!”

19. ”நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக நினைக்கிறீர்களா?”

”இல்லை… நிறைவு அளிக்கவில்லை. மிகவும் குறைபாடுடையதாக… குறைபாடுகள் மட்டுமே தெரிவதாகத் தெரிகிறது!”

20. ”இன்றைய தலைமுறையினருக்கு பணம் மட்டுமே வாழ்வு என்று ஆகியுள்ளதே?”

”மதிப்பெண் வாங்குவதையே வெற்றி என்று நினைக்கிறார்கள் மாணவர்கள். பெற்றோர்கள் இதை ஊக்குவித்து வழி வகுக்கிறார்கள். அரசியலிலும் தனி மனித வாழ்விலும் எங்கும் லாபக் கணக்குகளைப் பார்த்து மட்டுமே வாழத் தொடங்கிவிட்டனர். இதையும் மாற்ற, இளைஞர்கள்தான் வர வேண்டும். லாப-நட்ட கணக்குகளை மட்டுமே பார்க்கக் கூடாது. மக்களை விமர்சனம் செய்வதில் பலன் இல்லை என்று ஆரம்பத்தில் சொன்னேன். மக்கள் என்போர் முன் தலைமுறையைச் சார்ந்தவர்கள்தான். வரும் தலைமுறையை வழிநடத்த வேண்டியது முன் தலைமுறையின் கடமை!”

21. ”தமிழர்களின் மிகச் சிறந்த குணம் எது… மிக மோசமான குணம் எது?”

”தமிழர்களிடம் சிறப்பான குணம் என்று ஒன்றைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கோழைத்தனம்தான், பொதுவான குணமாக இருக்கிறது. தனிப்பட்ட குணமாக ஒன்றிரண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலையெடுக்கலாம். அதில் சிறப்பானதைக் கொண்டாடுவதும், சிறப்பற்றதைக் காணாமல்விடுவதும்தான் எழுத்தாளன் பணி.”

இயக்குநராக ஜே.கே

ஸ்க்ரிப்ட் இல்லாமல் படம் எடுப்பதை மகா தவறாகவே கருதியவர் ஜெயகாந்தன். ‘நீங்கள் எப்படி சினிமாவுக்கு?’ என்று அவரிடம் யாராவது கேட்டால், வரும் ஒரே பதில் இதுதான்… ‘நானாக வலிய வரவில்லை. நண்பர்களோடு ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுடன் படத்தின் தரம் பற்றி விவாதம் செய்ததுண்டு. இவ்வளவு பேசறியே… நீ சொல்ற மாதிரி நீ ஒரு படம் எடுத்துக் காட்டு என்றார்கள். சரி என்று இறங்கிவிட்டேன்’ என்ற பதிலை பல இடங்களில் பதிய வைத்தவர்.

முதல் படத்துக்கு இவர் எழுதிய ஸ்க்ரிப்டைப் பார்த்து பின்வாங்கியவர்கள் பலர். ‘குடிப்பது, சிகரெட் புகைப்பதெல்லாம் ஸ்க்ரிப்டில் அவசியமா?’ என்றவர்களுக்கு, ஜெயகாந்தனின் பதில்… ‘ஒரு படத்தின் ஒவ்வொரு சீனும் ஸ்க்ரிப்டில் இருக்க வேண்டும். செட் இப்படி வேண்டும், எங்கு கேமரா இருக்க வேண்டும் இதெல்லாம் ஸ்க்ரிப்டில் இல்லையெனில், பண விரயமும், பொருள் விரயமும் கண்டிப்பாக ஆகும்’ என கதை எழுதுவதற்கே புது பாடம் சொன்னவர் ஜெயகாந்தன். சினிமா பற்றி ஜெயகாந்தனுக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. அவரைப்போல் தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா உலகையும் கடுமையாக விமர்சித்த தமிழ் எழுத்தாளர், இதுவரை எவரும் இல்லை என்றும் கூறலாம்.

சினிமா வியாபாரம் அல்ல… பணம் சம்பாதிக்க! அது ரசனையின் குவியல்; கலைகளை ஒருசேர இணைக்கும் இடம் என்பதை நன்கு உணர்ந்த ஜெயகாந்தனின் அரிய படைப்புகளான ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ ,’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ’ஊருக்கு நூறு பேர்’,’ உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, ‘புதுச் செருப்பு’ உள்ளிட்ட கதைகள் படமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம் என எழுத்தாளர் அசோகமித்திரன் ஒருமுறை குறிப்பிட்டார். இப்பேற்பட்ட கதாரசிகன், கதாபாத்திர ரசிகன், ஒவ்வொரு காட்சியையும் ஓவியமாக செதுக்கியவர்.

 அவரின் படைப்புகள் இந்த உலகின் கடைசி தமிழ் எழுத்து இருக்கும் வரை ஒயாது.


– ரணதீரன் புகழேந்தி

Advertisements

மீட்டாத வீணை

மீட்டாத வீணை

“மறந்துடேனா! இந்த லோகத்துல அந்த இரங்கநாதன் கூட மக்கள ரட்சிக்க மறக்கலாம்டி குழந்தே ஆனா நான் என்னைக்குமே என்னோட கொள்கைகள மறந்ததில்ல தெரியுமோ”

“இல்ல இவ்ளோ நாழி ஆயிடுத்தே இப்ப போறளே அதான் கேட்டேன்” என்றாள் கஸ்தூரி மாமி.

“வயசாயுடுத்தோனோ அதான் நடக்க முடியுறதில்ல” என்று ஐப்பாசி மாத மழை நீர் தேக்கங்களில் தத்தி தத்தி நடந்து வந்து கொண்டிருந்தார் நம்ம சீனிவாசன் பாவம் எம்பத்தினாலு வயசாயுடுத்தோனோஅப்படி தான் இருப்பார் என்ன பண்ண சொல்றேள். சட்டென சிறிது நேரம் நின்று நிதானமாக ‘என்ன?’ என்று சம்பாஷனையில் கேட்டார். நம்மலதானோ! நம்மலயே தான். ‘என்ன?’ இல்ல இந்த தெருவில் இருக்குற மத்த மார்க்கம் சமூகம் கொண்டவா கூட அக்ரஹாரத்து பாஷை பேசுறச்ச நம்ம பேசலன தப்பாயுடுமோனோ அதான்….. வேண்டாம்குறேளா! நல்ல இல்லயோ, இருந்தாலும்…

சரி இதோட நிறுத்தின்றுவோம் இல்லனா ரொம்ப கோச்சுண்டுருவார் போல ம்.

சுப்ரபாத கீர்த்தனைகள் ஆங்காங்கே ஒலித்து கொண்டிருந்தது கதிரவனின் ஓளி வேகம் சற்று குறைந்து தான் வந்தது.  அக்ரஹாரத்து மாமிகள் எல்லோரும் மஞ்சள் தெளித்து கோலமிட்டு கொண்டிருந்தனர் ஆஹா! என்ன அழகு இத பார்க்க நம்ம சீனிவாச அய்யங்காருக்கு கொடுத்து வைக்கலயே ஆமா கண் பார்வை வேற குறஞ்சுருச்சோனோ. பாவம் அந்த நடை தளர்வுல பங்கஜம் மாமி போட்ட கோலமயிலோட கால மிதிச்சுட்டார். பங்கஜம் மாமிக்கு கோவம் தலைகெறிவிட்டது.

“சீக்கிரம் போய் சேரமா நம்ம பிராணன வாங்குறதே” படக்கென வாயைவிட்டாள் பங்கஜம் மாமி.

கண்கள் கொஞ்சம் மங்கல் என்றாலும் காதுகள் ஒருவாறு உயிர்ப்போடு தான் இருந்தது. “கொஞ்சம் பொறுடி மா வைகுண்டத்துல இடமில்லயாம் அதான் கைலாயத்துல கேட்டுருகேன் இடம் கிடச்ச உடனே போய்றேனடி மா சரியா” இந்த மறுமொழிக்கு பங்கஜம் மாமியிடமிருந்து  குமட்டு சினுங்கல் தான் கிடைத்தது.

“அப்படி தட்டு தடுமாறி இந்த அதிகாலை வேளையில எங்க தான் போறாரோ அந்த பெருமான சேவிக்க போறாரோ” என்றான் அவரை கண் கொட்டாமல் பார்த்த வழிப்போக்கன்.

மறுபடியும் நின்று நிதனாமாக திரும்பி பார்த்தார் சீனிவாசன் மறுபடியும் நம்மளதான் “அய்யோ நானில்ல சார்வாள்”.

“ஓய் நீ என்ன ஊருக்கு புதுசா அவர் எங்க போறாரு நோக்கு தெரியாதா. நேதாஜி போருக்கு கூப்டப்ப பாரதி பாட்டெல்லாம்  பாடின்டே பட்டாளத்துக்கு போனவரு பெருமாள சேவிக்க போறாராக்கும்”

“நேக்கு என்ன தெரியும்? பின்ன எங்க அவசரமா கொல்லைக்கு போறாரோ”

“போடா அபிஷ்டு வெட்டி பேச்சு பேசாம போடா” என வழிபோக்கனுக்கு புத்தி கூறி சென்றார் கோயில் குருக்கள்.

அந்த மனுஷன் எங்க தான் போறாருனு பின் தொடர்ந்து போனான் நம்மவன்.  பனிகாற்று வாடையும் குளிரும் அந்த காலை பொழுதை ரம்மியமாக்கியது.

ஒரு நீண்ட நடை பயணத்துக்கு பிறகு சீனிவாச பெருமாள் கோயில் வாசல் தென்பட்டது. மெள்ளஅவர் நடை வேகம் பெற்றது முகத்தில் கொஞ்சம் புன்னகை கொஞ்சம் சினுங்கல் அது மூப்பின் காரணமாய் இருக்கலாம் கொஞ்சம் பதற்றமும் கூட. ஒருவழியாக அந்த காலைபனி அவரை வெகுவாக மறைத்தது.

கோயில் கடைத்தெருவின் வாசலின் மறைவில் நின்று நம்மவன் பனி விலக காத்திருந்தான். அப்படி என்ன தான் பண்ணப்போறரு இன்னைக்கு பார்த்தே ஆகனும் என்ற ஆவலுடன்.

மெள்ள புகைமூட்டம் புடை சூழ்ந்தது அது விலக வெகு நேரம் ஆனது அதற்குள் நம்மவன் அங்கலாய்த்து தீர்த்துக்கொண்டான். அந்த புகை மண்டலம் சற்றே விலக எத்தனித்தது பொறி பறக்க நெருப்பின் ஜுவாலை தெரிந்தது துளசி வாடையுடன் நெய்யின் நறுமணமும் கலந்து  மூக்கை துளைத்தது இட்லிகள் கமகமவென ஆவியை பரவவிட்டது, ஆழ பொறிந்த தோசைகள் நெய்யை சொட்டி கொண்டிருந்தன, வறுத்த கொட்டை பொடியின் இடுக்குகளில் சிக்கரி தன் மணத்தை சிதற விட்டது குறிப்பாக பொன்னிற அப்பங்கள் தேனை கக்கி கொண்டிருந்தன அந்த நாரயண வாடை  ஒருவாறு அவனை பாற்கடலில் மூழ்க செய்தது ஆனால் எந்த வித சலனமுமில்லாமல் அங்கே கிடத்தப்பட்ட பலகையின் முன்னேரத்தில் உட்கார்ந்து சௌகர்யத்துடன் சப்பு கொட்டி மணி கடை காப்பியை குடித்து கொண்டிருந்தார். நம்ம சீனிவாசனை பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போனான் நம்மவன்.

“அட பகவானே” என தலையில் அடித்துக்கொண்டே பெருமாள் கோயிலை நோக்கி நடந்தான் நம்மவன். அவனை நேருக்கு நேர் முட்டுவதை போல 
துளசியையும் நெய் பொங்கலையும் கைகளில் ஏந்தியபடி ஆழிலையில் எழுந்து ஓடி வந்த கண்ணனை போல சீனிவாசனை நோக்கி ஓடி வந்தான் பாரதி “சீனி தாத்தா! இந்தாங்க” என்று இரண்டு கைகளையும் நீட்டினான். பொங்கலை எடுத்து கொண்டு காப்பி டவராவை பாரதி கைகளில் வைத்தார் சீனிவாசன், அதனை பவ்யமாகவே ஏந்தி கழுவி மணியிடம் கொடுத்தான்.

“டேய் தம்பி, இந்தா இத போய் சிவராமன் ஐயர்ட்ட கொடுத்துட்டு வா” என நான்கு நெய் அப்பத்தை வாழையிலையில் மடித்து கொடுத்தான் மணி.

அதை வாங்கி கொண்டு துள்ளி குதித்து ஓடினான் பாரதி. அவன் ஓடும் அழகை அவ்வளவாக ரசிப்பதற்கில்லை அவன் அணிந்த பனியனில் அவன் மொத்த மச்சங்களையும் எண்ணிடலாம் அவன் அணிந்திருந்த டவுசரில் தான் எத்துனை நிறங்கள் அது ரசிப்பதற்குறியதாகுமா என்ன!.

சூரியன் இப்போது சஞ்சாரம் செய்ய தொடங்கிவிட்டான். சீனிவாச அய்யங்காருக்கோ ஒரே படபடப்பு.

“என்ன ஓய் தேடிட்டு இருக்கீரு” என கூறிக்கொண்டே அவ்வழி கடந்தார் கரீம் பாய்.

“ஓ! நீயா மூக்கண்ணாடிய மறந்துட்டேன் ஓய்! கொஞ்சம் நீ வந்து படிச்சு சொல்லேன்” என்று அன்றைய நாளிதழை நீட்டி தன் சுருங்க சிரிப்பால் அசடு வழிந்தார்.

“இப்பலாம் நீ ரெம்பவே மறக்கறீர் ஓய்.

கொஞ்சம் பொறும் பேரன போய் ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்.” எனக் கூறிவிட்டு மெள்ள நடந்தார் பாய்.

வழக்கம்போல பாதசாரிகளை வேடிக்கை பார்த்தவாறே நாழியை கடத்தினார். அதற்குள் நம் பாரதியும் வந்துவிட்டான். வாய்க்கு வாய் வாயாற தாத்தா என்று அழைக்கும் உரிமையை முழுமையாக அந்த  அக்ரஹாரத்தில் பெற்றவன் பாரதி மட்டுமே என்பதில் அங்கிருப்பவர்களுக்கு கொஞ்சம் பொறாமை தான். பகுத்தறிவு பேர்வழி என்று எப்போதும் விதண்டாவாதமாக பேசிக்கொண்டு சித்தாந்தங்களை சிந்திக்கொண்டு திரிவார் என்பதாலோ அல்லது பட்டாளத்தில் சில பல பராக்கிரம செயல்களை செய்ததால் தானோ என்னவோ சீனிவாசனை அவ்வளவாக யாருக்கும் பிடிப்பதில்லை. தான் பெற்ற ஐந்தும் சரி, தன்னை ஆறவதாக பெற்றவர்களும் சரி சீனிவாசனின் கொள்கைகளில் பெரிதும் அவநம்பிக்கை உடையவர்கள். ஆனால் சீனிவாசனும் ஒரு விதத்தில்  அதிர்ஷ்டசாலி தான், தன் சிந்தனை பிதற்றல்களை கேட்க ஒருத்தியை அனுப்பி வைத்தானே. அவள் என்ன பாவம் செய்தாளோ வாழ்க்கைபட. இருந்தாலும் அவள் பேணிய அன்பிற்கு நிகர் அந்த ஆண்டாள் கூட ஈடு செய்ய முடியாது.

அவள் வெற்றிடத்தின் பக்கங்களை தான் இப்போது நிரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார் சீனிவாசன். அதற்கு பெரிதும் தான் பயன்படுகிறான் பாரதி. பின்பு தூக்கி தாலாட்டிய தன் பேர பிள்ளைக்கே வைக்க இயலாத பெயரை இந்த மணி மைந்தனுக்கு வைத்து அழகு பார்த்தார் அல்லவா!.

அன்று கூட்ட நெரிசலுக்கு வழி இல்லாமல் போனது அதனால் கடையும் இளைப்பாறிக்கொண்டது. பாரதிக்கு தான்  கொஞ்சம் மகிழ்ச்சி இரண்டு அப்பம் ஒரு தோசையும் எடுத்து சீனிவாசன் அருகே உட்கார்ந்து சுவைந்து கொண்டிருந்தான்.

“பாரதி கண்ணா! இத கொஞ்சம் படிச்சு சொல்லுடா”  என்றார் சீனிவாசன் ஏக்கமாக.

சீனிவாசனை பார்த்து மென்சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் சுவைக்கலானான்.

அதற்குள் கரீம் பாயும் வந்துவிட்டார். சீனிவாசனுக்கு புன்னகை பொங்கியது பாவம் அவையெல்லாம் இன்னும் கொஞ்சம் நாழிக்கு தான் என்று அறிந்திருக்கமாட்டார் யானும் சொல்வதாய் இல்லை அனுபவிக்கட்டும். கரீம் பாய் கேட்கபோகும் கேள்விகளுக்கும் அதை கேட்கமறுக்க போகும் சீனிவாசன் செவிகளுக்கும் ஏன் அந்த அக்ரஹாரத்துக்கே பேரதிர்ச்சியாக தான் இருக்க போகிறது அந்த கேள்வி.

பாவம்! நடக்கபோவது இன்னதென்று அறியாமல் சிரித்து கொண்டிருந்தார் சீனிவாசன் தெரிந்திருந்தால் இந்த கேள்விக்கு பதில் கூற தேவையே இருந்திராதே…

“என்ன ஓய் ரெம்ப நாளா ஆளயே காணோம்”என்றார் சீனிவாசன்.

“என்னத்த ஓய் சொல்ல பேர பிள்ளைகள் வீட்டு வேலைனே ஓடிடுது”

உம்ம பசங்கலாம் எப்படி இருக்கா?” எனக் கேட்டார் கரீம் பாய்.

“எல்லாரும் சௌக்கியம் ஓய், சென்னை ரொம்ப பிடிச்சு போய்டுத்து போல தீபாவளிக்கு கூட என்ன அங்க வர சொல்லுதுகள் ஏன்டானு கேட்டா லீவ் கிடைக்காதுனு சொல்றதுகள். இப்படி காசு பணத்த சம்பாரிச்சு என்னத்த பண்ணபோறதுகளோ

ம்ம் பிராணன விட்ட கூட வருதுகளோ என்னவோ”

“ஓய் உன்னை முதியோர் இல்லத்துல சேர்க்காம தனியா விட்டதுக்கு சந்தோசபடுவோய், அப்புறம் பேர பசங்க எப்படி இருக்கா”

“அவங்களுக்கு என்ன ஓய் நல்ல பெரிய இன்டெர்னாஷ்னல் ரெசிடன்ட் ஸ்கூல்ல படிக்கிறாங்க” என்று பகட்டு சிரிப்பு சிரித்தார் சீனிவாசன்.

“ஹூம்…..

ரொம்ப சந்தோஷம், ஆனா இப்படி தனியா எப்படி தான் சமாளிக்கிறியோபா”

“தனிமை என்ன நமக்கு புதுசா ஓய், பாதி இளமைய தனிமையே வாங்கிடுத்து மீதி தனிமைய இப்ப அனுபவிக்கிறேன்

நல்ல வேள ஓய் அவ சுமங்கலியா போய் சேர்ந்துட்டா நான் போய் அவ இருந்துருந்தா வாழும் போதே நரகத்த பார்த்துண்டுருப்பா

இவாலாம் அதுக்கும் மேல காட்டிருப்பா” என குரல் தழு தழுத்தது அருகில் இருந்த மாகோலத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் அந்த கோலம் அவர் ராஜலக்ஷ்மி போட்டது போல் இருந்திருக்கலாம் யார் கண்டது.

“விடு ஓய், என்னைக்காது என் நிலைமைய கண்டுருக்கீரா

பம்பரம் மாறி சுத்திண்டு இருக்குற வயசாவோய் இது, ஒரு அஞ்சு நிமிசம் செத்த குருக்க சாச்சு கண்ணசற முடியறதா! ம்ஹூம்…” என்று சலித்தார் கரீம் பாய்.

“என்ன ஓய் இப்படி சளிச்சுக்குற, நம்ம பட்டாளத்துல இருந்தப்ப கூட நீ இப்படி சலிச்சதில்ல இப்ப என்ன ஓய்”

“உனக்கு என்ன ஓய் நீ நல்லா இருக்கீரு சுகவாசியா பசங்க பேரங்கலாம் நல்ல வெளியூருக்கு அனுப்பி வச்சுட்டு ஒண்டி கட்டயா சந்தோசமா இருக்கீரு…

என பாரும் வயசுக்கு மரியாதையுமில்ல ஒரு பச்சாதாபமில்ல இந்த வயசுக்குமேல என்ன என்ன வேலயலாம் வாங்குறா ம்ம் ‘அல்லாஹ்’ உண்மைய சொல்லனும்னா முடிலடா… சீனி”

“வாஸ்தவம் தான்…

வர வர மனுஷாளாம் மாறீட்டே வர்றா

ஒரு பொறுப்பில்ல

இங்க பாரு திருப்பல்லாண்ட எப்ப பாடுறதுகள்னு கலிகாலம் என்னத்த சொல்ல சொல்ற”

“ஆமா ஆமா மனுஷாள் மாறிட்டு தான் வராங்க அதுல நீயும் தான இருக்க

ஹா 
        ஹா
                 ஹா”

என்றார் கரீம் பாய் எக்காள சிரிப்புடனே.

“என்ன ஓய் சொல்றீரு?” என்று கரீம் பாயை சிறுது நேரம் உற்று பார்த்தார்.

‘கொஞ்சம் தள்ளுங்க தாத்தா’ என்று கரீம் பாயின் கவனத்தை சிதறி சென்றான் பாரதி.

“பின்ன என்ன ஓய், இந்த இருக்கானே மணி வம்சமே உங்க வீட்டுக்கு பரம்பர பரம்பரையா சேவ செஞ்சிட்டு வந்தா இப்ப இங்க இருக்கான் அதுக்கு நீ தான் காரணம் ஆனா….” என்று இழுத்தார்.

ஆம், சுமார் அறுபது ஆண்டுகளாக சீனிவாசன் வீட்டில் கைங்கரியம் செய்து வந்த மணியின் மூத்தகுடிகளின் பூர்வ பிம்பத்தை தகர்த்து மணியின் இருபதுகளில் தனக்கு பிடித்தமான தாயார் சன்னதி தெருவிலுள்ள காணி நிலத்தை கொடுத்து அழகு பார்த்தவர் சீனிவாசன். எத்துனை மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் கண்முன்னே உதிரம் சிந்தி கிடக்கும் மனிதர்களின் இரத்த வாடை கூட நுகர்தல்கூடாது என்று விலகி செல்லும் மனிதர்களிடையே சீனிவாசன் அந்த நூற்றாண்டின் நாயகன் தான் இருந்தும் சீனிவாசன் இன்று இப்படி செய்ததை யாரலும் நியாயப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்.

காணி நிலம் கொடுத்தும் எப்படி வாழப்போகிறோம் என்று கை பிசறி முழி பிதுங்கி நின்ற மணிக்கு தான் வாழ்க்கையின் சூட்சமத்தை ஒப்புவித்தார். இவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் அவர்கள் அப்படி தான் நடக்க வேண்டும் என்ற கூற்றுகளை கேளாது வாழ்ந்த சீனிவாசன் அப்படி செய்தது போற்றுதற்குரியதாக என்றும் இராது தானே.

கலைவாணி மீட்டெடுக்கும் வீணையின் இசையை இவர்கள் தான் கேட்கவேண்டும் என்று பிரம்மன் செய்தானோ தெரியவில்லை ஆனால் அப்படி சேராத இசையை மீட்ட வீணை வாணியின் கைகளில் இருந்தென்ன லாபம் அது நலம் கெட்டு புழுதியிலே கிடத்திடலாம். அதை வாரி எடுத்திட்டு மீட்ட சீனிவாசன் போன்று மனிதர்கள் இருந்தார்கள் அவர்களும் விதிவசத்தால் மதி இழந்து கிடக்கிறார்கள் இதுவும் பிரம்மனின் செயல் தானோ யார் அறிவார்?.

பாரதி இந்த சம்பாஷனைகள் எதையும் பொருட்படுத்தவில்லை அவன் கவனமெல்லாம் அவனை கடந்து சென்ற அந்த பள்ளி மாணவன் மீது தான் இருந்தது புத்தக மூட்டையின் அடர்த்தியை தாங்காமல் ஒரு புத்தகம் புழுதியில் வீழ்ந்தது அதை ஓடி சென்று தொட்டு எடுத்தது இந்த மென் கைகள் ஆஹா! என்ன நறுமணம் புத்தக வாடை தான் எவ்வளவு அருமையாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு பக்கமாக திருப்பினான் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தான் மெள்ள திருப்ப ஓர் இடத்தில் நின்றான் தவறவிட்டவனும் வந்தான் பாரதி கைகள் பற்றிய புத்தகத்தை பிடுங்கி எடுத்து சென்றான் பிடுங்கிய வேகத்தில் அந்த பக்கம் கிழிந்து பாரதி கைகளிலே தங்கிற்று. அந்த காகிதத்தையே பார்த்து கொண்டிருந்தான் பாவம் அவனுக்கு தான் என்ன தெரியும் முன்னும் பின்னும் பார்த்துகொண்டிருந்தான் ஒன்றும் புரியவில்லை காற்றிலே பறக்கவிட்டான் அது ஓடி விளையாடியது அங்கிருந்த பாப்பாக்களுடன்.

அதை பார்த்து கொண்டிருந்த கரீம் பாய் இப்போது சட்டென வினாவினார்

“ஆனா இந்த பாரதி பையன பள்ளிக்கூடதுல சேர்க்கனும் படிக்க வைக்கனும்னு தோனலல

உம்ம பேரன மட்டும் இன்டர்நெஷனல் ஸ்கூல்ல படிக்க வைக்கிறீரு இவன கவர்மன்ட் ஸ்கூல்ல கூட படிக்க வைக்க முடியலயே ஓய்

ஏன் ஓய் கொள்கைகளலாம் மறந்துட்டியா இல்ல மறச்சுட்டியா”

இதற்கு மறுமொழியை பாய் எதிர்பார்க்கவில்லை சீனிவாசனும் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

சீனிவாச அய்யங்காருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை வாய் குளறியது ஆனால் உதடுகள் மட்டும் ஏதோ சொல்ல துடித்தது

“நான் மறந்துட்டேனா

நான் மறந்துட்டேனா”

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements