அழகிய தமிழ் மகன்

image

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது ‘முதுமையில் மண்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.
தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாக சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம். இளம் வயதில் பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அந்த பெண்ணை சாகுந்தலை என்று அடையாளமிட்டு குறிக்கிறார். தன் மகளுக்கு அதே பெயரை வைத்தார் அவர்.
மதுரை தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது அவரின் கவிதை. அந்தக்கவிதை தான் ,’செந்தமிழ் நாடெனும் போதினிலே’. பண்டிதர்கள் கடத்திக்கொண்டு போன பைந்தமிழ் குழந்தையை கண்டுபிடித்துக்கொடுத்த காவல் நிலையமான பாரதியின் எளிய நடை அக்காலத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை பண்டிதர்கள் எதிர்த்தார்கள். பாரதி ,”கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது !” என்று மட்டும் சொன்னார்.
எக்கச்சக்க வறுமையிலும் குருவிக்கு தானியங்களை கொடுத்துவிட்டு சிரித்த நேசிப்பாளன். வாட்டிய பசியிலும் ,”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !” என்று பாடிய பெருங்கவிஞன் அவன். எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய அவர் புதுச்சேரியில் புயலில் பறவைகள் இறந்த பொழுது கனிவோடு அவற்றை அடக்கம் செய்தார்.
நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை ,”பைத்தியங்கள் உலவப்போகின்றன !” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல்
. ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்!என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று பாரதி எழுதினார்.
‘கடமை அறியோம் தொழில் அறியோம் !” என்று பறவையின் மனப்பான்மையிலும்,’தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றும் பாரதியால் தான் பாட முடியும்
வறுமையில் வாடிப்போன அவர் “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?
கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜுரம் வந்தது… வைத்தியனுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. குழப்பம், குழப்பம்; தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?” என்று புலம்பினார்
பாரதி காந்திக்கு கடிதம் வரைகிற பொழுது அவர் சென்னையில் ஆங்கிலத்தில் பேசியதை விடுத்து ஏதேனும் இந்திய மொழியில் பேசி இருக்கலாமே என்று கேட்ட பொழுது அவர் அவ்வாறே செய்கிறேன் என்றார். ஆனால்,கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது ,’பிறரை புண்படுத்தும் பொழுது அன்னை மொழியை பயன்படுத்தி பழக்கமில்லை.’ என்று தெறித்து வந்தது பதில் சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் பாரதி உறங்கிக்கொண்டு இருக்கிறான். அவனின் கீதங்கள் அக்கினி குஞ்சுகளை ஈந்துக்கொண்டே இருக்கின்றன. வேடிக்கை மனிதரைப்போல வீழாத அந்த என்றும் இளைஞன் இறக்கிற பொழுதும் வெள்ளையனை தலை முடியில் கூட அண்ட விடமால் நல்லதொரு வீணையாக நாட்டை மீட்டி மறைந்தான். அவனின் இறுதி அஞ்சலிக்கு வந்தது இருபதுக்கும் குறைவானோர்.

-Prasannapugazh

Advertisements

2 thoughts on “அழகிய தமிழ் மகன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s