வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் ‘ஜானு’ ‘ஜானு’ என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கலையவில்லை இன்னும் உரக்க ஜானு என்றழைக்க மார்கழி குளிர் மெய்ந்த தன்னுடலை அசைத்தாள் ஜானகி கண்ணை திறக்க மனம் மறுக்க உறக்கம் கலைத்தாள்.

“என்னங்க காலங்காத்தாலே உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று சொல்லி கொண்டே கடிகாரத்தை நோக்கினாள் ஜானகி ஆறு இரண்டை தழுவி கொண்டிருந்தது.

“ஒரு பிரச்சனையுமில்ல இன்னிக்கு எனக்கு ஆடிடிங் சீக்கிரம் ஆபிஸ் போனும் எனக்கு லஞ்சு வேனா ஒகேவா” என்றான் பார்த்திபன்

“இத நேத்தே சொல்லகூடாதா” என்று நொந்து கொண்டாள் ஜானகி.

“சொன்ன மட்டும் என்ன பண்ண போற” என்று  முனு முனுத்து கொண்டே கைகடிகாரத்தை மாட்டி கொண்டிருந்தான் பார்த்திபன் “என்ன என்ன சொன்னீங்க” என அதட்டல் தொனியுடன் கேட்டாள் ஜானு

“ஒன்னுமில்ல சொல்ல எங்க நேரமிருந்துச்சு” என்று அவளை சமாளித்தான்.

சமரசமில்லாமல் தனக்குள் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டான் பார்த்திபன்.

சரிடா ! நேரமாச்சு பாய்…. என  புலி துரத்திய மானை போல வாசலை நோக்கி ஓடினான் பார்த்திபன்.

இதை விழித்து கொண்டே கவனித்த அவனை கவனிக்க பார்த்திபனுக்கு நேரமில்லை. அது இருந்திருந்தாலும்அவனை கவனிக்க பார்த்திபனுக்கு எண்ணமில்லை. ஆனால் அவன் கவனிக்க வேண்டுமென்றே அவன் விரும்பினான் அது அவன் தவறொன்றும் இல்லை அது காலத்தின் தவறு.

வாசலை அடைந்த பார்த்திபன் அவளை எதிர்பார்த்தது தான், பார்த்திபனை பார்த்த அந்த கணமே ‘வணக்கங்கயா’ என்றாள் அவள் அதுக்கு மறுமொழி கூற கூட அவனிடம் வார்த்தையில்லை தன் கால் சக்கரத்தை  இரு சக்கரத்தில் வைத்து சுழிக்காற்றை போல தெறித்தான்.

இதை அவள் பார்த்து கொண்டே வீட்டுக்குள் நுழைய முற்பட்டாள் அந்நேரம் பேப்பர்காரன் வர அவள் கைநீட்ட பேப்பரை அவள் கைகளில் தர இயலாத அவன் கீழே  போட அதை பவ்யமாகவே எடுத்தாள். இதலாம் அவள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை இதை விட பலவற்றை அவள் ரசித்திருக்கிறாள்.  பேப்பரையும் கேட்டில் கட்டிய துணிபையிலிருந்து பால் பாக்கெட்டையும் கையில் பற்றி கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

அம்மா ! அம்மா ! என்று கூறிகொண்டே அவன் அறையை நோக்கி நடந்தாள் அவளை பார்த்தவுடனே தூங்குவதை போல நடித்தான் அவன் அதை கனித்த அவள் கண்ணா ! கண்ணா ! எழும்பு கண்ணா ! என்று அருவாமனை அரிந்த விரல்களால் அவன் காலில் கோலமிட்டாள்.

செங்கருங்கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு அறை வாசலின் முன்னே வந்து நின்ற ஜானகி தான் நவமாதம் சுமந்தது

டேய் ! ராகுல் ஏந்திரி … நீங்க என்னம்மா கெஞ்சிட்டு இருக்கீங்க…
அடிச்சு எழுப்புங்ம்மா.. ராகுல் இன்னிக்கு ஸ்கூல் தெரியும்ல கெட் ரெடி பாஸ்ட் 
அம்மா அவன சீக்கிரம் ரெடி பண்ணுங்க…
என்று சொல்லி கொண்டே அவ்விடம் நகர்ந்தாள்.

டீச்சரின் குரல் கேட்டு கூட இப்படி வெறுப்பாகியிருக்கமாட்டான்… தன் தாய் குரல் கேட்டு முகம் சுழித்தே எழுந்தான் அவன் கண் விழிக்க அவன் முன் மஞ்சள் பூசிய முகத்தில் செந்நிலா வட்ட பொட்டு வைத்து மின்னல் வெட்டு சிரிப்புடன் காட்சியளித்தாள் இவள்.

வாடா, கண்ணா ! பள்ளிக்கூடம் போனும்ல வா என்றழைத்தாள் என்னம்மோ தெரியவில்லை அவள் சொல்லை மட்டும் அவனால் தட்டமுடியவில்லை.

இதன் நடுவே, ‘கண்ணகி மா ! எனக்கு கொஞ்சம் காஃப்பி’ என்று ஜானகி நாளிதழை  புரட்டி கொண்டே கத்தினாள்….

ஆம் ! அவள் பெயர் கண்ணகி, அந்த மகாராணியின் சேவகி. பெயர் மட்டும் தான் கொடுத்தான் என்றால் மாதரசியின் வாழ்கையையும் அப்படியே கொடுத்துவிட்டான் அந்த படுபாவி


குடிகார கணவன் குடிக்க பணம் கொடுக்கும் பணக்காரி, வெயிலுக்கும் மழைக்கும் அடைக்கலம் தரும் குடிசையின் சொந்தக்காரி.  இடுப்பில் ஏத்தி கட்டிய பருத்தி சீலை, மஞ்சள் முகத்தில் சிவப்பு நீலா, சிரித்த முகமென கோவலனின் கண்ணகியை போலவே இருப்பாள் யார் கண்டா கண்ணகியின் மறுபிறப்பாய் கூட இருக்கலாம்.

வேண்டாம் அவள் முற்பிறவியில் அனுபவித்ததே போதும்.

இப்போது ஜானகி தன் பணியை இனிதே செய்ய கிளம்பிவிட்டாள். அதேசமயம் ராகுலும் மூட்டையை கட்டிக்கொண்டு சென்ட்ரல் மார்கெட்டில் மூட்டை தூக்கும் சாமனியனை போல கிளம்பிவிட்டான்.

மூட்டையை சுமந்தபடி வீட்டின் வாசலில் ராகுல் நிற்க

ராகுல் பாய் ! லஞ்ச் மிச்சம் வைக்காம சாப்டனும் சரியா! என்று அவன் உச்சந்தலையில் முத்தமிட்டு கையசைத்து கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தாள் ஜானகி.

எல்லோர் வீட்டிலும் மன்னியுங்கள் ! சில வீட்டில் தன் பிள்ளையை வழியனுப்ப தாய் வாசலில் நிற்பாள் ஆனால் தாயை வழியனுப்பிவிட்டு ஏக்கத்தோடு வெறும் வீதியை கண் கொட்ட பார்த்து கொண்டிருக்கிறான் இவன்.

“கண்ணா ! ரெண்டு வாய் சாப்புடுபா என் செல்லம்ல” என இட்லியை அதன் துனையுடன் எடுத்து ஊட்ட வேணாம் கண்ணகியம்மா வேணாம் எனக்கு பசிகல என்று அவன் வழக்கமான சொல்லாடலை பயன்படுத்த அவளும் தன் வழக்கமான தகிடுதத்தத்தை உபயோகித்து இரண்டுக்கு மூன்றாகவே தினித்துவிட்டாள்.

திண்ண வாயை தன் சீலையாலே துடைத்துவிட்டு கதைவை பூட்டி விட்டு அவனை அழைத்து கொண்டு வீதியில் வர ஆஹா அவள் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம் எத்தனை பெருமிதம் எத்தனை கர்வம் அரை நூற்றாண்டான பிராயத்தில் அவள் வயிற்றில் ஒரு புழு பூச்சியை கூட சுமந்ததில்லை எந்த பச்சமண்ணையும் கையில் தூக்கி மாரனைத்து பாலூட்டியதில்லை இருந்தாலும் தன் பிள்ளையை போல அவன் கைபிடித்து அந்த தெருவில் வலம் வருவதற்காகவே அவள் விடுமுறைகூட எடுப்பதில்லை அனுதினமும் இந்த தருணங்களுக்காகவே அவள் தவமிருப்பாள் ஞாயிறு சனியின் மீது கூட அவ்வபோது அவள் கோபம் கொள்வதுண்டு அதைவிட தேர்வு விடுமுறைகளை அறவே வெறுப்பாள் ஏனென்றால் அவனை பார்சல் கட்டி பாட்டனிடம் அனுப்பிவிடுவார்கள் அதற்காக  எனவே அந்த அழகிய தருணங்களுக்காக ஆண்டின் அனைத்து நாள்களும் அவன் பள்ளிக்கு  போகவேண்டும் என்று கூட அவள் நினைப்பதுண்டு அந்த அழகிய நிமிடங்களில் லயித்து இருப்பதற்காக. மேலும் தன் பகடை காட்ட இவனை பள்ளி பேருந்தில் அனுப்பாமல் இவளுடன் அனுப்பியதற்கு இவள் கொடுத்து வைத்தவளாக தான் இருக்க வேண்டும்.

ராகுலும் வார்த்தைக்கு வார்த்தை  கண்ணகியம்மா கண்ணகியம்மா என்று வாய் நிறைய தன் பள்ளி அனுபவங்களை சிலிர்த்து கூறும் நேரமது. அவன் கூறும் அனைத்தையும் அப்படியா! அடடே ! என ரசித்து அந்த 20 நிமிடங்களை செலவழிப்பாள். அதுவும் அந்த கண்ணகியம்மா என்ற வார்த்தை அவளை ஆனந்த கூத்தாட வைக்கும் எல்லோரும் அப்படி தான் கூப்பிடுவார்கள் ஆனாலும் ராகுலின் இதழ்களில் இருந்து உதிரும் வார்த்தைக்காவே அவள் தன் உயிர் பிடித்து வாழ்வதாகவும் அவள் நினைப்பதுண்டு.

இவளுக்கு ஏன் அவன் மீது இவ்வளவு வாஞ்சையும் கரிசனமும் என்று நாம் நினைக்கலாம் காலம் முழுவதும் இப்படி தாங்கி கொண்டு இருக்க போகிறாளா அல்லது இருந்துவிட முடியுமா  ஆனால் அவள் வேதனையையும் ஆனந்தத்தையும் அவ்விடம் இருந்து அனுபவித்தால் தான் அது நமக்கு விளங்கும்.

இருந்து தான் போகட்டுமே  மகிழ்ச்சியா சந்தோஷமா நம்ம ஏன் அத விமர்சிப்பானே!!

பள்ளிகூடத்தை நெருங்கிவிட்டார்கள் போல அவள் பதைபதைப்பதை பார்த்தால் அப்படி தான் தெரிகிறது ஆம் !நெருங்கிவிட்டார்கள்  பள்ளி வாகனங்களும் வண்டிகளும் கார்களும் சரமாரியாக வந்து சென்று கொண்டிருந்தன பெண் பிள்ளைகளும் ஆண் பெண்களும் தங்கள் பெற்றோருடன் ஆரவாரமாக கடந்து சென்றனர் வழக்கம்போல ராகுலின் பன் கன்னங்களை பிச்சு தின்று விட்டு அவ்விடம் விட்டு நகரமுடியாமல் நின்று கொண்டிருந்தாள் கண்ணகி ராகுலும் “கண்ணகியம்மா டாட்டா” என்றவாரே துள்ளி கொண்டு தன் நண்பனை பார்த்த சந்தோஷத்தில் ஓடிவிட்டான் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை அவளும் அதை எதிர்பார்க்காமல் மெல்ல நகர்ந்தாள். இனி அந்தி எப்போது சாயும் கிழக்கே வந்தவன் எப்போது மேற்கே போவான் என அவள் மனம் அந்த கடிகாரத்தில் உள்ள நான்கை நோக்கி அங்கலாய்க்கும்.

பாத்திரங்கள் பளபளத்துவிட்டது வீடு சுத்தமாகிவிட்டது காயபோட்ட துணிகளும் காய்ந்துவிட்டது எல்லாவற்றை முடிவித்து விட்டு மணியை பார்த்தாள் மணி மூன்றாக இரண்டு நிமிடங்கள் மிச்சமிருந்தது அட கடவுளே இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதா என தலை கிறுகிறுக்கும்போதே அவள் அடி வயிறு அவளை புரட்டி போட்டது பாவி மகள் காலையிலிருந்து ஒன்னுமே சாபிடவில்லை போலும் வயிறு ரொம்ப கிள்ளிவிட்டது அடுப்படிக்கு சென்று மிச்சம் மீதிய எடுத்து கொட்டி கொண்டாள். சட்டென அவள் முகத்தில் ஒரு தெளிச்சல் அவள் பால் நிலாவை வீடு அழைத்து வர நேரம் வந்துவிட்டது ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கிளம்பிவிட்டாள்.

அன்ன நடையிட்டு சென்றால் அந்தி சாய்ந்துவிடும் என்பதால் மூச்சிறைக்க ஒடினாள். தன் கண்ணன் தனக்காக காத்துகொண்டிருப்பான் என அவள் மனது அவளை கவ்வி கொண்டே இருந்தது. நல்ல வேளை அவன் கண்ணன் இன்னும் வரவில்லை மெள்ள நடந்து பள்ளியின் வாசலின் முன் இருந்த மரத்தின் மீது சாய்ந்து கொஞ்சம் இளைப்பாறினாள் இன்னும் சில தாய்மார்களும் அவ்விடம் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல காத்திருந்தனர் அச்சமயம் இரவணனை தாக்க வந்த வானர கூட்டத்தின் கோஷத்தை போல அப்படி ஒரு பேரொலி சற்று நேரம் ஒரு போர்களம் போலவே  அவ்விடம் காட்சியளித்தது புழுதி பறக்க ஓடிவருவதை பார்த்து அவரவர் பெற்றோர் வரவேற்று அனனத்துக்கொண்டனர். இந்த சலசலப்பு அடங்கவே சில மணி நேரம் பிடித்தது எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக கலைய தொடங்கினர் ஆனால் இன்னும் இவள் கண்ணன் வரவில்லை.

மனம் கலங்கியது கண்கள் பொங்கியது வாய் குளறியது அந்த கண்ணனின் யசோதைக்கு யாரிடம் கேட்பது எங்கு தேடுவது என அவள் ஈர குலை நடுங்கியது. சில விநாடிகளில் அவள் உடல்விட்டு உயிர் 
நீங்க தயாராக இருந்த சமயத்தில். தலையை தொங்கவிட்டபடி மெள்ள நடந்து வந்தான். கண்ணன் மட்டுமா வந்தான் அவள் உயிரும் இருந்த இடம் தேடி வந்தது.

கண் பொங்கியதில் தண்ணீர் வெளிவர எண்ணியது தன் முந்தனையில் தன் கண்களை துடைத்து கொண்டாள்.

“என்னடா கண்ணு இவ்ளோ நேரம், நான் பயந்துட்டேன் தெரியுமா”

“ஒன்னுமில்ல கண்ணகிமா வா போலாம்”
என்று ஜானகி மைந்தான் முன்னே நடந்தான் அவனுள் ஏதோ ஒரு குழப்பம்

அவளும் அவன் மூட்டையை இடுப்பில் வைத்தபடி அவனை பின் தொடர்ந்தாள்.

“என்ன கண்ணா என்ன ஆச்சு ? ஏன் ஒரு மாறியா இருக்க..
மிஸ் திட்டுனாங்களா

“இல்ல கண்ணகிமா..”

பின்ன அடிச்சாங்களா என கரகரத்த குரலில் பதறி கொண்டே கேட்டாள்

“அதலாம் இல்ல நான் சொல்றேன்ல ஒன்னுமில்லனு” என சினுங்கி கொண்டே கூறினான்.

“அப்பனா ஏன் கண்ணு இப்படி இருக்க எனக்கு கவலையா இருக்கு  என கூறி கொண்டே அவன் நடையை ஈடுகட்டினாள்”

எப்பவும் கலகல வென தன் கீச்சு குரலில் பிதற்றி கொண்டே வருபவன் இன்று நிசப்தமாக வருவது அவளை எனவோ செய்தது….

தீடிரென ஒரு மணியோசை வேகமெடுத்த நடையில் சின்ன தாமதம் ராகுல் அந்த ஓசையில் லயித்து இருந்தான்.

“என்னடா கண்ணு ஐசு வேனுமா”

“ம்ம் வாங்கி தர்றியா ஆனா அம்மா வையுமே”

எப்போதும் நடப்பது தான் என்றும் மறுப்பவன் இன்று வாய் விட்டு கேட்டுவிட்டான்.

முதல் முறையாக கேட்டுவிட்டான்
அவன் கேட்டால் பாற்கடலில் வீற்றிறுக்கும் அந்த வைணவனை தள்ளி விட்டு அமுதம் எடுத்து வருவாள் அந்த சைவ மகன் கணபதியின் கொலுக்கட்டையையும் பிடுங்கி தருவாள் விண்மீன்களேயே தூண்டில் போட்டு தொட்டியில் இட்டு தர சித்தமாய் இருப்பாள் இதை செய்யமாட்டாளா

“வாடா கண்ணு என்ன ஐசு வேனும் சொல்லு”

“சாக்கோ பார்” என்றான் ராகுல்

இருக்கா தம்பி !!! ம்ம் இருக்கு மா !! அப்ப ஒன்னு கொடுபா

கையில் வாங்கிய  கண்ணகி செல்வன் முகத்தில் பொக்க வாய் சிரிப்பு தென்பட்டது.

எவ்ளோ பா !!!

இருபந்தஞ்சு மா !!

“என்னப்பா குச்சி ஐசு பத்துருப்பா தான “

“அது லோக்கல்மா இது கம்பேனி ஐஸ்”

ராகுலின் மகிழ்ச்சியை பார்த்த அவளுக்கு வேறு எதுவும் சொல்ல தோனவில்லை

ரவிக்கையில் கைவிட்டு பர்ஸை எடுத்து பார்த்தாள் நிறைய துண்டு காகிதங்களும், ஒரு பழைய போட்டோ இருந்தது அவள் தந்தையுடையது போல உலகில் அவளுக்கு பிடித்த முதல் ஆண் “இந்த மனுஷன் இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமையே வந்திருக்காது” என விநா பொழுது அந்த போட்டோவை பார்த்து கொண்டு மேலும் பர்ஸை  துளாவினால் ஒரு பழைய பத்து ரூபாய் நோட்டும் காந்தியின் இடக்கண் இல்லாத கசங்கிய  ஒரு ஐந்து ரூபாய் நோட்டு இருந்தது அதை எடுத்து விட்டு மறுபடியும் துளாவினாள் ஒன்னும் சிக்கவில்லை முந்தானையில் எதோ முடிந்து வைத்த நியாபகம் அதையும் பிரித்து பார்த்தாள் இரண்டு இரண்டு ரூபா ஒரு ஒரு ரூபா இருந்தது பாதகத்தி காலைல பஸ்க்கு போக தான் இரவு வீடு திரும்ப வைத்திருந்த காசையும் எடுத்து கொடுக்க தயரானாள் இருக்கட்டும் ஒரு நாள் மூனு மைல் நடந்து போன என் ஜீவனா போகபோது என மனதில் சொல்லி கொண்டே கையை பிசங்கி கொண்டே ஐஸ்காரனை பார்த்தாள்.

அவள் ஒரு புழுவை போல நெழிந்தாள், என்ன சொல்வதென தெரியவில்லை  இப்படி ஒரு சங்கடத்தை அவள் அனுபவித்ததில்லை ஒரு வழியாக “தம்பி! ஐஞ்சு ரூபா கொறையுது” என தயங்கி தயங்கி வார்த்தைகளை மென்று முழுங்கினாள்.

நடப்பவை அனைத்தையும் ராகுல் புரிந்து கொண்டான்.

சற்று நிதானத்துடனே வார்த்தைகளை விட்டான் அவன் குரலில் ஒரு தெளிவு

“அண்ணே! இந்தாங்க எனக்கு வேணாம் நீங்க வச்சுகோங்க” என அவன் அதை ஐஸ்காரனிடம் நீட்டிய அந்த தருணம் கண்ணகியின் கண்கள் குளமாகின கண்ணீர் முட்டியது புழுவை விட ஒரு கேவல பிறப்பை போல உணர்ந்தாள் அவள் தொண்டைகுளி வெற்றிடத்தால் அடைப்பட்டது வார்த்தை வெளி வரவில்லை அவன் தலையை அவள் மடியில் புதைத்து அவள் கலங்கிய கண்ணை முந்தானையால் துடைத்தாள்

இந்த நிகழ்வை பார்த்த அந்த ஐஸ்காரன் உச்சந்தலை இரட்டை சுழியில் இருந்த வெண் மயிர் சிலிர்த்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் அவனே அதை உணர சிறிது நேரம் பிடித்தது.  

ஐஸ்காரன் புன்சிரிப்புடன் “தம்பி சாப்பிடு; இருக்கட்டும் மா கொடுங்க நான் பாத்துக்கறேன்” என இருபதை வாங்கிக்கொண்டு மெள்ள நகர்ந்தான்.

நாட்டில் இப்படியும் சில மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அவள் செய்த புண்ணியம் கொஞ்சமாவது நன்றி செய்யாத என்ன…

ராகுல் செய்த காரியத்தை கண்டு அவள் உடம்பே புல்லரித்தது. ஒரு சிறு செய்யும் காரியமா இது என நினைத்து கொண்டாள் அதற்கும் மேல் ஒரு காரியத்தை அவன் செய்ய போகிறான் என்றுஅவளுக்கு தெரிய வாய்ப்பில்லை அதை கனவில் கூட அவள் நினைத்திருக்க மாட்டாள்.

ஒருவழியாக வீடு செர்ந்துவிட்டார்கள். நடந்து வந்த களைப்பில் அப்படியே ஒய்யாரமாக சோபாவில் உட்கார்ந்தான் ராகுல் அவன் வாயில் பிசுபிசுப்பும் உடலில் சோர்வும் இருந்தது. முட்டைய கீழிறக்கி வைத்தபடி மூனாங்கிளாஸ் படிக்கிற பிள்ளைக்கு இவளோ புக்கா என நாலு வசை பாடினாள்.

“கண்ணு சீக்கிரம் மூஞ்சி முகம் கழிவிட்டு வா கண்ணு; உனக்கு நான் நூடுல்ஸ் செஞ்சு தாரேன்” அவன் எந்த ஒரு ஆச்சர்யமும் கொள்ளாமல் நகர்ந்தான்.

முகம் கழுவி உடை மாத்தி அக்கடா என டிவி முன் உட்கார்ந்தான் முதலில் பூனை எலியை துரத்தி கொண்டிருந்தது அதன் பிறகு லட்டு தின்னும் பையனை பார்த்தான் ஹுஹூம் ஏதோ ஒன்று அவனை நெருடி கொண்டே இருந்தது அலைவரிசை இடைவிடாமல் ஓடி கெண்டே இருந்தன திடிரென ஒரு ஒலி சட்டென அடுப்படியில் இருந்து வெளி வந்த கண்ணகி “கண்ணு அந்த பாட்ட போடு கண்ணு” என்றாள்

எது இதுவா இதுவா என்று மாற்றிக்கொண்டே இருந்தான் அப்பொது இசைத்தது வாலியின் வைர வரிகள்

“தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் தான்
நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே”

மீண்டும் கலங்கின அவள் கண்கள் ஒரு சொட்டு அவள் மூக்கின் அருகே வந்து அவள் மூக்குத்தியை அழகாக்கியது  “கண்ணகி மா எதுக்கு அழுவுற” என்றான் ராகுல் “அதலாம் ஒன்னுமில்ல கண்ணு வெங்காயம் நறுக்குனேல அதான்” என்றாள் கண்ணகி.

ஏழு வயது சிறு பிள்ளைக்கு அந்த வரிகளின் ஆழம் புரியாமல் இருக்கலாம் ஆனால் அவனுக்கு உணர்வுகள் நன்றாக புரியும் பத்து மாதம் சுமந்தேன் என்று தாய்க்கு தெரியும் ஆனால் பத்து மாதங்கள் கருவறையில் இருந்தேன் என்று எப்படி அந்த சிசுக்கு தெரியும் யார் சொல்லி தெரியும் ஏன் சரியாக ஈரயிந்து மாதங்களில் வெளிவர துடிக்கிறான் எல்லாம் இந்த பாழாய் போன உணர்வுகள் செய்யும் வேலை தான் அதை அவனிடம் மறைக்க நினைத்து ஏமாந்துவிட்டாள் கண்ணகி.

நேரம் செல்ல செல்ல ராகுலின் மனதில் எதோ ஒரு இறுக்கம் “அப்படி என்ன தான் நடந்தது காலையில நல்லா பேசிட்டு போனவன் இப்ப ஏதோ யோசிட்டே இருக்கான் கேட்டாலும் சொல்ல மாட்றான்” என புலம்பி கொண்டே தட்டில் நூடுல்ஸை வைத்து அவனிடம் கொடுத்தாள் எப்போதும் பேரலை கரையை வாரி கொள்வது ஆர்பரிப்பவன் இன்று எதை உள் வாங்கி கொண்டிருந்தது. அவன் முகத்தை பார்த்தபடியே “இப்பனாச்சும் சொல்லு கண்ணு ஸ்கூல்ல என்னாச்சு!”

“ஒன்னுமில்ல மா” என்று மறுபடியும் மழுப்பினான். பள்ளிகூட நினைவை அசைபோட்டு கொண்டே சாப்பிட்டான். பூர்ண சந்திரன் மெல்ல எட்டி பார்த்தான்  இருளை குளிர் சூழ்ந்தது. வழக்கத்தைவிட
சாப்பிட்டுவிட்டு தன் வீட்டு பாடம் எழுத உட்கார்ந்தான் ராகுல் அதே நொடியில் ஜானகி ரயில் இன்ஜினுக்கு கரி அள்ளி போட்டவள் போல மயங்கி வந்தவள் அப்படியே சோபாவில் சாய்ந்துவிட்டாள்.

ராகுலை பார்க்கவில்லை போலும் வந்த களைப்பில் “கண்ணகி மா காபி” என்றாள் “இதோ கொண்டு வரேன் மா” எனறாள் கண்ணகி

இப்போது தான் அவளுக்கு மெல்ல சுய நினைவு வந்தது “இது என்னடா அதிசயமா இருக்கு; சமத்தா ஹோம் வொர்க் பன்ற” என்று ராகுலை பார்த்து கேட்டாள்
“மிஸ்சு ! எதோ பார்ம் ஃபில் பண்ண சொன்னங்க”

“என்ன பார்ம் கொடு” என்றாள் ஜானகி
வாங்கி பார்த்தாள் ம்ம் சாதாரண பார்ம் தான் “நீயே ஃபில் பண்ணு கத்துகோ” என்றாள்

“சரி மா ! “என்று சொல்லி கொண்டே அதை நிரப்ப முயற்சித்தான் 
சட்டென்று கேட்டுவிட்டான் அந்த கேள்வியை வேறு என்ன செய்வான் அவன் கேட்டதில் தவறொன்றும் இல்லை அதை சரியென்றும் சொல்லி விட முடியாது. இதை தான் அவ்வளவு நேரம் மனதில் போட்டு உருட்டி கொண்டிருந்தான் போலும்.
பாவம் அந்த வேலைக்காரி கூட காப்பி டம்ளரை கீழே போட்டுவிட்டாள். ஜானகி இதை கேட்டு செத்து போயிருக்க வேண்டும் ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை உயிரை தாங்கி கொண்டு தான் அவனை உற்று பார்த்தாள் கோபத்துடன் பாசத்துடன் பயதுடன் ஏக்கத்துடன் கண்ணீருடன் என்ன செய்ய முடியும் அவளால் அவனை கொன்று விடவா முடியும் கொன்று விட்டால் எல்லாம் முடிந்துவிடுமா என்ன. அந்த கலியுக கண்ணகியின் முகத்திலோ ஆனந்த கண்ணீர் ஏன் வராது ? இந்த வார்த்தைக்கு தானே தவம் கிடந்தாள் இன்று வாயடைத்து போய் நிற்கிறாள். ராகுல் இருவரின் முகத்தையும் சட்டை கூட செய்யவில்லை மும்முரமாக இருந்தான் நிரப்புவதில். நீண்ட நிசப்தம் ஆனால் அந்த மாதரசிகளின் காதில் மட்டும் ஒலித்து கொண்டே இருந்தது அந்த கேள்வி

“மா பார்ம்ல மதர்ஸ் நேம்ல உன் பேர் எழுதவா இல்ல கண்ணகி மா பேர எழுதவா”


– ப்ரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s