பெண்பால் உவமையவள்

பெண்பால் உவமையவள்

வெண்ணிலவுக்கு சிறகு முளைத்திட ஆசையாம் அவள் காதருகே சிறகடித்து பறந்திட…
வான் மழை பெய்யக் கண்டேன் அதில் வெண்ணிலவு ஒன்று நனைய கண்டேன்…
சில்லென்று வீசிய காற்றில் மறைந்து நின்று சிலுத்து நிற்கிறாள் மூன்றாம் பிறையாய்…
பெண் பாலின் உவமையவள் சடாமுடியன் உமையாளவள் வானுலக கண்ணிகையவள்..
நட்சத்திர குவியலில் அவள் நானம் கொண்டு சிரிக்கையில் கொள்ளை அழகு…
ஆகாய நீலக் கடலில் ஆழ பதித்த முத்தின் கன்னங்களிள்‌‌ முத்தமிட ஆசை …
அவள் மூக்குத்தியின் சுடரொளியில் சோமித்திட்டு செய்த வெண்வட்ட துகளோ..
பால்வீதி ஓடையின் ஆழ்துளை சுழலோ இப்படி கண்ணை பறித்து இழுக்கிறாள்…
– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

மெய்தீண்டா ஸ்பரிசம்

மெய்தீண்டா ஸ்பரிசம்

தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த சுகம் வெறுத்து போக இடப்பக்கம் ஒருகளிக்க முன்வந்தாள் வெண்மதி. ஏனோ மல்லாந்து படுத்திட நேரமுமில்லாமல் தலைக்குப்புற படுத்திட காலமும் கனியாமல் தன் கண்களை அலக்கழித்து கொண்டிருந்தான் வளன். எதை எதையோ யோசிக்க தூக்கம் அவன் கண்ணனை கவ்வாமலே கிடந்தது அவ்வப்போது மனைவியின் முகத்தையும் அவள் இடுப்பின் வளைவையும் கண்டு மனம் வெகுண்டான். அவளோ வண்ண கனவுகளால் மெய்மறக்க தன் சப்தமிடும் வளைவிகளை கொண்டு தன் அடி வயிற்றை மெல்ல அனைத்தாள். அவள் முழுக இன்னும் ஈர்இரண்டு திங்கள் ஆகும்படியால் அவள் முகம் சற்றும் குறையாத அவாவை அள்ளி பூசியிருந்தது.

யாருக்கும் எளிதில் இந்த வரத்தை அவன் வழங்காத போதிலும் இந்த வரத்தை பெற்றமையால் வளனின் உள்ளம் பெரிதும் இன்பம் கொள்ளாது இருந்தது. அவன் மனம் சஞ்சலத்தில் மூழ்கி தவித்தது. ஆசை காதல் மனைவியின் முகம் கூட மறையும் மட்டும் அவன் புத்தி எதோ ஒன்றில் மழுங்கி கிடந்தது.

நூற்றாண்டின் ஆண் மகன் என்ற போதும் இவன் மூதாதையர்களின் மந்தி மதி இவனை ஆட்கொள்வதில் எந்த தாத்பரியமும் தேவையில்லை தானே.

விடியும் முன் பனி நேரம் தொடங்கியும் அவன் கண்கள் அயரவில்லை அவன் நாசி பெருமூச்சிட தயங்கவில்லை ஆனால் அவன் காதுகளோ எதோ ஒன்றை முனுமுனுத்து கொண்டே இருந்தது. அது அவன் அலுவலக கேலி உரையாடல்கள்.

“டேய் ராஜ் என்னடா உனக்கு ஆம்பள பிள்ள தான் பிறக்கும்னு சீன் போட்ட இப்ப என்னாச்சு

நான் தான் சொன்னேன் ல நீ தான் கேட்கவே இல்லை

ம்ம் அடுத்து வளன் தான்” என்ற பாபுவின் வார்த்தைகளுக்கு இவ்வாறு மறுமொழிந்தான் ராஜ்.

“என்னடா பொம்பள பிள்ள புறந்தா இப்ப என்னாங்குற”

“என்னாவா ! அசால்ட்டா கேக்குற இப்பனில்ல அப்ப இருந்தே பொம்பள பிள்ள பிறந்தாலே ஒவ்வொருத்தனும் கதறுவானுக” என பாபு கூற.

“டேய் நீ கிராமத்துல பொறந்து வளர்ந்ததுனால அப்படி பேசுர”

“ஆமா சிட்டில நீங்களாம் செய்யவே மாட்டீங்க! போடா டேய் !

இங்க பாரு பொம்பள பிள்ள பிறந்தா அது படிக்க வச்சு, பெரிய பிள்ள ஆன சடங்கு செஞ்சு, கல்யாண பண்ணி வச்சு சீர் சினத்தி கொடுத்து, வளைகாப்பு பண்ணி ஒரே வேலை தான் அதுமில்லாம அத கட்டி கொடுக்குற வரைக்கும் பொத்தி பாதுகாக்கனும் நடுவுல எவனாயாவது இழுத்து ஒடுற கேஸ்லாம் இருக்கு.

இதலாம் விட ஆம்பள பிள்ள பெத்தெடுத்த தனி கெத்து தான டா!!

என்னடா வளன் நான் சொல்றது சரிதான” என்று ராஜ் கூறி முடித்த பிறகும் அதற்கு பதில் கூற மனமில்லாது வளனின் நா நன்கு அடைந்திருந்தது அவன் செவிகளும் கூட அதனால் தான் பாபுவின் மறுமொழி அவன் காதுகளை துளைகாமலே போயிற்று.

அந்த காலை விடியல் அவ்வளவாக தெளிச்சியடையவில்லை. வழக்கத்திற்கு மாறாக பேருக்கேற்றார் போல நிரைமாத நிலவையொத்த மஞ்சள் பூசி பூர்ண சந்திர நிலவொளி ததும்ப சற்று முன் கண்ணயர்ந்த காதல் கணவனை எழுப்பிட வந்தாள் வெண்மதி அவள் முகத்தில் அப்படியொரு பிரதிபலிப்பு அவள் குரலில் அத்துனை வாஞ்சை “வளன் எந்திரி டா, ஆபிஸ் போனுல” என்று அவள் கூறும்போதே அந்த குறிப்பிட்ட உரையாடல் மீண்டும் அவன் செவியை எட்டியது. இருந்தும் மகிழ்ச்சியின் ழகரம் ஐகாரமாக ஒலிக்க வெக்கம் மேலிட “அம்மா அடுத்த மாசம் வளைகாப்பு பண்ணலாம் சொன்னாங்க” என அவள் கூறியபோது மஞ்சள் கன்னத்தில் சிவப்பு ரேகைகள் பரவின அவனுக்கோ அது கண்களில் பரவியது.

அந்த சிவந்த கண்களுக்கு தெரியவில்லை தான் எதற்காக சிவக்கின்றோம் என்று அவ்வளவேன் அவனுக்கே அந்த அன்னிச்சைகளின் அசைவுகள் புரிந்து கொள்ள முடியவில்லை.‌ அவளோ அவன் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவன் ஒற்றை வார்த்தைக்காக வெகு நேரம் காத்திருந்தாள். ‘ம்ம்ம்’ என்ற ஒற்றை வார்த்தை வந்து விழுந்தது ஆனால் அவள் அதுவல்லவே.

மெல்ல எழுந்து சொம்பல் முறிக்கையில் அவன் காதோரம் வந்து இவ்வாறு செப்பினாள் “இன்னிக்கு செக்கப் போனும்”

“நான் வரல! அம்மாவ கூட்டிட்டு போ”

“எப்பவும் நீங்க தான வருவீங்க” என அவள் கேட்கயில் அந்த வாக்கியத்தில் அத்துனை கனிவு‌.

“அதான் சொல்றேன்ல அம்மாவ கூட்டிட்டு போ” என அவன் கூறும் போதே முற்றத்தில் கொத்தி தின்ற புறாக்கள் தன் இணையை கூட்டிட்டு பறந்தன.

புறாக்களின் அந்த சலசலப்பை வாசுகி பெரிதாக ரசிக்க முடியவில்லை.

“என்னடா! காலையிலே கத்திட்டு இருக்க” என்று அவள் அதட்டலில் வளனுக்கு மற்றுமொரு சோம்பல் முறிப்பு.

“இன்னிக்கு செக்கப் போனுமாம்…
நீ கூட்டிட்டு போய்ட்டு வா”

“என்னடா புது பழக்கம்! புருஷனா லச்சணம் கூட்டிட்டு போ…

அடுத்த மாசம் விசேஷம் வேற வச்சு அவ அம்மா வீட்டுக்கு அனுப்பனும்

ஒழுங்க போய்ட்டு வா

நீ ரெடியா இருமா” இவ்வாறு வாசுகி தன் கூற்றை முடிக்கும் முன்பே தாயின் சொல்லை தட்டாது சென்றான்.

அன்று காக்கை கறைந்ததற்கு அது தான் காரணமோ என்னவோ பங்கஜம் அந்த காலை வேளையிலயே மஞ்சள் குங்கும முக வனப்போடு வந்துவிட்டாள். ‘வாசுகி வாசுகி’ என்று கத்திக்கொண்டே நுழைந்தாள்.

“ஏன்டிமா கிளம்பிட்டியோனோ” சொல்லும் போதே அந்த மஞ்சள் முகம் வெண்மதி யின் மதி வதனத்தில் விழுந்தது.

பங்கஜத்தை பார்த்தவுடனே வெண்மதியின் கண்கள் அவள் பாதங்களை தேடியது சாஷ்டாங்க நமஸ்காரமாக இல்லாவிட்டாலும் நமஸ்கரிக்க முன்வந்தாள் இருந்தும் அவள் ஆசிர்வாதங்கள் வெண்மதியை சேர என்றும் தயங்கியதில்லை.

“நாராயணா! சௌபாக்கியவதியா இருடீமா….

நல்ல வயிறு தெரிறதுடீ சாட்சாத் மகாலட்சுமிய தான் பிரசவிக்க போறடீ

ஜாக்கரதடீமா !” என்று கூறயிலே

“ஆமா பங்கஜம், புளிப்பே ஆகாதுங்குறானா பாரு….

சாக்லேட் தான் வாங்கி வாங்கி சாப்ட்றா

முகம் வேற ரொம்ப வெளரி போய்ருக்கு…

எனக்கும் பொம்பள பிள்ள தான் தோனுது”

வாசுகி இப்படி சொல்லி முடிக்கயில் காகம் கறைந்ததன் மற்றொரு காரணம் விளங்கிற்று.

வெண்மதியின் தோழி இன்முகத்துடன் வருவதை கண்டு வாசுகி வரவேற்றாள்.

“வாமா நல்லாருக்கியா ! பார்த்து ரொம்ப நாளாச்சு இப்ப தான் வழி தெரிஞ்சத….

சரி சரி ! மதி உள்ள தான் இருக்கா போ

நான் வெளிய கிளம்பிட்டேன்…

மதி!!!!

செக்கப் போய்ட்டு வந்து ஞாபகப்படுத்து பாதம் வேறமா வீங்கி சூடேறி இருக்குன்னல ஒத்தடம் கொடுக்கனும்

சரியா….” என்று கனிவுடன் விடைபெற்றாள் வாசுகி.

மாமியாரை வழியனுப்பிய கையோடு தோழியை வரவேற்றவள் சிறிது நாழிகை கூட இடைவெளிவிடாமல் தோழியின் பேறு கால அனுபவங்களை அத்துனை ஆச்சரியத்துடன் கேட்டாள்.

தான் பெண் பிள்ளை பெற்றெடுத்த அந்த அழகிய தருணங்களை வெகுவாக அளப்பரிந்தாள். “மாசா மாசம் மூனு நாள் சாகுரதுக்கு பிள்ள குட்டியா பெத்து போடுடலாம் என்னடீ!” “போடிங்கு லூசு” என மனம் விட்டு இருவரும் பேசி சிரித்து கொண்டிருந்தார்கள். உரையாடல்கள் நீண்டது சில பல அந்தரங்க சமாச்சாரங்களை நோக்கி பயணித்தது. ஒரு வழியாக உரையாடல் முடிவுரையை நெருங்கியது.

“அப்ப கண்டிப்பா பொம்பள பிள்ள தான்டீ” என்று எக்காள சிரிப்புடன் அவள் தோழி சொல்ல ஏதுவாக வளனும் அவ்விடம் வந்தான்.

அனைத்தையும் கேட்கவில்லை என்றாலும் குறிப்பறிதலின் குறிப்புகளை அவன் மூளையிலே குறித்து கொண்டான்.

அவனை பார்த்தவுடனே “பாப்பாக்கு காது குத்துறோம் நீங்க கண்டிப்பா வரனும்

உடம்ப பாத்துக்கோடி

வரேன்! வரேன்!” என ஒரு சேர இருவரிடமும் விடைபெற்று சென்றாள் மதியின் தோழி.

நேரம் மெல்ல கடந்தது மருத்துவமனைக்கு இருவரும் புறப்பட்டனர். அவளோ பிள்ளையை சுமக்க அவனோ பல குழப்பங்களை சுமந்தவாரே வந்தான். அவள் பேச்சுக்களின் சுவையை வளனின் செவி உண்ண மறுத்தது. ஒரு சிறிய கத்தி அவன் மன சுவற்றை உதிரம் சிந்தாது அருவியது.

இன்று அந்த கேள்வியை கேட்டே ஆக வேண்டும் என்று அவன் மனம் துடித்தது.

டாக்டரை சந்தித்த வேளையில் அந்த நிகழ்வை இவர்கள் பார்க்க வேண்டும் என ஆண்டவன் விதி செய்தானோ என்னவோ.
பார்த்து விட்டார்கள்.

“இங்க பாருங்க ஐப்பசி 13 சூர்யோதயத்துக்கு பிறகு துலா லக்னத்துல திருவாதிரை நட்சத்திரத்தில மிதுன ராசியில என் மருமகளுக்கு குழந்தை பிறக்கனும் என்ன பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு இந்த இதுல தான் பிறக்கனும் தயாரா இருந்துகோங்க”

“மேடம் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க
திஸ் இஸ் இம்பாஸிபிள்”

“போன வாரம் கிருஷ்ணமாச்சாரி மருமகளுக்கு பண்ணும் போது தெரிலயோனோ”

“பட் ! உங்க மருமக ஆரோக்கியமா இருக்கா ! தேர் இஸ் நோ நெஸஸிட்டி ஃபார் சிஸேரியன்”

“பட் சிட் லாம் தேவையில்லை

நீங்க பன்றேள் ! அதுக்கு எவ்ளோ வேணாலும் வாங்கிகோங்கோ!”

முகம் கொஞ்சம் சிவந்தது மெள்ள தன் இருக்கையில் அமர்ந்த மாத்திரமே எழுந்து மதியை அழைத்து சென்றார் டாக்டர்.

சில மருத்துவ சம்பிரதாயங்களை முடித்த பிறகு டாக்டர் சிரித்த முகத்துடன் வந்து வளனை நலம் விசாரித்தார்

நலம் தெரிவிக்க கூட நாழிகை செலவாகுமென்று சட்டென “டாக்டர் இஃப் யூ டோண்ட் மைன்ட் ! பொறக்கபோறது என்ன குழந்தனு தெரிஞ்சுக்கலமா” என்று குரல் ஒடுங்க மெல்லிய சப்தத்தில் கேட்டான்.

நடுவே தொலைபேசி டாக்டரை பதில் கூற விடாமல் தடுத்தது.

தொலைபேசியில் ஒரு செவிலியர் “டாக்டர் வார்டு நம்பர் ஃபைவ் ரதிதேவிக்கு லேபர் பெயின் ஆரம்பிச்சுருச்சு லேபர் வார்டுக்கு எடுத்து போயிடவ”

“லேபர் வார்டா! ஆப்ரேஷன் தியேட்டர் கூட்டிட்டு போ….
ஏற்கனவே அந்த டீன் என்ன புடிச்ச கத்துறான்

நீ கேசுவலா சொல்ற… திஸ் இஸ் தர்டு கிட் இதும் பொம்பள பிள்ள தான் சோ மேக் இட் அஸ் சிசேரியன் வித் டூபல் லிகேஷன்.

அந்த ஆள்ட சைன் வாங்கிட்டு
எபிடுரல் அனஸ்திஸியா குடுத்து ஆப்ரேஷன் ரெடி பண்ணி வை இதோ வரேன்

‘ஏய் அனஸ்திஸ்ஸிஸ்ட்டு லீவ் சோ பார்த்து ஒகே”.

இதை கேட்ட கனமே வயிற்றில் அந்த சிசுவுக்கு கூட ஓர் சின்ன மயிர்க் கூச்சம் பதமாக தன் தாயின் அடி வயிற்று சுவற்றை ஆழம் பார்த்தது. இருக அணைத்து அந்த இன்ப வலியை பொன்முறுவலுடன் அனுபவித்தாள் வெண்மதி. சக்ர வியூகம் சூட்சுமத்தை அறிய அபிமன்யு எடுத்த அந்த சலசலப்பும் சீதையின் வயிற்றில் உச்சு கொட்டி வால்மீகியின் கதா கலாட்சபேத்தை கேட்டு லயித்த குசலவர்களின் பரவசத்திற்கும் அந்த சிசுவின் தேக சிலிர்ப்பிற்கு என்றும் ஈடாகிவிடாது அப்படி நுன்னிய நகர்வுகளின் உணர்வுகளை அந்த சிசு கடத்திட்டதை இறைவனும் கூட கண்டு அதிசயித்து போயிருப்பான்.

இப்போது ஒரு சின்ன அசட்டு முகச்சுளிவோடு நிறுத்தி நிதானமாகவே உதட்டோர புன்னகையோடு பதில் சொன்னார் டாக்டர் “ஐ வில் மைன்ட்”

அதோடு நிற்காமல் மேலும் தொடர்ந்தார் “சி மிஸ்டர் வளன் ! ஜ திங் யு ஆர் அ ‘புரோகிராம் அனாலிஸ்ட் ‘ ரைட்டு”

தென் திஸ் குவெஸ்டின் இஸ் சிம்ப்லி ரிடிகுலஸ்

இன்னும் மூனு மாசம் பொறுத்துக்கோங்க.. அப்புறம் உங்களுக்கே தெரியும்.

அன்ட் ஷி இஸ் கம்ப்ளீட்லி ஃபைன் குழந்தையும் ஆரோக்கியமா இருக்கு

த சேம் டைட் அன்ட் மெடிசன்ஸ்

அதே ஃபாலோ பண்ணுங்க

அன்ட் ஒன் திங் ஃபோன்ல பேசுனது எதையும் மனசுல வச்சுகாதீங்க.” என மீண்டும் ஒரு அசட்டு முகச்சுளிவோடு ஒரு குறுஞ்சிரிப்பு.

“அது எங்களுக்கு தெரியாதா” என முனுமுனுத்து கொண்டே அயல் மொழியில் நன்றி கூறி மதியை அழைத்து சென்றான்.

மறுபடியும் அதே யோசனை பித்தம் தலைக்கேறியது மூளை கொஞ்சம் சூடேறியது வீட்டில் அவளை இறக்கி விட்டு அடுத்த நொடியே அவன் கண்கள் அலைப்பாய்ந்தது. என்ன செய்வதென இதயம் எகிறி துடித்தது. எனக்கு ‘பொம்பள பிள்ள தான் இப்ப என்ன செய்ய போற’ என மனக்கதவை திறந்து யாரோ கூக்குரலிட்டு கொண்டிருந்தார்கள். இரத்தம் கொதிநிலையின் அளவீடை தாண்டியது. பட்டம் படித்த நாகரிக மிருகம் அல்லவா ஆகயால் மனம் இப்போது இணையத்தை தேடியது கூகுளாண்டவனின் துணையை நாடியது.

தேடலின் உச்சத்தை அடைந்தான். எதோ ஒன்று கண்களில் சிக்கியது. சிக்கியதை விடுவதாக இல்லை. நேராக மருந்துக்கடை
கால்களில் இருந்த நடையின் வேகம் வார்த்தைகள் விழும் நாவில் இல்லை. தயங்கினான் கொஞ்சம் மயங்கினான் பிறகு நெஞ்சுரம் கொண்டு. ‘மிஃப்டிஸ்ட்ரோன், மிசோபிர்டோல்’ இருக்கா என்றான்.

“ஆஆஆன் என்னாது”

“மிஃப்டிஸ்ட்ரோன், மிசோபிர்டோல் வேனும்”

கடைக்காரன் ஏற இறங்க அவனையே வெறித்தான் “டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருக்க”

“இல்ல!!” என்றான். அந்த ஒற்றை வார்த்தையில் அவன் ஜீவனும் அடங்கியது.

“ப்ளிஸ் சார் தாங்க” என்று கெஞ்சினான்.

“சார் அப்டிலாம் தர முடியாது” என. கடைக்காரர் கூறியவுடன் மொத்த உலகை தோற்ற தொனியில் செல்ல முற்பட்டான். தன்னையே தோற்று அற்ப பிறவியானவனுக்கு உலகை தோற்ற தொனி தேவை இல்லை தான் இருந்தும் அதை உருவகப்படுத்திக் கொண்டான்.

சென்றவனை ஒரு குரல் தடுத்தது. அது அந்த கடைக்காரனின் குரல் தான்.

“எத்தன மாசம்” என்றான்

நிரை மாதம் என்று சொல்லிடாதே என்று அதே மனக்குரல் ஒலித்திட “நாலு மாசம்”

“நாலு மாசமா…. பிரிஸ்கிரிப்ஷன் இல்லாம தந்தா ஓனர் திட்டுவாரு

பக்கத்து தெருல நாட்டு மருந்து கடை இருக்கு அங்க போய் கருக்கலைப்பு மாத்திரை வேனும் தேவா அனுப்புன்னு சொல்லுங்க”

அட கொடுமையே அந்த சண்டாளன் கடையை திறந்து தான் வைத்திருக்க வேண்டுமா! மனிதத்தை கலட்டி வைத்து விட்டு திரியும் ஐந்தறிவுக்கு அன்று நினைப்பதெல்லாம் நடக்கத்தான் வேண்டுமா… அந்த ஆலகால விஷத்தை வாங்கிய போது அந்த முகத்தில் வெளிப்படும் முறுவலை பார்த்த போது
அத்துணை அருவருப்பு. காலில் மிதிபட்ட அசிங்கத்தை போல ஒர் அயர்வு.

மெள்ள தான் தினவெடுத்து தேடி எடுத்து கொண்டு அந்த நாட்டு மருந்தை யாருக்கும் தெரியாதவாறு காய்ச்சிய பாலில் கலந்தான்.

தன் பிள்ளையை கொல்ல தானே கால் கடுக்க பாலை காய்சிவிட்டு சென்றாளோ பாதகத்தி. அவள் காய்ச்சியதை அவளுக்கே
பரிசளிக்க இப்போது எடுத்து செல்கிறான்.

அந்த பாலை பவ்வியமாக மதியிடம் கொடுத்தான். அவன் கண்களில் வெளிப்பட்ட கொலையுணர்வு அவள் காதல் கண்களுக்கு ஏனோ அது புலப்படாமலே போனது. பாலை வாங்கி சொட்டு மிச்சமில்லாமல் குடித்தாள்.

கொஞ்ச நேரம் கண் சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென “உனக்கு இந்த குழந்தய பெத்துகுறது பிடிக்கலயா” என்றாள்.

அதை கேட்ட கனமே அவன் சப்த நாடியும் ஒடுங்கியது. “ஏய் என்ன உளர்ற… பேசாம தூங்கு” என்று நகர்ந்தான்.

அவள் கேட்ட கேள்வி ஒரு பக்கம் சஞ்சலத்தை ஏற்படுத்தினாலும் அவன் மனம் நிறைந்து காணப்பட்டது மற்றோரு கணம் குற்றவுணர்ச்சியில் சுருங்க எத்தனித்தது.

நகர்ந்தவன் இருக்கையில் அமர வாசுகி டம்ளர் நிரம்ப பால் எடுத்து வந்து கொடுத்து அவன் அருகிலேயே அமர்ந்தாள்.

அவன் குடித்து முடிக்கும் வரை அவனயே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் குடித்து முடித்தவுடன் தன் இன்முகத்தில் பொன் முறுவலிட்டாள்.

தீடீரென “மா!!!!” என்று கத்தினான் அல்லையை எதோ ஒன்று கவ்வியதை உணர்ந்தான். அவன் கதறல் முற்றத்தில் பறந்த புறாக்களால் கூட கேட்க முடியவில்லை.

“என்ன காரியம் பண்ண பார்த்த வளன்” என்று அவள் கேட்கும் போதே அவனிடம் இருந்தது அரை உயிர் தான். இதை கேட்கும் போது வாசுகி மிகவும் கூனி குருகி இருந்தாள்.

இப்படி ஒரு பிள்ளையை பெற்ற பாவத்தை எங்கனம் சென்று கழுவுவாள். அன்று வயிற்றை கழுவி இருந்தால் இப்படி ஒரு உயிரினம் ஜனிக்காமல் கிடந்திருக்கும். அவனை எண்ணுகயில் அவள் உடம்பே நடுங்கியது அவனுக்கு பாலுட்டிய மாரை அறுத்து எறிய துடித்ததாள் அவனை பெற்றேடுத்த உருப்பை பொசுக்கிட துடித்தாள் ஈரய்ந்து மாதம் சுமந்த கருவறை உருவி எடுத்திட துடிதத்தாள். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வர.

“நீ என் வயித்துல தான் பிறந்தியா ! ச்சீ !!!

உன்ன பிள்ளயா பெத்தத நினைக்கும் போது அருவருப்பா இருக்கு” என்று காரி உமிழ்ந்தாள்.

“என்னடா நம்ம அவளுக்கு கொடுத்தது நமக்கு எப்படி வந்துச்சுனு பாக்குறியா!

கண்டிப்பா தெரிஞ்சகனுமா !!

நீ இனி எதையும் தெரிஞ்சுக்க வேனாம்”

என்று‌ கூறி கேசத்தை அள்ளி முடிந்து நகர்ந்தாள்.

கலந்த பாலை அவன் இமைத்த கணம் அவள் மாற்றியத்தை அவன் அறிந்திருக்க மாட்டான். தனக்கு பிறக்க போகும் பிள்ளை ஆணா பெண்ணா என்று அறிய இருப்பானா என்றும் அறிந்திருக்க மாட்டான். அதை அவன் அறிய இப்போது அவன் விளையவில்லை. பாபுவின் வாக்கியங்கள் இப்போது தான் அவன் காதை எட்டியது “பொன்னுங்க தான்டா நம்மக்கிட்ட கடைசி வரைக்கும் அன்பா இருப்பாங்க. பொன்னுங்க பாத்துக்குற எந்த அப்பா அம்மாவும் முதியோர் இல்லம் போனதா சரித்திரம் இல்ல” என அவன் காதுகளை வட்டமிட்டது.

உயிர் ஒடுங்கிய அந்த தருணத்தில் அவன் நா ஒன்றை மட்டுமே முனுமுனுக்க முயற்ச்சித்தது “மா என்ன மன்னிச்சிடு மா என்ன மன்னிச்சிடு!!!!”

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

பச்சை தோல் மேனியவள்

பச்சை தோல் மேனியில் என்னவென்று தேடுவேன் இனிபையா புளிப்பையா…

எத்துணை முறை கோபம் கொண்டாலும் இவள் மூக்கு மட்டும் சிவப்பதேயில்லை…

வெட்டி வைத்த இதழில் உப்பு காரம் சேர்க்கையில் அவள் கொள்ளை அழகு..‌.

பார்வதி மைந்தனின் கையில் கனிந்தவளோ
இப்படி ஏகத்துக்கும் இனிக்கிறாள்…

மதுரை மாமண்ணெடுத்து வைகையாற்று நீர் சேர்த்து தென்மேற்கு தென்றல் அசைய பிறந்தவளோ…

மூன்றாம் பிறை நிலா வெட்டு போல அவள் கிடக்கயில் மனம் லயிக்கிறது…

பார்த்தவுடன் எச்சில் ஊறுகிறது ஏனோ
சுவைத்தவுடன் முகம் சுளிகிறது…

அவள் சுவையின் அளவீடுகளை அளக்க அளவீடு காணக் கிடைக்கலயே…

அவள் உண்ணயில் புளிக்கிறவள் நான் உண்ண மட்டும் ஏனோ இனிக்கிறாள்…

அவள் சுவைத்திட்ட மாங்கனியும் கூட தேம்பாவனியாய் இனிக்கிறது….
– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

காதலின் ஆழம்

`வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வாழ்க்கைத் துணையை திரும்பத் திரும்ப, ஏராளமான முறை காதலிக்க வேண்டும்’ – திருமண வாழ்க்கைக்குப் புது அர்த்தம் சொல்லிச் சென்றிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மிக்னான் மெக்லாஹ்லின் (Mignon McLaughlin). வாழ்க்கைத்துணையின் மேல் கடைசிவரை காதல் இல்லாமல் போவதுதான் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். வாழ்க்கையில் பல தருணங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருப்போம், மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்போம், எரிச்சலுக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருப்போம்… இவற்றையெல்லாம் நாம் திரும்ப நினைத்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நமக்கு ஒளிமயமான, அழகான, அற்புதமான ஒரு காலம் இருந்திருக்கும். அதைத்தான் அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். மண வாழ்க்கைக்கு இந்த மனப்பான்மை மிக மிக அவசியம். நம்மில் யாருமே மிகச் சரியானவர்கள் கிடையாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குறை நிச்சயமிருக்கும். அந்தக் குறைகளோடு நம்மை அங்கீகரிப்பவர்கள்தான் நம்மிடம் மாறாத நேசம் கொண்டிருப்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதற்குத் தேவை விட்டுக்கொடுத்துப் போகும் மனோபாவம். விட்டுக்கொடுத்துப் போவது நம் எல்லோருக்குமே எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் கதை இது.

அது, ஒரு தேவாலயம். அன்றைக்கு அங்கே ஒரு திருமணம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை இளைஞன், கருநீல பேன்ட்டும், கோட்டும் அணிந்து கந்தர்வனைப்போல் காட்சியளித்தான். மணப்பெண், வெள்ளை நிற கவுனில் ஒரு தேவதையாகத் தெரிந்தாள். இருவரும் அழகோ அழகு! `பொருத்தமான ஜோடி’ என்று வந்தவர்களெல்லாம் பேசிக்கொண்டார்கள். இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். நட்பாக ஆரம்பித்த உறவு, திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. இருவருக்குமே வாழ்க்கைத்துணை பொருத்தமாக அமைந்தது என்கிற எண்ணம் ஒரு பெருமிதத்தைத் தந்திருந்தது.

சில மாதங்கள் கழிந்தன. ஒரு மாலை நேரம். அந்தப் பெண் தன் கணவனிடம் வந்தாள். “ஏங்க ஒரு விஷயம்…’’

“சொல்லுப்பா…’’

“இன்னிக்கி ஒரு பத்திரிகையில ஒரு கட்டுரை படிச்சேன். அதாவது, `உறுதியான திருமண வாழ்க்கையை மேற்கொள்வது எப்படி?’-ங்கிறதுதான் அந்தக் கட்டுரையோட தலைப்பு. அதுல ஒரு முக்கியமான பாயின்ட் சொல்லியிருந்தாங்க…’’ அவள் தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்ந்தாள். “உங்களுக்கு என் மேலயோ, எனக்கு உங்க மேலயோ எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துற விஷயங்களையெல்லாம் ஒரு லிஸ்ட்டா எழுதணுமாம். அதைப் படிச்சுப் பார்த்துட்டு, அந்தக் குறைகளையெல்லாம் எப்படிச் சரிபண்றதுனு ரெண்டு பேரும் பேசித் தீர்க்கணுமாம். அந்தக் குறைகளையெல்லாம் களைஞ்சுட்டாலே நம்ம திருமண வாழ்க்கை அற்புதமானதா மாறிடுமாம்…’’

காதல்

கணவன், அவள் சொல்வதை கவனமாக `உம்’ கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“நாம ரெண்டு பேரும் அப்படி ஒரு லிஸ்ட்டை எழுதுவோமா… நான், எனக்கு உங்க மேல இருக்குற குறையையெல்லாம் பட்டியல் போடுறேன். அதே மாதிரி நீங்களும் என்கிட்ட பிடிக்காததையெல்லாம் எழுதுங்க… என்ன ஓ.கேவா?’’

கணவன் அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் தனித்தனி அறைக்குள் நுழைந்தார்கள். மனைவி, தன்னை கணவன் எரிச்சல்படுத்திய, கோபப்படுத்திய சம்பவங்களையெல்லாம் அசைபோட்டாள். அவனிடம் அவளுக்குப் பிடிக்காததையெல்லாம் ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். கணவனும் மனைவியிடம் பிடிக்காததையெல்லாம் யோசித்தபடி இருந்தான்.

அடுத்த நாள் காலை, இருவரும் காலை டிபன் பொழுதில், டைனிங் டேபிளில் சந்தித்துக்கொண்டார்கள். “என்னங்க… நேத்து நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல… லிஸ்ட் ரெடி பண்ணிட்டீங்களா?’’

`ஆமாம்’ எனத் தலையசைத்தான் கணவன்.

“முதல்ல நீங்க லிஸ்ட்டைப் படிக்கிறீங்களா, நான் படிக்கட்டுமா?’’

“நீயே படி.’’

அவள் அந்த பேப்பரை எடுத்தாள். கிட்டத்தட்ட மூன்று பக்கங்களுக்கு அவளிடம் `குறைகள் பட்டியல்’ இருந்தது. அவள் கணவனிடம் அவளுக்குப் பிடிக்காத ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க ஆரம்பித்தாள். அவள் படிக்கப் படிக்க, கணவனின் கண்களில் நீர் நிறைந்துபோனது. அவன் முகத்தைப் பார்த்தவள், “என்ன ஆச்சு?’’ என்று கேட்டாள்.

கணவன் மனைவி

“ஒண்ணுமில்லை. நீ படி…’’

அவள் மேலே தொடர்ந்தாள். தன் கையில் வைத்திருந்த மூன்று பக்க குறைப் பட்டியலையும் படித்து முடித்தாள். பிறகு, அந்த பேப்பரை மடித்து, கணவனிடம் கொடுத்தாள்.

“சரி… இப்போ நீங்க உங்க லிஸ்ட்டை எடுத்துப் படிங்க. அப்புறமா ரெண்டு பேரும் பேசி, ஒரு முடிவுக்கு வருவோம்…’’

கணவன் சொன்னான்… “நீ வெச்சிருக்குற மாதிரி என்கிட்ட எந்த லிஸ்ட்டும் இல்லை. நான் முதன்முதல்ல உன்னை எப்படி அன்போட, காதலோட பார்த்தேனோ அப்படியேதான் இப்பவும் நீ இருக்கே. எனக்காக நீ எதையும் மாத்திக்கவேண்டிய அவசியமில்லை. நீ அழகானவ, அன்பானவ. எனக்காக உன்னோட எந்த நடவடிக்கையையும் மாத்திக்க வேண்டாம். ப்ளீஸ்…’’

அவளுக்கு அப்போதுதான் தன் கணவன், தன் மேல் வைத்திருக்கும் அன்பின், காதலின் ஆழம் புரிந்தது. இப்போது அவள் கண்களிலும் நீர் திரள ஆரம்பித்திருந்தது.

சிலிர்க்கும் சிற்பம்

சிலிர்க்கும் சிற்பம்

அரூபமான அந்த அறையில் நடப்பவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிற்று போலும். பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. வெளிரிய முகம் முறுக்கிட்ட மீசையின் மழுங்கள் என்று நலன் முகம் பல அமானுஷ்யங்களை கவ்வியிருந்தது. ஆனால் நலனுக்கு இப்போது எந்த பயமும் இல்லை மாறாக பயத்தை தாண்டி ஒரு குழப்பம் அவனுள் கர்ஜித்து கொண்டே இருந்தது பாவம் என் செய்வான் காலச்சக்கரத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கிறான் தற்போது இந்த அறையில் சிக்கி முழி பிதுங்கி நிற்கிறான். நடப்பவை அனைத்திற்கும் தான் தான் விடை என்று ஒருவாறு கணித்து விட்டவன் அந்த விடையின் வினாவுக்காக மூளை நரம்புகள் புடைக்க யோசித்து கொண்டு இருக்கிறான்.

எதற்காக இங்கு வந்தோம் யாருக்காக காத்திருக்கிறோம் என்று முற்றும் மறந்துபோனது. தன் தொல்லியல் வித்தகன் லெனினுக்கு ஆபத்து என்று இங்கு வந்தோம் ஆனால் அக்கம்பக்கத்தினர் அவன் இரண்டு வாரத்திற்கு முன்பே இறந்துவிட்டான் என்கிறார்கள். ஆளில்லாத தனிகாட்டின் நடுவே ஒரு பல இரகசிய அமானுஷ்ய அறைகள் கொண்ட ராஜிய மாளிகையில் தன்னந்தனியே வசித்தவன் இன்று தங்களை தவிக்கவிடுகிறானே. என்னோடு வந்த நாதன் வளவன் முகிலன் ஆகிய மூவர் எங்கே எல்லோரும் தனித்தனியே மாட்டிக்கொண்டார்களா. நான் எந்த அறையில் இருக்கிறேன் லெனின் அந்தரங்க தொல்லியல் ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறோனோ என்னவோ தெரியவில்லையே இங்கு தானே கடந்த மாதம் வந்த போது ஒரு சிலையை உடைத்தோம். லெனினின் கோபத்திற்கு கூட ஆளானோம் மறுபடியும் இந்த அர்த்த ஜாமத்தில் கும்மிருட்டில் இங்கு வந்துவிட்டோம் அவன் நம்மை நன்றாக திட்ட போகிறான். ஒ அவன் தான் இறந்துவிட்டான் என்கிறார்களே என்று கண்கலங்க அவனை நினைத்து கொண்டே மெள்ள நகர்ந்து அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் தொட்டு பார்த்து உணர்ந்தான். இருட்டில் கண் பார்வை தெரியுமளவுக்கு அவனது கண்கள் வவ்வா கண்கள் அல்லவே. சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் பயன்படுத்திய வாள்கள் ஆபரணங்கள் எல்லாம் மின்னியது அது ஒருவகை ௐளியையும் கிளப்பியது. ஏற்கனவே கற்சிலையிடம் சண்டையிட்ட வாள் அவன் கைகளில் தான் இருந்தது. அதை இன்னும் இறுக பிடித்தான்.

அந்த வாள் ஓர் அதி அற்புத வாளென்று அவனுக்கு தெரியாது, எப்படி தெரியும் அதை நாண் பூட்டி வில்லில் அம்பாக எய்யும் சூச்சமத்தை அவன் எப்படி அறிந்திருக்க முடியும்.

காலடி தடங்கள் எங்கே பதிகின்றதென தெரியவில்லை மூச்சின் கூறுகள் எங்கு செல்கின்றன எனவும் அவனுக்கு புரியவில்லை அப்படியே நடக்கலானான் சட்டென கால்கள் எதையோ கண்டுபிடித்தது.

அது ஒரு இரத்தம் தெரித்த ஓலை என்று தொடுவுணர்வில் உணர்ந்தான் நலன். என்ன ஓலை யார் எழுதியது யாரை பற்றி எழுதியது யாருக்காக எழுதியது என மனம் சஞ்சலமடைந்தது, பின்பு இது கூட அடையாத மனம் என்ன மனம்!.

ஒருவேளை நம்மை பற்றி எழுதியிருக்கலாமோ இந்த விடைக்கு வினா கிடைக்குமோ என்று அவனுக்கு தோன்றியது. தவறான யோசனை ஹூம் என்ன செய்வது விதி வலியதல்லவா. வெளிச்சம் எங்கே என்று தேடும்போது சரியாக ஞாபகம் வந்தது வாள்கள் கிடத்தப்பட்ட இடத்தில் மாணிக்க ஹாரத்தின் வெளிச்சம் வழி கொடுக்கலாம் என்று வந்த வழி சென்றான். அதுவரை சிலந்தியின் சினுங்கல்களும் கொசுக்களின் ரீங்காரமும் இட்ட அவ்விடத்தில் அமைதி பரவியது. திடிரென ஒரு நீண்ட நிசப்தம் அவன் வியர்வை துளி மண்ணில் வீழ்ந்து சிதறிய ஒலியை கூட கேட்குமளவுக்கு அப்படி ஒரு அமைதி.

தூரத்து அறையின் கதவு பட்டென்று திறந்து மூடி திறக்க சட்டென்று பலத்த மூச்சு அவன் கழுத்தருகே பாய்ந்தது யாரென்று தெரியவில்லை மூச்சின் சூடு அதிகமாகவே இருந்தது மெதுவாக அவன் கைகளை கழுத்தருகே வைத்தான் சில்லென்று சில்லிட்டது இரத்ததின் சூடு கூட தெரியவில்லை. என்ன நடக்க போகிறது என்று அவன் மனம் பதைபதைத்தது. எச்சிலை முழுங்க விடாமல் தொண்டைகுழி கூட சதி செய்தது.

படார் என அவன் பின்னந்தலையில் ஓர் பலத்த அடி நிலை தடுமாறி கிழே விழுந்தான். எங்கே கிடத்தப்பட்டோம் என்று அவனுக்கு தெரியவில்லை. உடம்பு எதோ ஒன்றால் அழுத்தப்பட்டது கால்கள் அமுக்கப்பட்டது கைகள் இழுக்கப்படடது ஆனால் கண்கள் வெறி கொண்டு விழித்து கொண்டிருந்தது.

கண்களில் படர்ந்த நரம்புகள் தெறித்தன உடலோடு சேர்ந்த தலையும் அவ்விடமே இருந்தது ஆனால் அந்த கண்கள் மட்டும் எதையோ காண துடித்தது இல்லை இல்லை எதையோ காண வைக்க தயாராக்கப்பட்டது.
இரு கண்கள் மட்டும் இருளில் அலைந்தது இமையில்லை இமைதாங்கிய புருவங்களும் இல்லை கண்கள் லேசாக வியர்த்தது.

டக் டக்

டக் டக்

என ஒரு ஒலி யானையின் பிளிறல் கூக்குரல் ஓலம் செண்டை மேளங்களின் முழக்கம் என எந்த இசை வகைப்பாட்டிலும் சேராத ஒரு ஒலி.

கருவிழிகள் அசைந்தன வெள்ளை முழி மறுத்தன. சட்டென ஒரு முகம் இருளில் இருந்து வெளிபட்டு கண்களுக்குள் வந்து நின்றது. நல்லவேளை கண்கள் மட்டும் தான் இதை உணர்கிறது உடலோடு இருந்திருந்தால் பயத்தில் முகிலனின் ஆவி கண் வழியே சென்றிருக்கும்.

முகத்தில் வெட்டு காயங்கள், காயங்களில் இரத்தம், இரத்ததில் சில அரூபங்கள் என முகங்கள் மாறியது அவன் கண்களை சுற்றி வட்டமிட்டது. எதோ ஒன்றை மொழிந்து கொண்டே இருந்தது எல்லாம் அவன் கேட்டது தான் சேவிகள் உடம்பிலே இருந்தாலும் உணர்கிறது அவன் கண்கள் மெள்ள.

வட்டமிட்ட முகங்கள் அவன் பழகிய முகங்கள் தான் முகங்கள் மொழிய தொடங்கின எல்லாம் அவன் கேட்ட அதே வாக்கியங்கள்

“யாமறியான் யாறுமறியா வினா அதற்கு விதியே விடை” லெனின் அலற

“காற்றிலே கரைந்திடும் கலையையும் கற்று மித்திரன்

மனம் கொண்ட
மனம் வென்று
மனம் கொன்ற

கயவனை கொள்” என்று முகிலன் உறுமினான்.

“யாம் என் இரக்கம் தொலைத்தனன்
எவன் எம் உறக்கம் கலைத்தனன்
நரனவன் இரத்தம் பருக காத்திருந்தனன்

தீண்டா கற்சிலை திண்டிய கயவனெவன்
சித்தம் கெட்டதோ
சீண்டப்பின் விதி எழுதினென்
முடிந்தது
இறக்ககிடவாய்” என வளவன் பதற

“பயனற்ற முடிவாம் நும்சிந்தை காட்டுவது
யாமுனக்கு வேண்டியன செய்வோம்
யான் சொல்லும் வாக்கை கேட்டிடு

கேட்க மறுப்பின் உடலாய் நின்னயும்
உயிராய் நட்பையும் இழப்பாய்” என்று நாதன் கதறினான்.

வட்டம் பெரிதானது விசை வேகமெடுத்தது
கண்கள் சரட்டென்று உடம்பில் சென்று ஒட்டியது உடம்பின் அனிச்சைகள் அலறியது. கண்கள் உணர்ந்தததை உடம்பு அறியாததால் கொஞ்சம் தைரியம் வந்தது குருதியில்.

“ஏய் யார் நீ?

உனக்கு என்ன வேனும் ?

சும்மா பூச்சாண்டி காட்டாத?

வா முன்னாடி வா?” என்று நரம்பு வெடிக்க கத்தினான். இருந்தும் இதை மும்முறை கூற நேர்ந்தது மெதுவாக ஒரு உருவம் நடந்து வந்தது ஒரு விதமான சிதிலமடைந்த சிலை அது. உடைந்த சிலை, அவர்கள் உடைத்த சிலை, நடப்பதை கண்டு ஒருவாறு அல்லை கவ்வியது அவனுக்கு.

ஒரு ராஜ சிரிப்பேரொலி ஹா ஹா ஹா ஹா ஹா என்று எதிரொலித்தது.

“கிலி கொண்ட கயவனிடம் யாம் பொழிப்பதில்லை”

“நீ யாரு” வாளை கைகளில் இறுக்கி கொண்டே கேட்டான்.

“ஹா ஹா ஹா ஹா ஹா ஹா” என்று முகத்தை அருகில் கொண்டு வந்தது சிலை.

சிலையின் முகத்தில் அப்படி ஒரு சிற்பக்கலை அடடா போட வைத்தது ஆனால் அதை ரசிப்பதற்கு இது நேரமல்ல முகிலனும் அதற்கு தயாராக இல்லை.

“நான் நான் ஹா ஹா ஹா

கொங்கு நாட்டு மாமன்னன்

கேசரிமார்புடைத்த

‘விற்போரர்ர்ர்ர் களங்கண்டான்ன்ன்ன்ன்’
‘களங்கண்டான்ன்ன்ன்ன்’
‘களங்கண்டான்ன்ன்ன்ன்’

“சரி உனக்கு என்ன வேனும்”

“எனக்கு உயிர்கள் வேண்டும்
என் புகழ் பரந்திட வேண்டும்”

“என்ன உலர்ற”

“ஹா ஹா ஆம் உங்கள் உயிர்களில் தான் இருக்கிறது என் புகழ்”

“சுத்தமா புரில”

“சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தன் பராக்கிரமத்தால் மூவுலகத்தையும் கட்டி ஆண்ட சேர மன்னன் சேரன் செங்குட்டுவனின் சைன்யத்தில் இரண்டு சிற்றூர்களை ஆண்ட குறு நில மன்னன் நான்.

செங்குட்டுவனின் படைபலம் போர் பலம் முறுக்கிய திமிர் நிமிர்ந்த செருக்கு வஜ்ர தேகம் என எப்போதும் செங்குட்டுவனின் பேராண்மையை அனு அனுவாக பார்த்து அவனை போன்று ஆட்சி செய்ய வேண்டும் அவன் ஆட்சி செய்தவற்றையெல்லாம் ஆட்சி செய்ய வேண்டும் என தீராத தாகம் கொண்டவன் நான்.

ஒரு முறை இளங்கோ வடித்த காப்பியத்தின் பேரில் பேரன்பு கொண்டு கண்ணகியின் மீது பக்தி கொண்டு அந்த கற்புக்கரசிக்கு சிலையெடுத்து கோயில் கட்ட விரும்பினான் அதற்காக இமயம் சென்று தன்னை இகழ்ந்த வடநாட்டு வேந்தன் கனக விசயனையே அடிமையாக்கி அவன் தலையிலே இமயமலையின் கற்களை சுமக்க செய்து கொங்கு நாட்டின் நில பரப்பில் கோயில் எழுப்ப திட்டமிட்டான்.

இமயகற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை அதனில் எதை வடித்தாலும் அழியா புகழ் கொண்டிருக்கும் என கேட்டறிந்தேன். நாட்டின் கைதேர்ந்த சிற்பிகள் ஒன்று கூடி செதுக்க தொடங்கிய வேளையில் இமயகற்களின் ஒரு பகுதியை களவாடி வந்தேன். என் நாட்டு சிற்பிகளை கொண்டு இப்படி….. இப்படி…… இப்போது நீ பார்கிறாயே…… என்னை இப்படிதான்….. அனு அனுவாக செதுக்க செய்தேன்.

செங்குட்டுவனின் புகழ் மழுங்க என் சிலையை பார் போற்ற வடித்த சிலையை நிறுவ செய்த நன்னாளில் என் குல எதிரி செங்குட்டுவனின் காலாள் வில் படை தளபதி நன்னன் நலங்கிள்ளி என்னை சிறைபிடித்தான் தன் மாமன்னன் புகழ் மேலும் வாழிய என்று இமயகற்களை களவாடி சிலை வடித்ததற்காக குற்றம்சாடினான். ஏற்கனவே பல களப்போர்களில் என் மீது கொண்ட பெரும் காழ்புணர்ச்சியில் தன் கூட்டம் கொண்டு தன் ஆசையை தன் ஆசையை நிறைவேற்றினான்ன்ன்ன்ன்ன்ன்…….

கழுவிலேற்றி ஆயிரம் விற்போர் வீரர்களை கொண்டு எனது உடம்பினை துளைத்தான் உயிரற்ற எனது உடலை வில் படுக்கையாக்கி எனது சிலையையும் எனது உடல் மேல் வைத்து ஆழ குழி தோண்டி புதைத்து பெரு மூச்சுவிட்டான் அந்த நலங்கிள்ளிளிளிளிளி.

எனது உயிர் அங்கே சுற்றி திரிந்தது எனது உடல் ஆரூபமானது பின்பு எனது உயிர் எனது சிலையை
ரசித்தது
பிடித்தது
துளைத்து
நின்றது. அன்றிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீள் தூக்கத்தில் இருந்தேன். உனது ஆருயிர் தோழன் எனது துயில் கலைத்தான்.”

குரல் தழுதழுத்தது நலனுக்கு வார்த்தைகள் வர மறுத்தது இருந்தும் மொழிந்தான் “சரி அவன் பண்ணத்துக்கு நான் மன்னிப்பு கேக்குறேன் அவன் உயிர தான் எடுத்துகிட்டில அப்புறமென்ன ஏன் எங்கள சித்ரவதை பண்ணுற”

“ஹா ஹா ஹா உறக்கம் கலைந்த எனக்கு பழிக்குபழி வாங்கும் உணர்வு பீறிடுகிறது மேலும் பேராசை தொற்றிக்கொண்டது
எனது சிலையை பார் போற்ற வேண்டும் அல்லவா! அதற்கு முன் எனை பழித்தீர்த்த நலங்கிள்ளியின் வம்சமான உன்னை உன்னை எனக்கு பலி கொடுக்க வேண்டும்

சித்திரை பௌர்னமி நன்னாளில்
உன்னை உன் மூவர் அறுத்து
ரணமெடுத்து எனது
சிலையில் ஊற்றி தீர்த்து எனை குளிர்வித்து என் புகழை உன் மூவர் ஏந்தி பரப்ப வேண்டும்

ஹா ஹா ஹா…….

பரப்ப வேண்டும்”

பேரதிர்ச்சியின் பெரும்துளையில் முகிலன் முகம், உடல் நடுக்கம் வேறு ஆனால் வலக்கை கம்பீரமாக வாளை இறுக பிடிக்க இடக்கை ஓலைச்சுவடிகளில் தெறித்த உதிரத்தை பிழிந்தது.

‘சித்ரா பௌர்ணமி’, ‘விற்போர்’, ‘சிலை’, ‘மூவர்’ என வார்த்தைகள் அனைத்தும் அவன் காதுக்குள் ரீங்காரமிட்டபடி அங்கேயே மயங்கி விழுந்தான்.

விடிவதற்கு சூரியன் தயாரானான் அன்று இரவு சித்திரை மாத நட்சத்திர கூட்டத்தில் முழுநிலவாக மின்னுவதற்கு கொஞ்சம் உறக்கம் தேவை என சந்திரன் விடைப்பெற்றான்.

நண்பகல் சூரியன் சுட்டெரிப்பதை கூட பொருட்படுத்தாது ஒருவர் மேல் ஒருவராக மூவரும் கிடத்தப்பட்டனர்.

ஒவ்வொருவராக கண் விழித்தனர். மூவரும் ஒரு சேர ‘நான் நலன கொல்ல போறேனாம்’ என்றனர். அதை கேட்டதும் முழி பிதுங்கிற்று மூவருக்கும். ‘நலன் எங்க’ ‘நலன் எங்க’ என்று தேட தொடங்கினர். லெனினின் இரகசிய தொல்லியல் மயங்கி கிடந்தவனை மூவரும் கண்டு கொண்டனர். நலனுக்கு மயக்கம் தெளிய வெகு நேரமானது.

மயக்கம் தெளிந்தும் அந்த வாளை அவன் விடுவாதாயில்லை. ஏதோ ஒரு உள்ளுணர்வு அதை இன்னும் இறுக பிடித்து கொண்டான். பதட்டத்துடன் மூவரும் அதே வாக்கியத்தை மறுபடியும் நலனிடன் உச்சரித்தனர். இதை கேட்ட நலனுக்கு பெரிதாக எந்த அதிர்ச்சியும் இல்லை இருந்ததும் சட்டென ‘சித்ரா பௌர்ணமி என்னைக்கு’ என்றான்.

பதறி எழுந்து ஓடினான், அந்த மாளிகையை சுற்றி தேடினான். நாட்காட்டி இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. மாளிகையை விட்டு ஓடினான் அவனை துரத்தி மூவரும் ஓடினர். மணி துளிகள் மெள்ள மாலை பொழுதை நெருங்கியது. அந்த மேற்கு தொடர்ச்சி மலையோர காடுகளில் சுற்றி திரிந்தான். திடிரென்று ஒரு சைவ சித்தர் அவனை நோக்கி வந்தார். “இன்று சித்திரை திங்கள் முழுமதியாம். உன் வாளுக்கு உளி தேவை அந்த உளிக்கு பிநாகம் தேவை இவையனைத்துக்கும் நீ தேவை செல் அங்கே” என்று அடர்ந்த காட்டின் நடுவே உள்ள ஓரு பழமையான பாழடைந்த சிவாலயத்தை சுட்டி காட்டினார் அதை பார்த்து திரும்புகையில் சித்தர் சித்தமானார்.

விரைந்து சுட்டி காட்டிய இடத்தை நோக்கி ஓடினான். எப்படியோ சிவனை தஞ்சமடைந்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது. வானத்து நட்சத்திரங்களை சிதறி தள்ளி முகிலின் முகட்டில் முழுநிலவு மிளிர தொடங்கியது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கிருந்த நந்தியின் சிலையருகே உட்கார்ந்து சிவனை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்.

சில காலடி சத்தம் படபடவென அவன் காதில் விழுந்தது வாளை இறுக்கி பிடித்து சத்தம் வந்த திசையை நோக்கினான் மித்ரர் மூவரும் அவனை நோக்கி வந்தார்கள்.
மித்ரர்களை பார்த்தவுடன் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டபடி “இப்ப என்னடா பன்றது” என சித்தர் சொன்ன சிவ வாக்கியத்தை அர்த்தம் மாறாது ஒப்புவித்தான்.

மூவர் முகமும் மாறியது, நலனை வலம் சுற்றலானார்கள். வாய்விட்டு பலமாக சிரித்தனர். நலன் வெகுவாக புரிந்து கொண்டான். வாளை இறுக்கி பிடித்து கொண்டான். சுற்றி வந்தவர்கள் மெள்ள மெள்ள சிலையானார்கள். சிலிர்த்துக் கொண்டே மூன்று சிலையும் அவனை பார்த்து சிரித்தார்கள். டக் டக் கென்று மற்றொரு காலடி சத்தம். மூன்று சிலையும் பேச தொடங்கியது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை கூறியது.

‘ராஜ மார்த்தாண்ட’
‘ராஜ கம்பிர’
‘ராஜ குலதிலக’

“ஹா ஹா விற்போர் களங்கண்டான்

பராக் பராக்” என்று கூறி எக்காள சிரிப்புடன் சிலை வடிவாக நந்தியின் அருகே சென்று அமர்ந்தது விற்போர் களங்கண்டான்.

எச்சிலை முழுங்க கூட முடியாமல் நலனுக்கு தொண்டை அடைத்தது. வியர்வை கட்டுக்கடங்காமல் மண்ணில் சிந்தியது.

“ம்ம் நடக்கட்டும்

ஹா ஹா” என களங்கண்டான் கர்ஜித்த உடனே மூன்று சிலையும் நலனை தாக்க தொடங்கியது.

முட்டி தள்ளினான் ம்ஹூம் சிலையாயிற்றே அசைவுகளே இல்லை. நண்பனை எப்படி தாக்குவது. உயிர் போகும் நிலையில் ஜிவதாரண்யம் முக்கியமா என்று வாளை எடுத்து மூன்று சிலைகள் மீது வீசினான். அந்த வீச்சில் ஆங்காங்கே சில சிலை கற்கள் தெரித்தன.

மீண்டும் ஒரு எக்காளச் சிரிப்பு. “நீ எத்துணை முறை வாளை வீசினாலும்ம்ம் ஹா ஹா

ஒன்றும் நடக்காது

ஏனேன்றால் இது வாள் அல்ல அம்பு இதை வில்லில் வைத்து எய்தால் மட்டுமே

நீ‌ நினைப்பது நடக்கும்

அதுவும் எனை செதுக்கிய உளியை அம்பின் முனையில் வைத்து எய்ய வேண்டும்

ஹா ஹா”

இதை கேட்டவுடன் நம்பிக்கை தளர்ந்தது. சாக போகிறோம் என்ற விரக்தியில் வாளை களங்கண்டானை நோக்கி எறிந்த நலன் மண்டியிட்டு விழுந்து பூமி தாயை ஒஙா

என்ன ஒரு துரதிர்ஷ்டம் வாள் களங்கண்டான் கால் முன்னே குத்தி நின்றது. குத்திய இடத்தில் முன்னொரு காலத்தில் களங்கண்டானை செதுக்கிய சிற்பி விட்டு சென்ற உளியில் குத்தி நின்றது.

என்ன இது சிவனின் திருவிளையாடலா என்ன. அம்பு தயாராகியது வில் எங்கே? என்று அந்த வனாந்தரத்தில் மரமும் காற்றும் அவ்வளவேன் அந்த நந்தியும் கேட்டது.

கண்ணீர் துளிகள் மண்ணில் விழ தன் இரு கைகளாலும் மேலும் ஓங்கி அடித்தான். எந்த வில் தான் கிடைக்கும் அர்ஜூனனின் காண்டீபமா கண்ணனின் சாரங்கமா இராமனின் கோதண்டமா அல்லது அந்த சிவனின் பிநாகமா. ம்ஹூம் எதுவும் சிக்கவில்லை. திடிரென்று ஒரு பலத்த காற்று. ஒரு நீண்ட நிசப்தம். வில்வ மர கிளையின் பகுதி ஒன்று நலன் முன் விழுந்தது.

இதை வைத்து என்ன செய்ய முடியும். இது தான் ஆயுதம் என சிவனே சொன்ன பிறகு ஏது தாமதம் வில் கிளையை எடுத்து சிலை இடுக்கின் நடுவே புகுந்து களங்கண்டானை நோக்கி சென்றான் வாளை எடுத்து களங்கண்டான் சிலையின் மார்பில் எட்டி உதைத்தான். வில்வ கிளையின் நடுவே வாளை பிடித்து ஒங்கினான். வானில் மின்னல் பெருவெட்டாக வெட்டியது. வாளின் பாரம் தாங்காது சிற்பம் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்தது.


– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

ஆணியம் பேசு

ஆணியம் பேசு

அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ அவர்களை பார்த்த அதிர்ச்சியில், சுவாசகுழாயில் பேரடைப்பு மூச்சு தடைப்பட்டது ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. ஒரு நிமிடம் அவன் ஆவி நாதியற்று பறக்க எத்தனித்தது. பதற்றத்தின் உச்ச நிலையின் போது அவனை சூழ்ந்து கொண்டார்கள் அந்த மாதரசிகள். நிறுத்தி நிதானமாகவே ஆரம்பித்தார் தென்மேற்கில் நின்ற பெண்மணி.

“என்ன ம்ம்…. என்ன !

உன் முழியே சரியில்லயே ஆன்ன்…”

“ஏய் இவன் கிட்ட என்னடி பேச்சு

டேய் என்னடா !

எங்கள பார்க்குற போன பார்க்குற
அப்புறம் சிரிக்கிற போட்டோ எடுக்குற அத பார்த்து சிரிக்கிற

ம்ம என்ன விசயம்..

செருப்பால அடி வாங்கனும்னு ஆசையா இருக்கா?” என்றாள் வடகிழக்கில் நின்றபடியே.

“அடியேய்,

இவனலாம் போலிஸ்ட்ட புடிச்சு கொடுத்து முட்டிக் முட்டி தட்டனும்டீ

பொம்பள பொறுக்கி நாய்…” என்றபோது அவள் பின்னே சூரியன் மெள்ள மறைய தொடங்கியது . கதிரவனுக்கும் பயமோ என்னவோ யாருக்கு தெரியும்.

“அட! இருங்கடீ

பெரிய வீரி சூரி மாறி பேசுவாளுக…

இந்தா! பாருங்க தம்பி!

என்ன பண்ணீங்க” என்று அவள் பதமாக கேட்ட போது தான் மறைந்த சூரியன் எழுச்சியுற்றது போல அவன் முகம் கொஞ்சம் சிவந்து அடங்கியது.

வியர்த்து கொட்டியது, அதை துடைத்தபடியே சொன்னான்

“தப்பா ஒன்னும் பண்ணலீங்க!”

“பின்ன வேற என்ன பண்ணீங்களாக்கும்”

“இந்தாங்க இத தான் போட்டோ எடுத்து எல்லாருக்கும் சேர் பன்னேன் அவ்ளோ தாங்க வேற எதுவும் பண்ணல

நீங்களே பாருங்க”

அது எப்படி அவன் கூறுவதை எல்லாம் நம்பமுடியும். ஆண்மகன் உன்மையும் கூறுவான் என எந்த வேத ஆச்சாரியார்களும் கூறாத போது அவனை எப்படி அந்த மாதரசிகள் பேச்சில் நம்பிவிடுவார்கள். “எங்க கொடு” என்று அவள் வாங்கி பார்த்த போது தான் அனைத்தையும் புரிந்து கொண்டார்கள்.

“அட ஆமான்டி நல்லவன் தான் போல!

இந்தா! இனிமேனாச்சும் ஒழுங்கா இரு!”

என்று போனை கையில் வாங்கிய போது அவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். ஒரு நிமிடம் அவன் அந்த பேருந்து நிறுத்த இருக்கையில் ஆசை தீர கண்களை கசக்கினான். இன்னும் அவன் கண்களில் நீர் கொந்தளிப்பு காணப்பட்டது அத்துடன் சில ஓசைகளும் செவியறையின் சுவர்களில் எதிரொலித்தது.

“உன்னைய பிள்ளயா பெத்ததுக்கு அம்மிகல்ல பெத்துருந்தாலும் உதவியிருக்கும்… உதவாக்கரை ஒரு பத்தாயிரம் ரூவா கடன் வாங்க கூட உனக்கு திறமையில்ல”

“சீ நீலாம் ஒரு அண்ணண்ணா !
இதுவரைக்கும் எனக்கு நீ என்னா செஞ்சுருக்க…
இத கூட பண்ண முடியாதுனா அப்புறம் நீ என்ன ஆம்பள”

“இப்பவே என் மேல உனக்கு அக்கறை இல்ல… நாளைக்கு நீ என்ன கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற
காதலி ஆசப்பட்டத செய்ய முடியாத உனக்குலாம் எதுக்கு லவ்வர்
இதுல மீசை வேற தூ…”

“இதுக்கு தான் சொன்னேன் இவனுகளலாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கனும்…
கொஞ்சம் இடம் கொடுத்தா போதும் ஏறி மேஞ்சுருவானுக”

“ஏய் அவன் வரான் டீ!

டிரஸ்ஸ சரி பண்ணி வச்சுக்க”

“அவன் சரியான ப்ராடு சைகோ எதாவது பண்ணிறகின்னிற போரான் டீ”

“ஆம்பள தான நீ ! இத செய்ய முடியாத உன்னால”

“இவனுகளுக்கலாம் இரக்கமே பார்க்க கூடாது”

“அதலாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவானுக”

“அவன் கிடக்கான் குடிகாரன்”

“எவனும் நல்லவன் இல்ல எவனையும் நம்பாத!”

“செருப்பால அடி வாங்கனும்னு ஆசையா இருக்கா?”

“இவனலாம் போலிஸ்ட்ட புடிச்சு கொடுத்து முட்டிக் முட்டி தட்டனும்டீ

பொம்பள பொறுக்கி நாய்…”

இப்படி ஏகப்பட்ட ஓசைகள் ம் இல்லை இல்லை வசைகள் அவன் காதில் அன்று கேட்டகப்பட்டது மட்டுமல்ல அதுநாள் வரை கேட்கப்பட்டது.

அவையனைத்தும் அவன் கேட்டது மட்டுமல்ல ஆண் எனும் ஈன பிறப்பெடுத்த அனைத்து ஆண்மகன்களும் சுப்ரபாதமாக கேட்டுக் கொண்டும் கேட்க போகும் திருப்பாவை அது.

ஆணாதிக்க சமூகம் என்று கூறி ஆண்களை இராவணனை போலவும் பெண்கள் அனைவரும் சீதையை போலவும் கட்டமைக்கபடுவது புதிதல்ல என்றபோதும் ஆண்களில் பல இராமன்களும் பெண்களில் பல சூர்ப்பனைகள் சுற்றி திரிவதை மறக்கிறோம்.

உன்மையில் இது ஆணாதிக்க சமூகமா என்ன? ஒரு காலத்தில் கொத்து கொத்தாக ஆண்களும் அடிமைகளாக கைகட்டி கிடந்த நாட்டினிலே ஆணாதிக்கம் அதிகம் என்பது நகைப்புகுரியது. முன்னொரு காலம் தொட்டு இன்று வரை இது பணாதிக்க நாடாக இருந்து வரும்போது ஆணாதிக்க சமூகம் என்று எப்படி சொல்ல முடியும். பணம் படைத்தவன் ஆணோ பெண்ணோ அவன் எளியோனிடம் என்றும் ஆதிக்கம் செலுத்துவான் அதுவே உலக நியதி. அப்படி பணத்திற்க்காக சுற்றி திரிந்து பணாதிக்க சமூகமாக மாற நினைக்கும் அந்த நடைபாதை கூட்டத்தில் அவனும் ஒருவன். அங்கே கண்னை கசக்கி கொண்டு அமர்ந்திருக்கும் சேதுராமனின் குடியிருப்பு பங்காளன், அவன் பெயர் பாபுஜியாம்.

“என்னடா நாது…
சாரி சேது இங்க உட்காந்துருக்க”

“ஒன்னுல்ல”

“ச்சி சொல்றா”

“ஒரு நாலு பொண்ணுக நான் எதோ தப்பா பண்ணிடேனு அசிங்கப்படுத்திட்டாங்க”

“அட இவ்ளோ தானா”

“ரொம்ப எம்பாரஸிங்கா! ஆகிருச்சு டா”

“டேய்! அவளுகலாம் ஹேன்டுல் பன்ற விதத்துல ஹேன்டுல் பண்ணி கரக்ட் பன்ற விதத்துல கரக்ட் பண்ணனும்”

“உனக்கு தான் பொண்ணுக கிட்ட பேசவே தெரிலயே அப்புறம் இப்படிதான் நடக்கும்

பொண்ணுகளாம் பசங்கள என்ன பண்ண என்ன ஆவான்
என்ன சொன்ன என்ன ஆவானு செய்முறை விளக்கமே வச்சுருப்பாளுக

அந்த மாறி பசங்க, நம்மளும் தெரிஞ்சு வச்சு மடக்கனும் தெரிதா

ஆனா அதுக்கலாம் நீ சரிப்பட்டு வரமாட்ட”

“எனக்கு எதுவும் தெரிய வேணாம் நான் நானா இருந்துகுரேன்

அவுங்க மேல தப்பில்ல சில பசங்க அப்படி பண்றதுனால எல்லாரையும் தப்பா நினைக்கிறாங்க

இப்பலாம் லவ்னு சொல்லி பசங்க பேச வந்தாலே பொன்னுங்க பயப்புடுறாங்க எங்க வேணானு சொன்ன எதாவது பண்ணிடுவாங்கனு…

அவுங்க நிலமய நினைச்சு பாக்கனும் அவுங்க உணர்வுகள மதிக்கனும்”

“போடாங்கு…

மதிக்கனும் மிதிக்கனும்னு ஒருத்தன் வந்து லவ்வ சொன்ன ஒன்னு பிடிச்சிருக்குனு சொல்லனும் இல்ல பிடிக்கலனு சொல்லனும் அத விட்டு அவன அலைய விடுறது

ஏன் தெரிமா ! ஒருத்தி பிடிக்கலனா சொல்லிட்டா அப்புறம் அவ நிழல கூட தொடமாட்டான் டா ஆம்பளை

பெருசா பேச வந்துட்டான்…

சரிவா ரூம்க்கு போவோம்”

அந்த உரையாடல் சில மனிதர்களின் சில பிம்பங்களை அப்பட்டமாக பிரதிபலித்து கொண்டிருந்தது பாபுஜி அதை உரக்க சொல்லிக் கொண்டே வந்தான் சேது அதை பொறுக்க முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவர்கள் வருகையை அந்த குடியிருப்பு மாதரசிகளால் கொஞ்சம் சகிக்க முடிவதில்லை. இவர்கள் பெற்றெடுத்தோர் கூட அப்படி அவர்களுக்கு தினம்தோறும் அர்ச்சனை செய்ததில்லை.

“ஏன்டி! இந்த ஓனருக்கு விவஸ்தையே இல்லயா

எத்தன தடவ சொல்றது இந்த மாறி காலி பசங்களுக்கு வீடு கொடுக்காதிங்கனு

இவனுக பார்வையே சரியில்லை”

“அப்படி என்னடி உன்ன பண்ணானுங்க”

“பேமிலி இருக்குற இடத்துல பேச்சுலர்ஸ் எதுக்கு”

“சரி அத விடு…

இந்த தங்க நகைக்கு பாலிஷ் போட வர சொன்னியாம்ல எப்ப வர்றாங்க எனக்கும் போடனும்”

“இப்ப வந்துடுவாங்க கொஞ்சம் பொறு”

மணி சரியாக ஆறை நெருங்கி கொண்டிருந்தது. குடியிருப்பு வீடுகள் இருட்டில் மறைய எத்தனிக்கும் போது மின் விளக்குகளால் மின்னியது.

பாபுஜி வீட்டை பற்றி அவனை வசைபாடியவளிடமே கேட்டுக் கொண்டிருந்தான் ஒரு ஆசாமி. அவன் முழியில் ஒரு கள்ளத்தனம் தெரிய அவனுக்கும் கொஞ்சம் அர்ச்சனை வழங்கப்பட்டது அவன் அர்ச்சனைகளை பாதியிலே தடுத்து அவன் அவ்விடம் நகர்த்தி வந்தான் சேது.

“டேய் தம்பி ! யார்டா இந்த பொம்பள புரபஷ்னல் பஜாரி மாறி பேசுது. என் பொண்டாட்டியலாம் தூக்கி சாப்டுறும் போல”

“அவுங்க இப்படி தான்.
நீ என்ன ணா இந்த நேரத்துல”

“வாய்விட்டு அழனும் தோனுச்சு ரூம் போட்டு அழுகுறதுக்கு காசில்ல அதான் இங்க வந்தேன்”

“அப்புடியா இந்தா! இந்த ஓரமா ஒக்காந்து அழுவுங்க” என பாபுஜி கேட்டவுடன் அந்த ஆசாமிக்கு கண்ணீர் பீறிட்டது.

‘சந்தன கருப்பா எனய ஏன் ஆம்பளயா பெத்துவிட்ட’ என்றபடியே அழுது புலம்பினான் ஒரு ஓரமாக.

திடிரென்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது ஒரு நீண்ட நெடிய நிசப்தத்தில் காரிருள் சூழ்ந்தது. அவ்வப்போது சில முனகல்கள் பல கிசுப்கிசுப்புகள். சேதுவுக்கும் பாபுவுக்கும் ஒன்றும் புரியவில்லை. வெகு நேரமாக அழுது கொண்டிருந்த ஆசாமி சட்டென்று எழுந்து “டேய் தம்பிகளா! இந்த பொம்பள குரல எங்கயோ கேட்டுருக்கேன் இவளுக…..

ம்ம் நியாபகம் வந்துருச்சு

நகைய பாலிஷ் போடுறேனு சொல்லி ஆட்டய போடுற கும்பல்னு நினைக்கிறேன்”

“அப்படியா எதுத வீட்லருந்து தான் சத்தம் வருது” என்று கிசுகிசுத்தான் சேது.

“இப்ப என்ன பன்றது ” என்றான் பாபுஜி

“மெய்ன் ஆஃப் பண்ருப்பாய்ங்க அதுனால நீங்க யாராவது மெயின் ஆன் பண்ண போங்க நா கேட்டு கதவைத் பூட்றேன் நீ வாசக்கதவ கிட்ட போய் அவய்ங்கள புடி”

“எப்புடி ணே இவ்ளோ கரக்டா சொல்ற” பதட்டத்துடன் கேட்டான் சேது.

“போன வாரம் தான் பா என் வீட்ல ஆட்டய போட்டாய்ங்க”

“அட கொடுமயே !

ஆண்டவன் உன்னய இங்க கரக்டா தான் அனுப்பி வச்சுருக்கான்

சரி சத்தமில்லாம”

அந்த ஆசாமி வேகமாக ஓடி முன் கேட்டை அடைக்க, பாபுஜி மெதுவாக நகர்ந்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை இணைக்க சென்றான். சேது கொஞ்சம் கலக்கத்துடன் தன் அலைப்பேசி வெளிச்சத்தில் அடி மேல் அடி வைத்து சென்றான். பட்டென மின் இணைப்பு வர சேதுவிற்க்கு பேரதிர்ச்சி.

அந்த அதிர்ச்சியில் அவன் கையில் இருந்து நழுவி கிழே விழுந்தது.

கிழே விழுந்த அலைபேசியில் அவன் காலையில் எடுத்த செல்லூலாய்டின் செல்கள் பளிச்சிட்டன அதில் பசி மயக்கத்தில் கிடந்த யாசக பாட்டிக்கு தன் மதிய உணவை கொடுத்து பல்ளித்து கொண்டிருந்தான் ஓர் இளைஞன். அந்த இளைஞன் முன்னே இப்போது நிற்பது போல பேரதிர்ச்சியில் அந்த நான்கு பெண்கள்.

களவானிகளிடம் வசை வாங்கிய கோபத்தில் கொஞ்சம் குரலோங்க
“அடி பாவிகளா! நீங்களா!” என்றான் சேது


– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

களவாடிய தருணங்கள் – சிறுகதை

களவாடிய தருணங்கள் – சிறுகதை

இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு பலத்த காற்று தென்னங்கீற்றை வருடி எடுத்து வந்த தென்றலின் இன்னிசை கூடிய ஓர் இதமான காற்று சட்டென்று அவன் மீது வீச என்ன காரணமென்று புரியவில்லை. அது ஒரு மாலை பொழுது மேற்கே கீழ் வானம் சிவந்து கிடந்தது வீசிய காற்று மேற்கே அவனை திருப்பியது. கீழ் வான சிவப்பிற்க்கு போட்டியாக வெட்கம் சிவக்க அவள் நடந்து வந்தாள். விற்றென்று அந்த சிவப்பில் ஓர் மின்னால் வெட்டியது அவள் கடைக்கண் பார்வையின் வீச்சு அது.

மையம் கொண்ட புயலை எதிர்பார்வையிட மின்னல் வந்த நேரமது. சிவந்த வெட்கம் கொஞ்சும் நானம் கொஞ்சம் பார்வையென அவள் நெருங்கி வரும்போதே அவன் உடம்பெல்லாம அனலேறியது ஆயிரம் அரிவைகள் கூடி நின்றபோதிலும் கண் பார்ப்பவன் இன்று இவள் கண்னை பார்க்கமுடியாமல் வெட்கம்தலைக்கேற அவள் கால் கொலுசின் ஓசை வெளிவரும் இடம் பார்க்க சென்றான். ஆண்கள் வெட்கப்படும் தருணத்தை முழுமையாக அன்று தான் உணர்ந்தான். எத்துனையோ முறை பார்த்து பழகிய முகம், இருந்தபோதும் இன்று அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் அது ஒரு ரசாயன மாற்றமாக இருக்கலாம் காதல் அனுக்களை உயிர்க்காற்று ரசாயன கலவையின் துணை கொண்டு எங்கோ கடத்தி சென்று கொண்டிருந்தன் காரதணமாக இருக்கலாம்.

முதல் பார்வையிலே காதல் வந்து தொற்றிக்கொள்ள அவன் அவ்வளவு பலவீனமாகவும் இல்லை அதேபோல முதல் சந்திப்பிலே காதலில் விழும் பலம் அவள் அகராதியிலே இல்லை ம்ஹூம் அது பெண்கள் அகராதியிலே இல்லை.

புயல் கரையைகடப்பதற்கு மாறாக அன்று மின்னல் புயலை கடத்தி சென்றது.

இப்படி சில காதல் சேஷ்டைகள் நடைபெறுவது வழக்கம் தான் ஆனால் இந்த சேஷ்டை உணர்வுகளுக்குள் ஊடுருவி காதலின் வெட்கசிவந்த குழம்பில் இருவரையும் தள்ளிவிட்டு இருவரும் தத்தளிப்பதை பார்த்து வேடிக்கை பார்க்கும் காதலின் கோர இன்முகம் எவ்வளவு இனிமையானது என்று உணர்திட மனிதனாய் ஜனனம் எடுத்த அத்துனை பிறவிகளையும் காதல் கடலில் முங்கி தூய்மைபடுத்த இறைவன் எத்தனித்த அவதாரமே என்று வகையறுக்க வந்தது தான் காதல் என்று இங்கு குறிப்பிடும் போது அதை உணர்ந்தவர்கள் பொன்முறுவலும் உணராதவர்கள் நமட்டு சிரிப்பையும் வெளிப்படுத்துவது இங்கே தவிர்க்க முடியாதது. அப்படி நமட்டு சிரிப்போடு மேற்கொண்டு பின் தொடர்ந்து காதலில் விழுந்து விடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்பவில்லை ஏனென்றால் அதுதான் காதலின் சாசனம். அது காயங்கள் தரும் காயத்திற்கு மருந்துகள் தரும் வலியின் உணர்வை தரும் உணர்வில் வடுவை தரும் மொத்தத்தில் அது இறைவனை காண ஏங்கும் முடிவில்லா பேரின்பத்தை தரும்.

அப்படி பேரின்ப வரத்தை பெற தான் தயாரானான் அவன். பார்வையின் விழித்திரையில் சிக்கியவளையெல்லாம் மனையாள் என்று நினைப்பவன் ஆண்வர்கத்தின் அகவரிசையிலே இல்லாதவன். அப்படி எண்ணிலடங்கா பெண்களை பார்த்த கண்கள் இவள் கண்களில் சிக்குண்டு தவிப்பதை உணர்ந்தான் அவன் தாயை உணர்ந்தான் அவன் துணையை உணர்ந்தான் தனக்கானவள் இவள் என்று உணர்ந்தான். அவளை ரசிக்க சித்தமானான் உச்சி எடுத்த வகிட்டை தாமரை மலர் முகத்தை அதில் பனி துளி போல் சிதறிகிடந்த மூக்குத்தியை அவள் காதுகளில் சிம்ம சொப்பனமிட்ட கம்மலை கைவிரல் மோதிரத்தை கால் கொலுசை கொலுசின் ஓசையை என அவன் ஒரு தலை காதலை இராவணனின் பத்து தலை கொண்டு சேமித்தான்.

‘அவளுக்கும் தான் நம்மீது அபிராயம் இருக்குமோ ம்ஹூம் இருக்காது நம்மலலாம் யாரு காதலிப்பா’ என்று அவன் மனம் கிடந்து தவித்தது. ஆனால் அவள் கண்களில் காதல் தெரிகிறதே! ஒரு பெண்ணின் கண்கள் என்ன சொல்கிறது என்று தெரியாதளவிற்கா இந்த ஆண் வகையறாக்கள் முட்டாளிகிடக்கின்றன. இல்லை இது காதல் இல்லை ம்ம் இது காதல் தான் என்று ஏங்கி வெம்பி துடிக்கும் அவன் இதயத்தை அவள் கேட்டாலோ என்னவோ.
காதல் அசைவுகளை மெதுவாக கடத்தினாள்.

பெண்கள் பார்த்ததும் காதல் கொள்ள மாட்டார்கள் அழகை பார்த்து கொள்ள மாட்டார்கள் பின்பு எதை பார்த்து கொள்வார்கள் ஆகச்சிறந்த  நடத்தயை பார்த்து கொள்வார்கள். அப்படி என்ன அந்த நடத்தை அவளை காதல் வயப்பட செய்தது என்று அவளுக்கு தான் வெளிச்சம் ம்ஹூம் அவள் மனதுக்கு தான் வெளிச்சம்.

அவளுக்கு கொஞ்சம் திமிர் அதிகம்தான் அந்த திமிர் தான் அவள் அழகும் கூட. அதை அவன் வெகுவாக ரசித்தான் அந்த திமிர் அவனை இன்னும் காதல் கொள்ள செய்தது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்த போதும் பெரிதாக பேசியதில்லை ஆனால் அவர்கள் கண்கள் பேசியது தினமும் பேசியது. அந்த கண்களின் சம்பாஷனையில் ஊடல் இருந்தது காதல் இருந்தது மோதலும் இருந்தது. அப்படிபட்ட சம்பாஷனையின் விளைவை தான் அவன் கவிதையாக வடித்தான் காதல் அவனை கூட கவிஞனாக்கியது காலத்தின் கொடுமை.

அவள் காதல் சீற்றங்கள் அதிகமானது அவன் மனம் கனமானது காதல் அவன் மனதை நிறைத்தது நிரம்பி வழிய தொடங்கியதை வழிந்தவற்றை எங்ஙனம் நிரப்ப அவளுக்கு உரித்தானது அவளுக்கே சேரட்டும் என ஒரு வழியாக முடிவுக்கு வந்தான்.

காதலை சொல்ல ஒரு நொடி போதும் ஆனால் காதல் களவாடிய தருணங்களை சொல்ல ஒரு ஆயுள் வேண்டும்

காதலை சொல்லி காத்திருப்பது சுகம் தான் இருந்தும் விலகி சென்றால் தான் அது தீர்ந்திடுமா
பாரக்காமல் பேசாமல் இருந்தால் தான் அவை மறந்திடுமா

இப்படி காதல் களவாடிய தருணங்களை சேமித்து ஒரு காதல் வரலாற்றையே எழுதிடலாம். அப்படி தான் தன் காதல் வரலாற்றின் நடுப்பக்கங்களை எழுத தொடங்கினான். அந்த பக்கங்களை உரையாடலாக தான் உணர முடியும் வாக்கியங்களாக வர்ணிக்க முடியாது.

காதல் அவன் வாழ்க்கையில் பலவற்றை களவாடியது அவன் நெடுநாள் தூக்கத்தை பசியை சிரிப்பை வேதனையை பாரத்தை அந்த இனிமைகளை அவன் வாயாற சொல்லும் நேரம் வந்தது அவளை அவன் பார்த்த அதே நல்வேளையில்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”

“ம்ம் சொல்லு”

“உன் கண்ணு என்ன கொல்லுது”

“என்ன சொல்ற”

“ஆமா உன் கண்ண பார்த்து என்னால பேசமுடியல”

“இதுல எல்லாமே இருக்கு இதுல என் கவிதைகள் நான் சொல்ல நினைக்கிறது எல்லாமே இருக்கு என் கவிதையின் இலக்கனமே நீ தான் நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ எல்லாம் உனக்கு சேர வேண்டியது தான்

என் மனசுல இருந்ததல்லாம் இதுல சொல்லிட்டேன்

ஆனா உன் மனசுல இருக்குறத தான் நீ சொல்ல மாட்டேங்குற….

ஆம்பளய்ங்க காதல் தேன் மாறி அதுல எந்த கலப்படமும் இருக்காது 
அந்த காதல் பார்த்தவுடன வர்றது 
அது பழக்கத்துனாலயோ
அழக பார்த்தோ குணத்த பார்த்தோ வர்றதில்ல

அது அப்படியே பார்த்தவுடன வரும் பார்த்தவுடனே இவ நமக்கு பொண்டாட்டியா வந்தா நல்லா இருக்குமுனு தோனும்  
அது அப்படி எல்லாருகிட்டாயும் வந்துறாது உன்கிட்ட வந்துச்சு….

நீ கோச்சுகலனா ஒன்னு சொல்றேன் எனக்கும் உனக்கும் இப்ப இரண்டு பிள்ளைங்க தெரியுமா…

எனக்கு புரியுது 
சாதி மதம் ம்ம் தெரியும்….

நான் நல்லவனா உன்ன வச்சு காப்பாத்துவேனானு உனக்கு சந்தேகம் வரலாம் தப்பே இல்ல

பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவ 
25 வருஷமா பாசத்த ஊட்டி வளர்த்த அப்பாவ 
கூடவே ஒட்டி உறவாடி வளர்த்த தங்கச்சிய நினைக்கனும்… அவங்க வேதனைப்படகூடாது சந்தோஷமா இருக்கனும்… எல்லாம் ரைட்டு நீ நினைக்கிறதுல எந்த தப்பும்மில்ல…

ஆனா அதுகாக காதல மனசுகுள்ளயே வச்சு என்னயும் கொன்னும் உன்னை கொன்னுட்டு இருக்கியே அந்த கொடுமைய நான் எங்கனு போய் சொல்ல…

பொம்பளய்ங்க காதல் கடல் மாறி அதுல என்ன இருக்குனு தெரியாது எவ்ளோ ஆளமுனு புரியாது.

காதலுங்குறது புனிதமானது மா !
அது சாதி மதம் இனம் அவ்ளோ ஏன் சில சமயம் அன்புக்கும் பாசத்துக்கும் கூட அப்பாற்பட்டது…

அத பூட்டி வச்சு மறச்சு வாழ்க்க முழுக்க வேதனைப்பட்டு திரியுறதுக்கு தைரியமா சொல்லி எது வந்தாலும் பாத்துகலாமுனு சொல்லறது தான் நம்ம பண்ற காதலுக்கே மரியாதை.

இப்ப கூட உம்ம்ம்ம்ம்னு சொல்லு எங்க வீட்ல இருந்து கூட்டி உன் வீட்ட தேடி உன்ன பொன்னு கேக்க

அதுக்கும் முடியாதுனா ஒன்னும் சொல்றதுகில்ல வாழவே பயபடுறவகிட்ட வேற என்னத்த சொல்ல…

காதல் வாழும் !!
காதலர்கள் ஹ்ம்.”

இன்னும் தான் அவள் வார்த்தைகள் மௌனம் காத்தன இன்னும் அது எத்துனை காலம் தான் நீளுமோ ஆனால் கண்ணீர் மட்டும் தாரை தாரையாக சிந்தியது அந்த கண்ணீர் தான் பதில் கூறுமோ அந்த கண்ணீரின் பாஷை தான் யார் அறிவாரோ. மெல்லிய நிசப்தம் எதோ ஒன்று சொல்ல அவள் நா துடித்தது.

அவள் சொல்ல வாயெடுத்தாள் வானத்து மின்னல் வெட்டியது புயல் மையம் கொள்ள தயாரானது கீழ்வானம் சிவக்க கார்மேகங்கள்  மழை துளிகளை அள்ளி வாரியனைத்து வந்து கொட்ட காத்திருந்தன புயலும் மின்னலும் மையல் கொள்ளும் நேரம் தான் வந்தன வான் மழை பொங்கி நிலத்தில் விழுந்திட்ட இலைகளை நனைத்தன புயலும் மின்னலும் மையல் கொள்ளும் அழகை கண்டு சிலிர்த்தன.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி