களவாடிய தருணங்கள் – சிறுகதை

களவாடிய தருணங்கள் – சிறுகதை

இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு பலத்த காற்று தென்னங்கீற்றை வருடி எடுத்து வந்த தென்றலின் இன்னிசை கூடிய ஓர் இதமான காற்று சட்டென்று அவன் மீது வீச என்ன காரணமென்று புரியவில்லை. அது ஒரு மாலை பொழுது மேற்கே கீழ் வானம் சிவந்து கிடந்தது வீசிய காற்று மேற்கே அவனை திருப்பியது. கீழ் வான சிவப்பிற்க்கு போட்டியாக வெட்கம் சிவக்க அவள் நடந்து வந்தாள். விற்றென்று அந்த சிவப்பில் ஓர் மின்னால் வெட்டியது அவள் கடைக்கண் பார்வையின் வீச்சு அது.

மையம் கொண்ட புயலை எதிர்பார்வையிட மின்னல் வந்த நேரமது. சிவந்த வெட்கம் கொஞ்சும் நானம் கொஞ்சம் பார்வையென அவள் நெருங்கி வரும்போதே அவன் உடம்பெல்லாம அனலேறியது ஆயிரம் அரிவைகள் கூடி நின்றபோதிலும் கண் பார்ப்பவன் இன்று இவள் கண்னை பார்க்கமுடியாமல் வெட்கம்தலைக்கேற அவள் கால் கொலுசின் ஓசை வெளிவரும் இடம் பார்க்க சென்றான். ஆண்கள் வெட்கப்படும் தருணத்தை முழுமையாக அன்று தான் உணர்ந்தான். எத்துனையோ முறை பார்த்து பழகிய முகம், இருந்தபோதும் இன்று அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் அது ஒரு ரசாயன மாற்றமாக இருக்கலாம் காதல் அனுக்களை உயிர்க்காற்று ரசாயன கலவையின் துணை கொண்டு எங்கோ கடத்தி சென்று கொண்டிருந்தன் காரதணமாக இருக்கலாம்.

முதல் பார்வையிலே காதல் வந்து தொற்றிக்கொள்ள அவன் அவ்வளவு பலவீனமாகவும் இல்லை அதேபோல முதல் சந்திப்பிலே காதலில் விழும் பலம் அவள் அகராதியிலே இல்லை ம்ஹூம் அது பெண்கள் அகராதியிலே இல்லை.

புயல் கரையைகடப்பதற்கு மாறாக அன்று மின்னல் புயலை கடத்தி சென்றது.

இப்படி சில காதல் சேஷ்டைகள் நடைபெறுவது வழக்கம் தான் ஆனால் இந்த சேஷ்டை உணர்வுகளுக்குள் ஊடுருவி காதலின் வெட்கசிவந்த குழம்பில் இருவரையும் தள்ளிவிட்டு இருவரும் தத்தளிப்பதை பார்த்து வேடிக்கை பார்க்கும் காதலின் கோர இன்முகம் எவ்வளவு இனிமையானது என்று உணர்திட மனிதனாய் ஜனனம் எடுத்த அத்துனை பிறவிகளையும் காதல் கடலில் முங்கி தூய்மைபடுத்த இறைவன் எத்தனித்த அவதாரமே என்று வகையறுக்க வந்தது தான் காதல் என்று இங்கு குறிப்பிடும் போது அதை உணர்ந்தவர்கள் பொன்முறுவலும் உணராதவர்கள் நமட்டு சிரிப்பையும் வெளிப்படுத்துவது இங்கே தவிர்க்க முடியாதது. அப்படி நமட்டு சிரிப்போடு மேற்கொண்டு பின் தொடர்ந்து காதலில் விழுந்து விடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்பவில்லை ஏனென்றால் அதுதான் காதலின் சாசனம். அது காயங்கள் தரும் காயத்திற்கு மருந்துகள் தரும் வலியின் உணர்வை தரும் உணர்வில் வடுவை தரும் மொத்தத்தில் அது இறைவனை காண ஏங்கும் முடிவில்லா பேரின்பத்தை தரும்.

அப்படி பேரின்ப வரத்தை பெற தான் தயாரானான் அவன். பார்வையின் விழித்திரையில் சிக்கியவளையெல்லாம் மனையாள் என்று நினைப்பவன் ஆண்வர்கத்தின் அகவரிசையிலே இல்லாதவன். அப்படி எண்ணிலடங்கா பெண்களை பார்த்த கண்கள் இவள் கண்களில் சிக்குண்டு தவிப்பதை உணர்ந்தான் அவன் தாயை உணர்ந்தான் அவன் துணையை உணர்ந்தான் தனக்கானவள் இவள் என்று உணர்ந்தான். அவளை ரசிக்க சித்தமானான் உச்சி எடுத்த வகிட்டை தாமரை மலர் முகத்தை அதில் பனி துளி போல் சிதறிகிடந்த மூக்குத்தியை அவள் காதுகளில் சிம்ம சொப்பனமிட்ட கம்மலை கைவிரல் மோதிரத்தை கால் கொலுசை கொலுசின் ஓசையை என அவன் ஒரு தலை காதலை இராவணனின் பத்து தலை கொண்டு சேமித்தான்.

‘அவளுக்கும் தான் நம்மீது அபிராயம் இருக்குமோ ம்ஹூம் இருக்காது நம்மலலாம் யாரு காதலிப்பா’ என்று அவன் மனம் கிடந்து தவித்தது. ஆனால் அவள் கண்களில் காதல் தெரிகிறதே! ஒரு பெண்ணின் கண்கள் என்ன சொல்கிறது என்று தெரியாதளவிற்கா இந்த ஆண் வகையறாக்கள் முட்டாளிகிடக்கின்றன. இல்லை இது காதல் இல்லை ம்ம் இது காதல் தான் என்று ஏங்கி வெம்பி துடிக்கும் அவன் இதயத்தை அவள் கேட்டாலோ என்னவோ.
காதல் அசைவுகளை மெதுவாக கடத்தினாள்.

பெண்கள் பார்த்ததும் காதல் கொள்ள மாட்டார்கள் அழகை பார்த்து கொள்ள மாட்டார்கள் பின்பு எதை பார்த்து கொள்வார்கள் ஆகச்சிறந்த  நடத்தயை பார்த்து கொள்வார்கள். அப்படி என்ன அந்த நடத்தை அவளை காதல் வயப்பட செய்தது என்று அவளுக்கு தான் வெளிச்சம் ம்ஹூம் அவள் மனதுக்கு தான் வெளிச்சம்.

அவளுக்கு கொஞ்சம் திமிர் அதிகம்தான் அந்த திமிர் தான் அவள் அழகும் கூட. அதை அவன் வெகுவாக ரசித்தான் அந்த திமிர் அவனை இன்னும் காதல் கொள்ள செய்தது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்த போதும் பெரிதாக பேசியதில்லை ஆனால் அவர்கள் கண்கள் பேசியது தினமும் பேசியது. அந்த கண்களின் சம்பாஷனையில் ஊடல் இருந்தது காதல் இருந்தது மோதலும் இருந்தது. அப்படிபட்ட சம்பாஷனையின் விளைவை தான் அவன் கவிதையாக வடித்தான் காதல் அவனை கூட கவிஞனாக்கியது காலத்தின் கொடுமை.

அவள் காதல் சீற்றங்கள் அதிகமானது அவன் மனம் கனமானது காதல் அவன் மனதை நிறைத்தது நிரம்பி வழிய தொடங்கியதை வழிந்தவற்றை எங்ஙனம் நிரப்ப அவளுக்கு உரித்தானது அவளுக்கே சேரட்டும் என ஒரு வழியாக முடிவுக்கு வந்தான்.

காதலை சொல்ல ஒரு நொடி போதும் ஆனால் காதல் களவாடிய தருணங்களை சொல்ல ஒரு ஆயுள் வேண்டும்

காதலை சொல்லி காத்திருப்பது சுகம் தான் இருந்தும் விலகி சென்றால் தான் அது தீர்ந்திடுமா
பாரக்காமல் பேசாமல் இருந்தால் தான் அவை மறந்திடுமா

இப்படி காதல் களவாடிய தருணங்களை சேமித்து ஒரு காதல் வரலாற்றையே எழுதிடலாம். அப்படி தான் தன் காதல் வரலாற்றின் நடுப்பக்கங்களை எழுத தொடங்கினான். அந்த பக்கங்களை உரையாடலாக தான் உணர முடியும் வாக்கியங்களாக வர்ணிக்க முடியாது.

காதல் அவன் வாழ்க்கையில் பலவற்றை களவாடியது அவன் நெடுநாள் தூக்கத்தை பசியை சிரிப்பை வேதனையை பாரத்தை அந்த இனிமைகளை அவன் வாயாற சொல்லும் நேரம் வந்தது அவளை அவன் பார்த்த அதே நல்வேளையில்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”

“ம்ம் சொல்லு”

“உன் கண்ணு என்ன கொல்லுது”

“என்ன சொல்ற”

“ஆமா உன் கண்ண பார்த்து என்னால பேசமுடியல”

“இதுல எல்லாமே இருக்கு இதுல என் கவிதைகள் நான் சொல்ல நினைக்கிறது எல்லாமே இருக்கு என் கவிதையின் இலக்கனமே நீ தான் நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ எல்லாம் உனக்கு சேர வேண்டியது தான்

என் மனசுல இருந்ததல்லாம் இதுல சொல்லிட்டேன்

ஆனா உன் மனசுல இருக்குறத தான் நீ சொல்ல மாட்டேங்குற….

ஆம்பளய்ங்க காதல் தேன் மாறி அதுல எந்த கலப்படமும் இருக்காது 
அந்த காதல் பார்த்தவுடன வர்றது 
அது பழக்கத்துனாலயோ
அழக பார்த்தோ குணத்த பார்த்தோ வர்றதில்ல

அது அப்படியே பார்த்தவுடன வரும் பார்த்தவுடனே இவ நமக்கு பொண்டாட்டியா வந்தா நல்லா இருக்குமுனு தோனும்  
அது அப்படி எல்லாருகிட்டாயும் வந்துறாது உன்கிட்ட வந்துச்சு….

நீ கோச்சுகலனா ஒன்னு சொல்றேன் எனக்கும் உனக்கும் இப்ப இரண்டு பிள்ளைங்க தெரியுமா…

எனக்கு புரியுது 
சாதி மதம் ம்ம் தெரியும்….

நான் நல்லவனா உன்ன வச்சு காப்பாத்துவேனானு உனக்கு சந்தேகம் வரலாம் தப்பே இல்ல

பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவ 
25 வருஷமா பாசத்த ஊட்டி வளர்த்த அப்பாவ 
கூடவே ஒட்டி உறவாடி வளர்த்த தங்கச்சிய நினைக்கனும்… அவங்க வேதனைப்படகூடாது சந்தோஷமா இருக்கனும்… எல்லாம் ரைட்டு நீ நினைக்கிறதுல எந்த தப்பும்மில்ல…

ஆனா அதுகாக காதல மனசுகுள்ளயே வச்சு என்னயும் கொன்னும் உன்னை கொன்னுட்டு இருக்கியே அந்த கொடுமைய நான் எங்கனு போய் சொல்ல…

பொம்பளய்ங்க காதல் கடல் மாறி அதுல என்ன இருக்குனு தெரியாது எவ்ளோ ஆளமுனு புரியாது.

காதலுங்குறது புனிதமானது மா !
அது சாதி மதம் இனம் அவ்ளோ ஏன் சில சமயம் அன்புக்கும் பாசத்துக்கும் கூட அப்பாற்பட்டது…

அத பூட்டி வச்சு மறச்சு வாழ்க்க முழுக்க வேதனைப்பட்டு திரியுறதுக்கு தைரியமா சொல்லி எது வந்தாலும் பாத்துகலாமுனு சொல்லறது தான் நம்ம பண்ற காதலுக்கே மரியாதை.

இப்ப கூட உம்ம்ம்ம்ம்னு சொல்லு எங்க வீட்ல இருந்து கூட்டி உன் வீட்ட தேடி உன்ன பொன்னு கேக்க

அதுக்கும் முடியாதுனா ஒன்னும் சொல்றதுகில்ல வாழவே பயபடுறவகிட்ட வேற என்னத்த சொல்ல…

காதல் வாழும் !!
காதலர்கள் ஹ்ம்.”

இன்னும் தான் அவள் வார்த்தைகள் மௌனம் காத்தன இன்னும் அது எத்துனை காலம் தான் நீளுமோ ஆனால் கண்ணீர் மட்டும் தாரை தாரையாக சிந்தியது அந்த கண்ணீர் தான் பதில் கூறுமோ அந்த கண்ணீரின் பாஷை தான் யார் அறிவாரோ. மெல்லிய நிசப்தம் எதோ ஒன்று சொல்ல அவள் நா துடித்தது.

அவள் சொல்ல வாயெடுத்தாள் வானத்து மின்னல் வெட்டியது புயல் மையம் கொள்ள தயாரானது கீழ்வானம் சிவக்க கார்மேகங்கள்  மழை துளிகளை அள்ளி வாரியனைத்து வந்து கொட்ட காத்திருந்தன புயலும் மின்னலும் மையல் கொள்ளும் நேரம் தான் வந்தன வான் மழை பொங்கி நிலத்தில் விழுந்திட்ட இலைகளை நனைத்தன புயலும் மின்னலும் மையல் கொள்ளும் அழகை கண்டு சிலிர்த்தன.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

“கடைசியா என்ன தான்மா சொல்ற

சி திஸ் லாஸ்ட்”
“நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார்


ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க”

‘தடக் தடக் தடக் தடக்’

“லுக் மிஸ்டர் காருண்யா, ஏற்கனவே பதிமூனு வாய்தா!

இதான் லாஸ்ட் ஹியரிங் 
நோ ஃப்ர்தர் டிலே”

“எல்லாத்தயும் ஏற்கனவே சொல்லியாச்சு சார் எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல”

“இங்க பாரு தம்பி! உனக்கு விருப்பமில்ல அந்த பொண்ணு விரும்புதுல்ல

லெட் இட் பி முயூட்சுவல்

ஏற்கனவே உங்களுக்கு நிறைய டைம் கொடுத்தாச்சு, மனசு விட்டு பேசியும் தொலயமாட்றீங்க

இதுக்கு மேல இழுத்துட்டு இருக்க முடியாது”

‘தடக் தடக் தடக் தடக்’

“ம்ம் கொடுத்துருங்க சார், இது வரைக்கும் அவ என்கிட்ட எதும் கேட்டதில்ல நானாவும் எதும் கொடுத்ததில்ல

மனசுக்குள்ள இருக்குறத வெளிய வாய்விட்டு சொல்லிருந்தா நானே விலகிருந்துப்பேன்.

இப்பயும் ஒன்னுல்ல, கொடுத்துருங்க”

“ஹே சீன் கிரியேட் பண்ணாத ஒகே

டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்
‘ஃப்ராடு’ ‘மென் ஆர் ஃப்***ங் ஹைப்போக்ரைட்ஸ்”

“மா! இது கோர்ட், நான் ஜட்ச் ஒரு மட்டு மரியாதை இல்ல”

“சாரி சார்!”

“ஜீவனம்சம் எதும் வேனும்மா மா”

“சார் என் வாழ்கைய எனக்கு வாழ தெரியும் அதுக்கு யார் தயவும் தேவையில்ல காசும் தேவையில்ல”

“அவ்ளோ வெறுப்பு சார்,

சார் என் பையன்?”

“என் குழந்த என் கூட தான் இருப்பான், யார்கிட்டயும் தரமுடியாது”

“குழந்தைக்கு வயசென்ன மா”

“இரண்டு வயசு சார், நான் கொடுக்கமாட்டேன், நெவர்”

“இரண்டு வயசு ஒன்னும் பண்ணமுடியாது சட்டப்படி அம்மா கிட்ட தான் இருக்கனும். நீ வேனா மாசத்துக்கு ஒரு இரண்டு நாள் போய் பாத்துக்க”

“மாசத்துக்கு இரண்டு நாள் ம்ம்ம் என் பையன பாக்க இரண்டு நாள் மட்டும் தான் டைம்,

ம்ம்

ஒகே சார் தேங்க் யூ”

“சார் இதோட 113 ம்ம்” என்று டவாலி கூற.

“வாய மூடுற படுவா! ஹூம் இந்த பாவத்தலாம் எங்க போய் கழுவ போறேனோ” என்று அங்கலாய்த்தார் நீதிபதி.

‘தடக் தடக் தடக் தடக்’

வாழ்க்கையில் எத்தனையோ உரையாடல்களை அவள் நினைத்து ரசித்ததுண்டு.

காதுமடலின் ஓரத்தில் மென்காற்று வீசி பின் முடியின் கழுத்தோரம் முத்தமிட்டு காதல் மொழிகள் கிசு கிசுத்த உரையாடல்களை நினைத்து நினைத்து களித்த மனது

மறுஜென்மத்தின் நல்வேளையில் அடிவயிற்றின் பாரம் தாங்காது கால் விரித்து கதறி அழுத தருணத்தில் உச்சந்தலையில் முத்தமிட்டு ஆறுதல்  செப்பிய வாய்மொழிகளை நினைத்து கண்கள் கசிந்த மனது

ஆனால் மூவாண்டுகள் ஆனபோதும் இன்று இந்த உரையாடல்கள் திரும்ப திரும்ப அவள் காதுகளில் கேட்டு கொண்டு இருக்கிறது. அத்துனை கோபங்களும் தாபங்களும் தாங்கிய அந்த உரையாடலின் பரிசு வெறுமையான தனிமை வெண்மதிக்கு அது பிடித்து போனதா? அல்ல அவள் அதை பழகி கொண்டாளா! என்பதை அவளே அறியமாட்டாள் நினைத்து நினைத்து பேசும் மனதும் பேசிய வார்த்தைகளை நினைத்து கண்ணீர் விடும் மனதும் உளவியலுக்கே சாவல்விடும் பெண்ணின் குணம்.

இரயிலில் அன்று கூட்டம் அவ்வளவாக இல்லை ஜன்னலோரம் வீசும் காற்றை கூட தீண்ட முடியாமல் தவித்தாள் வெண்மதி.

இரயில் புறப்பட தயாரானது புதுமண தம்பதிகள் வெண்மதியின் எதிரே வந்து அமர்ந்தனர். கடைசி நிமிடத்தில் சட்டென இரயிலை பிடித்து வெண்மதி எதிரே அமர்ந்தான் ஜீவா. “சார்! ஏன் இப்படி அரக்க பரக்க வர்றீங்க சிலிப் ஆகிருந்தா” என புதுமாப்பிள்ளை கேட்டார்.

“சார் நீங்க வேற சென்னைல ப்ளைட்ட புடிக்கனும்”

“ஹோ அதுக்காக இப்படியா”

“என்ன சார் பன்றது அர்ஜன்ட்”

“எங்க சார் போறீங்க”

“வாழ்க்கைய தேடி சார்” என கூறி ஜன்னலோரம் பார்த்தான். வெண்மதி தலைசாய்ந்து கண்மூடி கிடந்தாள்.

மனதில் சில வண்ணத்துபூச்சிகள் சிறகடிக்க தொடங்கியது அவள் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான். அவள் காது மடல்களை, மூக்கின் வளைவுகளை அதில் மின்னிய மூக்குத்தியை, இதழ்களை, அவள் கழுத்தை சற்று கிழ் இறங்கி அவள் மடியை பார்த்து கொஞ்சம் கலங்கி போனான்.

தடக்கின் வேகம் குறைய சட்டென்று கண்முழித்து மடியில் கிடந்த கண்ணனை பத்துரபடித்தினாள் இது நடக்க சில விநாடிகள் எடுத்து கொண்ட நேரத்தில்.

புது மாப்பிள்ளைக்கு பதில் கிடைத்தது.

“சிங்கப்பூர் சார்” என்று.

“ஒஹோ”

“வோர்க்குகாக போறீங்களா”

“இல்ல சார் நிரந்திரமா போறேன்”

“ம்ம் என்ஜாய் சார், உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்ச”

“இல்ல சார்! ஐயம் ஹன்ட்ரட் பர்சன்ட் ப்யூர் சிங்கிள்,

நீங்க நீயூ மேரிடா வாழ்த்துகள், ஒரு சின்ன அட்வைஸ் மனசுவிட்டு பேசுங்க உள்ள போட்டு எதையும் மறைக்காதிங்க”

“சிங்கிள்னு சொன்னீங்க செம டிப்ஸ் கொடுக்கறீங்க”

இந்த உரையாடல் நீண்டு கொண்டே போனது அவ்வ போது ஜீவா கண்கள் வெண்மதியை வேட்டையாடியது.

வெண்மதிக்கு உள்ளம் சலசலக்க ஆரம்பித்து விம்மி வாய்விட்டு அழ துடித்தது. தன்னவனின் நினைவுகளை சுமக்கலானாள். அவன் தொடாத பாகம் தன்னுள் இல்லை என்றபோதும் எதோ ஒன்றை அவன் மறந்துபோனதை நினைத்து புழுங்கினாள். இனி அவனை செல்லுலாய்டுகளில் சிறைபிடித்த தருணங்கள் மட்டும்  தான் அவளுக்கு துணை. இதற்கு காரணம் அவனை மறக்கமுடியாத மனதும் வேறொரு ஆடவனை நினைக்க முடியாத மனதும் தான்.

‘தடக் தடக் தடக் தடக்’

சத்தத்தின் வேகம் தான் சற்று குறைந்தது ஆனால் மனதில் ஏற்பட்ட சத்தத்தை தான் அடக்க முடியவில்லை ஏதோ ஒரு உணர்வு மனதின் சுவரோரத்தில் அரித்து கொண்டிருந்தது இப்படியே தான் இந்த பயணம் தொடர்ந்திடாதா  வார்த்தைகள் மௌனித்து கண்கள் பேசி கலந்திடாதா என்று துடித்தாள். தூரத்து பார்வையின் சல்லாபம் கூட அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும்  கிடைத்ததில்லையே என மனம் ஏங்கியது ஆக்ஸிஜன் கூட காதல் காற்றையே நுரையீரலுக்கு கடத்தி சென்றது நினைத்த பாகம் என்னதென்று தெரிந்திற்று ஆனால் அந்த வலித்த பாகத்தை  எங்ஙனம் போய் தேடுவது வலித்த மனதிற்கு எப்படி தான் மருத்துவம் பார்ப்பது. எங்கு ௐளிந்து கொண்டு உயிரை உறுவி எடுக்கிறாய் என்று மனக்குரல் மனதிடம் கேட்டது, அதற்கு மனது எப்படி பதில் கூறமுடியும்!.

எல்லோரும் இறங்கிவிட்டார்கள் அவனும் தான், இரயில் கூட அடுத்த பயணத்திற்கு தயாராகிவிட்டது பாவம் அந்த சண்டாளிக்கு தான் நிலை கொள்ளவில்லை. இரயிலின் ஜன்னல் ஓரம் அவன் முகம் தெரிந்திட அள்ளி மாரனைத்து ஓடி வந்தாள் இரயிலின் படிகளில் நின்று கண்களை உலவவிட்டாள் அதோ அகபட்டுவிட்டான் ! அப்படியே சிறைபிடித்திட மாட்டோமா என்று வலித்த பாகம் ஏங்கியது அது முடியுமா!.

மெள்ள அருகில் வந்து அவள் வாயெடுப்பதற்குள்ளே விழித்த கண்ணன் அழைத்தான் “அப்பா! அப்பா!” என்று.

கொஞ்சம் மகிழ்ச்சி தான் இருந்தும் மௌனித்து நின்றான் அள்ளி அணைக்க கைகள் துடித்தது நடுவில் தடுத்து பறித்தாள் வெண்மதியின் தாய், கண்கள் கலங்கியது. வெண்மதியின் கண்களை பார்த்தான் கண்களில் சம்பாஷனை நிகழ்ந்தது வார்த்தைகள் விடுமுறை எடுத்து கொண்டது மொழிகள் காலவரையின்றி மௌனமானது. கண்கள் பேசிக்கொண்டே இருந்தன. இரயில் புறப்பட ஆயத்தமானது. தண்டவாளங்கள் திசை மாற காத்துகொண்டிருந்தது. இப்போதாவது வாய்விட்டு ‘நீ எனக்கு வேனும்’ என்று சொல்வாளா என சந்திப்பில் விடைபெறும் இரயில்கள் கூட அதிசய்த்து இருந்தது. பாதகத்தி சொல்லாமலே நிற்கிறாள் என கோபங்கொண்டு கிளம்பியது. ஜீவாவின் கண்கள் பரபரத்தன இரயிலை பிடிக்க மூளை உத்தரவிட்டது வெண்மதியின் கரங்களை பற்ற நெஞ்சம் 
சொன்னது. நாவும் சதி செய்தது ‘சொல்லி தொலயடா !’ என உருவமில்லா ஒரு குரல் கூச்சலிட்டது இருந்தும் இருவர் மனதிலும் அந்த உடன்படிக்கை வாசிக்கப்பட்டது.

“ஜீவகாருண்யாவுக்கும் வெண்மதிக்கும் செய்யப்பட்ட விவாகத்தை சட்டப்படி இந்த கோர்ட்டு ரத்து செய்கிறது”

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

மீட்டாத வீணை

மீட்டாத வீணை

“மறந்துடேனா! இந்த லோகத்துல அந்த இரங்கநாதன் கூட மக்கள ரட்சிக்க மறக்கலாம்டி குழந்தே ஆனா நான் என்னைக்குமே என்னோட கொள்கைகள மறந்ததில்ல தெரியுமோ”

“இல்ல இவ்ளோ நாழி ஆயிடுத்தே இப்ப போறளே அதான் கேட்டேன்” என்றாள் கஸ்தூரி மாமி.

“வயசாயுடுத்தோனோ அதான் நடக்க முடியுறதில்ல” என்று ஐப்பாசி மாத மழை நீர் தேக்கங்களில் தத்தி தத்தி நடந்து வந்து கொண்டிருந்தார் நம்ம சீனிவாசன் பாவம் எம்பத்தினாலு வயசாயுடுத்தோனோஅப்படி தான் இருப்பார் என்ன பண்ண சொல்றேள். சட்டென சிறிது நேரம் நின்று நிதானமாக ‘என்ன?’ என்று சம்பாஷனையில் கேட்டார். நம்மலதானோ! நம்மலயே தான். ‘என்ன?’ இல்ல இந்த தெருவில் இருக்குற மத்த மார்க்கம் சமூகம் கொண்டவா கூட அக்ரஹாரத்து பாஷை பேசுறச்ச நம்ம பேசலன தப்பாயுடுமோனோ அதான்….. வேண்டாம்குறேளா! நல்ல இல்லயோ, இருந்தாலும்…

சரி இதோட நிறுத்தின்றுவோம் இல்லனா ரொம்ப கோச்சுண்டுருவார் போல ம்.

சுப்ரபாத கீர்த்தனைகள் ஆங்காங்கே ஒலித்து கொண்டிருந்தது கதிரவனின் ஓளி வேகம் சற்று குறைந்து தான் வந்தது.  அக்ரஹாரத்து மாமிகள் எல்லோரும் மஞ்சள் தெளித்து கோலமிட்டு கொண்டிருந்தனர் ஆஹா! என்ன அழகு இத பார்க்க நம்ம சீனிவாச அய்யங்காருக்கு கொடுத்து வைக்கலயே ஆமா கண் பார்வை வேற குறஞ்சுருச்சோனோ. பாவம் அந்த நடை தளர்வுல பங்கஜம் மாமி போட்ட கோலமயிலோட கால மிதிச்சுட்டார். பங்கஜம் மாமிக்கு கோவம் தலைகெறிவிட்டது.

“சீக்கிரம் போய் சேரமா நம்ம பிராணன வாங்குறதே” படக்கென வாயைவிட்டாள் பங்கஜம் மாமி.

கண்கள் கொஞ்சம் மங்கல் என்றாலும் காதுகள் ஒருவாறு உயிர்ப்போடு தான் இருந்தது. “கொஞ்சம் பொறுடி மா வைகுண்டத்துல இடமில்லயாம் அதான் கைலாயத்துல கேட்டுருகேன் இடம் கிடச்ச உடனே போய்றேனடி மா சரியா” இந்த மறுமொழிக்கு பங்கஜம் மாமியிடமிருந்து  குமட்டு சினுங்கல் தான் கிடைத்தது.

“அப்படி தட்டு தடுமாறி இந்த அதிகாலை வேளையில எங்க தான் போறாரோ அந்த பெருமான சேவிக்க போறாரோ” என்றான் அவரை கண் கொட்டாமல் பார்த்த வழிப்போக்கன்.

மறுபடியும் நின்று நிதனாமாக திரும்பி பார்த்தார் சீனிவாசன் மறுபடியும் நம்மளதான் “அய்யோ நானில்ல சார்வாள்”.

“ஓய் நீ என்ன ஊருக்கு புதுசா அவர் எங்க போறாரு நோக்கு தெரியாதா. நேதாஜி போருக்கு கூப்டப்ப பாரதி பாட்டெல்லாம்  பாடின்டே பட்டாளத்துக்கு போனவரு பெருமாள சேவிக்க போறாராக்கும்”

“நேக்கு என்ன தெரியும்? பின்ன எங்க அவசரமா கொல்லைக்கு போறாரோ”

“போடா அபிஷ்டு வெட்டி பேச்சு பேசாம போடா” என வழிபோக்கனுக்கு புத்தி கூறி சென்றார் கோயில் குருக்கள்.

அந்த மனுஷன் எங்க தான் போறாருனு பின் தொடர்ந்து போனான் நம்மவன்.  பனிகாற்று வாடையும் குளிரும் அந்த காலை பொழுதை ரம்மியமாக்கியது.

ஒரு நீண்ட நடை பயணத்துக்கு பிறகு சீனிவாச பெருமாள் கோயில் வாசல் தென்பட்டது. மெள்ளஅவர் நடை வேகம் பெற்றது முகத்தில் கொஞ்சம் புன்னகை கொஞ்சம் சினுங்கல் அது மூப்பின் காரணமாய் இருக்கலாம் கொஞ்சம் பதற்றமும் கூட. ஒருவழியாக அந்த காலைபனி அவரை வெகுவாக மறைத்தது.

கோயில் கடைத்தெருவின் வாசலின் மறைவில் நின்று நம்மவன் பனி விலக காத்திருந்தான். அப்படி என்ன தான் பண்ணப்போறரு இன்னைக்கு பார்த்தே ஆகனும் என்ற ஆவலுடன்.

மெள்ள புகைமூட்டம் புடை சூழ்ந்தது அது விலக வெகு நேரம் ஆனது அதற்குள் நம்மவன் அங்கலாய்த்து தீர்த்துக்கொண்டான். அந்த புகை மண்டலம் சற்றே விலக எத்தனித்தது பொறி பறக்க நெருப்பின் ஜுவாலை தெரிந்தது துளசி வாடையுடன் நெய்யின் நறுமணமும் கலந்து  மூக்கை துளைத்தது இட்லிகள் கமகமவென ஆவியை பரவவிட்டது, ஆழ பொறிந்த தோசைகள் நெய்யை சொட்டி கொண்டிருந்தன, வறுத்த கொட்டை பொடியின் இடுக்குகளில் சிக்கரி தன் மணத்தை சிதற விட்டது குறிப்பாக பொன்னிற அப்பங்கள் தேனை கக்கி கொண்டிருந்தன அந்த நாரயண வாடை  ஒருவாறு அவனை பாற்கடலில் மூழ்க செய்தது ஆனால் எந்த வித சலனமுமில்லாமல் அங்கே கிடத்தப்பட்ட பலகையின் முன்னேரத்தில் உட்கார்ந்து சௌகர்யத்துடன் சப்பு கொட்டி மணி கடை காப்பியை குடித்து கொண்டிருந்தார். நம்ம சீனிவாசனை பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போனான் நம்மவன்.

“அட பகவானே” என தலையில் அடித்துக்கொண்டே பெருமாள் கோயிலை நோக்கி நடந்தான் நம்மவன். அவனை நேருக்கு நேர் முட்டுவதை போல 
துளசியையும் நெய் பொங்கலையும் கைகளில் ஏந்தியபடி ஆழிலையில் எழுந்து ஓடி வந்த கண்ணனை போல சீனிவாசனை நோக்கி ஓடி வந்தான் பாரதி “சீனி தாத்தா! இந்தாங்க” என்று இரண்டு கைகளையும் நீட்டினான். பொங்கலை எடுத்து கொண்டு காப்பி டவராவை பாரதி கைகளில் வைத்தார் சீனிவாசன், அதனை பவ்யமாகவே ஏந்தி கழுவி மணியிடம் கொடுத்தான்.

“டேய் தம்பி, இந்தா இத போய் சிவராமன் ஐயர்ட்ட கொடுத்துட்டு வா” என நான்கு நெய் அப்பத்தை வாழையிலையில் மடித்து கொடுத்தான் மணி.

அதை வாங்கி கொண்டு துள்ளி குதித்து ஓடினான் பாரதி. அவன் ஓடும் அழகை அவ்வளவாக ரசிப்பதற்கில்லை அவன் அணிந்த பனியனில் அவன் மொத்த மச்சங்களையும் எண்ணிடலாம் அவன் அணிந்திருந்த டவுசரில் தான் எத்துனை நிறங்கள் அது ரசிப்பதற்குறியதாகுமா என்ன!.

சூரியன் இப்போது சஞ்சாரம் செய்ய தொடங்கிவிட்டான். சீனிவாச அய்யங்காருக்கோ ஒரே படபடப்பு.

“என்ன ஓய் தேடிட்டு இருக்கீரு” என கூறிக்கொண்டே அவ்வழி கடந்தார் கரீம் பாய்.

“ஓ! நீயா மூக்கண்ணாடிய மறந்துட்டேன் ஓய்! கொஞ்சம் நீ வந்து படிச்சு சொல்லேன்” என்று அன்றைய நாளிதழை நீட்டி தன் சுருங்க சிரிப்பால் அசடு வழிந்தார்.

“இப்பலாம் நீ ரெம்பவே மறக்கறீர் ஓய்.

கொஞ்சம் பொறும் பேரன போய் ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்.” எனக் கூறிவிட்டு மெள்ள நடந்தார் பாய்.

வழக்கம்போல பாதசாரிகளை வேடிக்கை பார்த்தவாறே நாழியை கடத்தினார். அதற்குள் நம் பாரதியும் வந்துவிட்டான். வாய்க்கு வாய் வாயாற தாத்தா என்று அழைக்கும் உரிமையை முழுமையாக அந்த  அக்ரஹாரத்தில் பெற்றவன் பாரதி மட்டுமே என்பதில் அங்கிருப்பவர்களுக்கு கொஞ்சம் பொறாமை தான். பகுத்தறிவு பேர்வழி என்று எப்போதும் விதண்டாவாதமாக பேசிக்கொண்டு சித்தாந்தங்களை சிந்திக்கொண்டு திரிவார் என்பதாலோ அல்லது பட்டாளத்தில் சில பல பராக்கிரம செயல்களை செய்ததால் தானோ என்னவோ சீனிவாசனை அவ்வளவாக யாருக்கும் பிடிப்பதில்லை. தான் பெற்ற ஐந்தும் சரி, தன்னை ஆறவதாக பெற்றவர்களும் சரி சீனிவாசனின் கொள்கைகளில் பெரிதும் அவநம்பிக்கை உடையவர்கள். ஆனால் சீனிவாசனும் ஒரு விதத்தில்  அதிர்ஷ்டசாலி தான், தன் சிந்தனை பிதற்றல்களை கேட்க ஒருத்தியை அனுப்பி வைத்தானே. அவள் என்ன பாவம் செய்தாளோ வாழ்க்கைபட. இருந்தாலும் அவள் பேணிய அன்பிற்கு நிகர் அந்த ஆண்டாள் கூட ஈடு செய்ய முடியாது.

அவள் வெற்றிடத்தின் பக்கங்களை தான் இப்போது நிரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார் சீனிவாசன். அதற்கு பெரிதும் தான் பயன்படுகிறான் பாரதி. பின்பு தூக்கி தாலாட்டிய தன் பேர பிள்ளைக்கே வைக்க இயலாத பெயரை இந்த மணி மைந்தனுக்கு வைத்து அழகு பார்த்தார் அல்லவா!.

அன்று கூட்ட நெரிசலுக்கு வழி இல்லாமல் போனது அதனால் கடையும் இளைப்பாறிக்கொண்டது. பாரதிக்கு தான்  கொஞ்சம் மகிழ்ச்சி இரண்டு அப்பம் ஒரு தோசையும் எடுத்து சீனிவாசன் அருகே உட்கார்ந்து சுவைந்து கொண்டிருந்தான்.

“பாரதி கண்ணா! இத கொஞ்சம் படிச்சு சொல்லுடா”  என்றார் சீனிவாசன் ஏக்கமாக.

சீனிவாசனை பார்த்து மென்சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் சுவைக்கலானான்.

அதற்குள் கரீம் பாயும் வந்துவிட்டார். சீனிவாசனுக்கு புன்னகை பொங்கியது பாவம் அவையெல்லாம் இன்னும் கொஞ்சம் நாழிக்கு தான் என்று அறிந்திருக்கமாட்டார் யானும் சொல்வதாய் இல்லை அனுபவிக்கட்டும். கரீம் பாய் கேட்கபோகும் கேள்விகளுக்கும் அதை கேட்கமறுக்க போகும் சீனிவாசன் செவிகளுக்கும் ஏன் அந்த அக்ரஹாரத்துக்கே பேரதிர்ச்சியாக தான் இருக்க போகிறது அந்த கேள்வி.

பாவம்! நடக்கபோவது இன்னதென்று அறியாமல் சிரித்து கொண்டிருந்தார் சீனிவாசன் தெரிந்திருந்தால் இந்த கேள்விக்கு பதில் கூற தேவையே இருந்திராதே…

“என்ன ஓய் ரெம்ப நாளா ஆளயே காணோம்”என்றார் சீனிவாசன்.

“என்னத்த ஓய் சொல்ல பேர பிள்ளைகள் வீட்டு வேலைனே ஓடிடுது”

உம்ம பசங்கலாம் எப்படி இருக்கா?” எனக் கேட்டார் கரீம் பாய்.

“எல்லாரும் சௌக்கியம் ஓய், சென்னை ரொம்ப பிடிச்சு போய்டுத்து போல தீபாவளிக்கு கூட என்ன அங்க வர சொல்லுதுகள் ஏன்டானு கேட்டா லீவ் கிடைக்காதுனு சொல்றதுகள். இப்படி காசு பணத்த சம்பாரிச்சு என்னத்த பண்ணபோறதுகளோ

ம்ம் பிராணன விட்ட கூட வருதுகளோ என்னவோ”

“ஓய் உன்னை முதியோர் இல்லத்துல சேர்க்காம தனியா விட்டதுக்கு சந்தோசபடுவோய், அப்புறம் பேர பசங்க எப்படி இருக்கா”

“அவங்களுக்கு என்ன ஓய் நல்ல பெரிய இன்டெர்னாஷ்னல் ரெசிடன்ட் ஸ்கூல்ல படிக்கிறாங்க” என்று பகட்டு சிரிப்பு சிரித்தார் சீனிவாசன்.

“ஹூம்…..

ரொம்ப சந்தோஷம், ஆனா இப்படி தனியா எப்படி தான் சமாளிக்கிறியோபா”

“தனிமை என்ன நமக்கு புதுசா ஓய், பாதி இளமைய தனிமையே வாங்கிடுத்து மீதி தனிமைய இப்ப அனுபவிக்கிறேன்

நல்ல வேள ஓய் அவ சுமங்கலியா போய் சேர்ந்துட்டா நான் போய் அவ இருந்துருந்தா வாழும் போதே நரகத்த பார்த்துண்டுருப்பா

இவாலாம் அதுக்கும் மேல காட்டிருப்பா” என குரல் தழு தழுத்தது அருகில் இருந்த மாகோலத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் அந்த கோலம் அவர் ராஜலக்ஷ்மி போட்டது போல் இருந்திருக்கலாம் யார் கண்டது.

“விடு ஓய், என்னைக்காது என் நிலைமைய கண்டுருக்கீரா

பம்பரம் மாறி சுத்திண்டு இருக்குற வயசாவோய் இது, ஒரு அஞ்சு நிமிசம் செத்த குருக்க சாச்சு கண்ணசற முடியறதா! ம்ஹூம்…” என்று சலித்தார் கரீம் பாய்.

“என்ன ஓய் இப்படி சளிச்சுக்குற, நம்ம பட்டாளத்துல இருந்தப்ப கூட நீ இப்படி சலிச்சதில்ல இப்ப என்ன ஓய்”

“உனக்கு என்ன ஓய் நீ நல்லா இருக்கீரு சுகவாசியா பசங்க பேரங்கலாம் நல்ல வெளியூருக்கு அனுப்பி வச்சுட்டு ஒண்டி கட்டயா சந்தோசமா இருக்கீரு…

என பாரும் வயசுக்கு மரியாதையுமில்ல ஒரு பச்சாதாபமில்ல இந்த வயசுக்குமேல என்ன என்ன வேலயலாம் வாங்குறா ம்ம் ‘அல்லாஹ்’ உண்மைய சொல்லனும்னா முடிலடா… சீனி”

“வாஸ்தவம் தான்…

வர வர மனுஷாளாம் மாறீட்டே வர்றா

ஒரு பொறுப்பில்ல

இங்க பாரு திருப்பல்லாண்ட எப்ப பாடுறதுகள்னு கலிகாலம் என்னத்த சொல்ல சொல்ற”

“ஆமா ஆமா மனுஷாள் மாறிட்டு தான் வராங்க அதுல நீயும் தான இருக்க

ஹா 
        ஹா
                 ஹா”

என்றார் கரீம் பாய் எக்காள சிரிப்புடனே.

“என்ன ஓய் சொல்றீரு?” என்று கரீம் பாயை சிறுது நேரம் உற்று பார்த்தார்.

‘கொஞ்சம் தள்ளுங்க தாத்தா’ என்று கரீம் பாயின் கவனத்தை சிதறி சென்றான் பாரதி.

“பின்ன என்ன ஓய், இந்த இருக்கானே மணி வம்சமே உங்க வீட்டுக்கு பரம்பர பரம்பரையா சேவ செஞ்சிட்டு வந்தா இப்ப இங்க இருக்கான் அதுக்கு நீ தான் காரணம் ஆனா….” என்று இழுத்தார்.

ஆம், சுமார் அறுபது ஆண்டுகளாக சீனிவாசன் வீட்டில் கைங்கரியம் செய்து வந்த மணியின் மூத்தகுடிகளின் பூர்வ பிம்பத்தை தகர்த்து மணியின் இருபதுகளில் தனக்கு பிடித்தமான தாயார் சன்னதி தெருவிலுள்ள காணி நிலத்தை கொடுத்து அழகு பார்த்தவர் சீனிவாசன். எத்துனை மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் கண்முன்னே உதிரம் சிந்தி கிடக்கும் மனிதர்களின் இரத்த வாடை கூட நுகர்தல்கூடாது என்று விலகி செல்லும் மனிதர்களிடையே சீனிவாசன் அந்த நூற்றாண்டின் நாயகன் தான் இருந்தும் சீனிவாசன் இன்று இப்படி செய்ததை யாரலும் நியாயப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்.

காணி நிலம் கொடுத்தும் எப்படி வாழப்போகிறோம் என்று கை பிசறி முழி பிதுங்கி நின்ற மணிக்கு தான் வாழ்க்கையின் சூட்சமத்தை ஒப்புவித்தார். இவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் அவர்கள் அப்படி தான் நடக்க வேண்டும் என்ற கூற்றுகளை கேளாது வாழ்ந்த சீனிவாசன் அப்படி செய்தது போற்றுதற்குரியதாக என்றும் இராது தானே.

கலைவாணி மீட்டெடுக்கும் வீணையின் இசையை இவர்கள் தான் கேட்கவேண்டும் என்று பிரம்மன் செய்தானோ தெரியவில்லை ஆனால் அப்படி சேராத இசையை மீட்ட வீணை வாணியின் கைகளில் இருந்தென்ன லாபம் அது நலம் கெட்டு புழுதியிலே கிடத்திடலாம். அதை வாரி எடுத்திட்டு மீட்ட சீனிவாசன் போன்று மனிதர்கள் இருந்தார்கள் அவர்களும் விதிவசத்தால் மதி இழந்து கிடக்கிறார்கள் இதுவும் பிரம்மனின் செயல் தானோ யார் அறிவார்?.

பாரதி இந்த சம்பாஷனைகள் எதையும் பொருட்படுத்தவில்லை அவன் கவனமெல்லாம் அவனை கடந்து சென்ற அந்த பள்ளி மாணவன் மீது தான் இருந்தது புத்தக மூட்டையின் அடர்த்தியை தாங்காமல் ஒரு புத்தகம் புழுதியில் வீழ்ந்தது அதை ஓடி சென்று தொட்டு எடுத்தது இந்த மென் கைகள் ஆஹா! என்ன நறுமணம் புத்தக வாடை தான் எவ்வளவு அருமையாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு பக்கமாக திருப்பினான் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தான் மெள்ள திருப்ப ஓர் இடத்தில் நின்றான் தவறவிட்டவனும் வந்தான் பாரதி கைகள் பற்றிய புத்தகத்தை பிடுங்கி எடுத்து சென்றான் பிடுங்கிய வேகத்தில் அந்த பக்கம் கிழிந்து பாரதி கைகளிலே தங்கிற்று. அந்த காகிதத்தையே பார்த்து கொண்டிருந்தான் பாவம் அவனுக்கு தான் என்ன தெரியும் முன்னும் பின்னும் பார்த்துகொண்டிருந்தான் ஒன்றும் புரியவில்லை காற்றிலே பறக்கவிட்டான் அது ஓடி விளையாடியது அங்கிருந்த பாப்பாக்களுடன்.

அதை பார்த்து கொண்டிருந்த கரீம் பாய் இப்போது சட்டென வினாவினார்

“ஆனா இந்த பாரதி பையன பள்ளிக்கூடதுல சேர்க்கனும் படிக்க வைக்கனும்னு தோனலல

உம்ம பேரன மட்டும் இன்டர்நெஷனல் ஸ்கூல்ல படிக்க வைக்கிறீரு இவன கவர்மன்ட் ஸ்கூல்ல கூட படிக்க வைக்க முடியலயே ஓய்

ஏன் ஓய் கொள்கைகளலாம் மறந்துட்டியா இல்ல மறச்சுட்டியா”

இதற்கு மறுமொழியை பாய் எதிர்பார்க்கவில்லை சீனிவாசனும் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

சீனிவாச அய்யங்காருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை வாய் குளறியது ஆனால் உதடுகள் மட்டும் ஏதோ சொல்ல துடித்தது

“நான் மறந்துட்டேனா

நான் மறந்துட்டேனா”

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

ஊழ்வினை உறுத்தும்

ஊழ்வினை உறுத்தும்

துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில்  அவன் அப்படி செய்திருக்ககூடாது தான் இருந்தாலும் யார் செய்த புண்ணியமோ ஏன் முற்பிறவியில் அவன் செய்த புண்ணியமாக கூட இருக்கலாம் ஒருவேளை தெறித்த தோட்ட கூட அவன் காதருகே “டேய் நவுருடா” என்றதோ யார் கண்டார்கள்! காலில் சுருங்கெற்று கடிக்க, குனிந்தவன் அன்று எதிரில் நிற்பவனை பரலோகம் அனுப்பி வைத்தான். வைத்தவன் குறி தப்பியது, இது அடிக்கடி பரம்பொருளுக்கே நடக்கும்போது இவனுக்கு நடவாதா? என்ன!. துப்பாக்கியின் முனையில் இருந்து வெளிப்பட்ட அந்த சூட்டின் புகைச்சல் தான் இப்போது எய்தவனின் நெஞ்சிலும் புகைகிறது.

அது ஒரு நடையாளர் பூங்கா ஏரிகறையின் ஓரத்தில் அமைந்துள்ள அந்த பூங்காவில் சுமார் இருவது வருடங்களுக்கு முன்பு மும்மாரி மழையினால் ஏரியில் தண்ணீர் வழிந்தோடும் மேட்டுகுடிகள் படகு சவாரி செய்வார்கள் பூர்வகுடிகள் அங்கே மீன் பிடித்து அவர்களை வேடிக்கை பார்ப்பார்கள் யார் கண்பட்டதோ இல்லை கண்படவில்லை மனிதனின் கால்பட்டுவிட்டதுஇருபது ஆண்டுகளில் ஏரி மயானமானது புதர் மண்ட தொடங்கியது கயவர்கள் அடைகலம் அடைந்தார்கள் வடமதுரையின் கோவா லாஸ்விகாஸ் எல்லாம் அந்த பூங்கா தான் கஞ்சா தொடங்கி கேட்டது கிடைக்காதது என்று எதுவும் அங்கில்லை இருந்தும் சில வேடிக்கை மனிதர்கள் வாடிக்கையாக நடைபோடுவதுண்டு ஆகயால் அந்த மாலைவேளையின் அவ்வபோது இப்படி சில சம்பவங்கள் நடப்பதுண்டு அதை தவறாமல் இவர்கள் இருவரும் பார்த்து ரசிப்பதுண்டு.

“என்னடா இது! இப்பலாம் இங்க அடிக்கடி இப்படி நடக்குது” என்றான் தேவா.

“ஆமா டா இங்க என்னமோ பன்றாய்ங்கடா! என்னானு நம்ம கண்டுபிடிக்கிறோம்” என்றான் சித்தார்த்.

“இது நமக்கு தேவ இல்லாத வேலை”

“வேலையே இல்லாமா தான சுத்திட்டு இருக்கோம் அதுக்கு இந்த வேலைய பாப்போம்” என நக்கலாக சொன்னான் சித்தார்த்.

அடுத்த நாள் காலை சித்தார்த் மட்டும் சென்று நோட்டமிட்டான். எட்டு மணி நேர தேடலுக்கு பிறகு அவர்களின் திட்டங்களை ஒருவாறு அறிந்து கொண்டான். அதை தேவாவிடமும் கூறினான். ஆனால் அவன் அதற்கு உடன்படவில்லை. உரையாடல் நீண்டது.

“டேய் நம்ம எவ்வளவு கஷ்டத்துல இருக்கோம்னு உனக்கே தெரியும்

உனக்கு அப்பா இல்ல எனக்கு இருந்தும் பிரயோஜனமில்ல நம்ம தான் இனி எல்லா பாத்துகனும்

அவய்ங்க நாளகழிச்சு வைரத்த கடத்த போறாய்ங்க இத மட்டும் நம்ம அடிச்சோம்னா!” என வெறி கொண்டவன் போல பேசினான் சித்தார்த்.

“டேய் சித்தா! ஏன்டா உன் புத்தி இப்படி போய்ருச்சு நம்ம பட்டதாரிகள்டா

அதுமட்டுமில்லாம இதலாம் தப்பு! மாட்டுனா நம்மள செதில் செதிலா செதச்சுருவாய்ங்க” என்று நொந்துகொண்டே சொன்னான் தேவா.

“ஆமா நம்ம பட்டதாரிகள் தான் வேலைகிடைக்காத பட்டாதாரிகள் உனக்கு நியாபகமிருக்கா வேலை கிடைக்காம நீ மெக்கானிக்கல் படிச்சும் இரும்பு பட்டறைக்கு போன நான் நூறு ரூவா சம்பளத்துக்கு ஜல்லி அள்ளி போடுற வேலைக்கு போனேன்”

“ம்ஹூம் எனக்கு சரியா படலை”

இப்போது மிகவும் நிதானமாக சொல்ல தொடங்கினான் சித்தார்த் “இங்க பாரு ரொம்ப நல்லவனா இருக்காத, முடிஞ்சா நாலு எதிரிகள சம்பாரி அப்துல் கலாம எல்லோரும் மறந்துட்டாங்க ஆனா காந்திய இன்னும் நியாபகம் வச்சுருகாங்க தெரியும்ல

நல்லது மட்டும் செய்ய நான் ஒன்னும் புத்தனுமில்ல நீ இயேசுவுமில்ல ஏன் அவுங்க ரெண்டு பேரும் கூட நல்லவங்க இல்ல ஏன் தெரியுமா அவங்களுக்கு அடுத்தவன் கஷ்டபடுறத பார்க்க ரொம்ப பிடிக்கும் கஷ்டபடுறத பாக்குறது கடவுளே இல்ல தான!

இப்பலாம் தப்பு பண்ணமா இருக்குறது தான் ரொம்ப தப்பு தேவா! ஏன்ன ரொம்ப நல்லவனாயிருந்த பொய்யா நடிகிறானு சொல்றாய்ங்க

நல்லவனா இருந்தா சில விஷயத்துக்கு பயபடனும் ஆன கெட்டவனா இருந்தா எதுக்கும் பயப்பட தேவயில்ல

கடைசியா ஒன்னு சொல்றேன் நூறு வருஷம் நல்லவனா வாழ்ந்து கஷ்டபடுறதுக்கு ஒரு நாள் கெட்டவனா கெத்தா வாழ்ந்து செத்துரலாம்” என போதனையை முடித்த துறவியை போல பெருமூச்சுவிட்டான் சித்தார்த்.

தேவனின் மௌனம் தெடர்ந்து நீடித்தது அந்த மௌனம் சம்மததிற்கான அறிகுறியாக தெரியவில்லை ஆனால் சரியென்று கூறினான் அதைகேட்டு ஞானம் பெற்றவன் போல துள்ளி குதித்தான்.

“இது தப்பு இருந்தாலும் உனக்காக நம்ம நட்புக்காக” என்றான் தேவன்.

அந்த நாளும் வந்தது அதே பூங்கா நடையாளர்கள் வரதனது குறைந்திருந்தது சரியாக மாலை ஆறு மணி இருக்கும் இருட்ட தொடங்கியது. இரண்டு நபர்கள் மட்டும் தான் அவர்களை எளிதாக சமாளித்துவிடாலாம் என்று வைரத்தை கடத்தபோகும் ஏரியின் புதர் மண்டிய இடத்தை காட்டினான் சித்தார்த் அங்கு தான் இருவரும் சந்திப்பார்கள் என்று உறுதியாக கூறினான் இருவரும் பிரிந்து சென்று மறைந்தார்கள். பணபெட்டியும் வைரத்தை வைத்திருக்கும் பையையும் இருவரும் பரஸ்பரம் மாற்றி கொள்வார்கள். பணபெட்டியை வைத்திருப்பவனை நீ பார்த்துக்கொள் இன்னொருவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முடிவு செய்தார்கள்.

பொருள் இடம் மாறியது கைக்குலுக்கி பிரியும் போது சட்டென ஒரு சத்தம் வைர பையை வாங்கியவன் சுருண்டு விழுந்தான் இரண்டு பையையும் களவாடி ஓட்டம் பிடித்தான் இன்னொருவன்.

இருவருக்கும் பேரதிர்ச்சி இருந்தும் முடிவில் மாற்றமில்லை போட்டிக்கு ஒருத்தன் மட்டும் தான் என்று இருவரும் அவன் மீது பாய்ந்து அவன் முகவாய்கட்டையை பதம் பார்த்தார்கள்.

இருவரும் ஆளுக்கொரு பையை எடுத்து கொண்டு நடந்தார்கள் ‘தப்பித்தோம்’ என்று நினைத்து கொஞ்சம் நடையின் வேகத்தை குறைத்தார்கள். ஆனால் விதி வலியது அல்லவா! கடத்தல்காரனை சுருண்டு விழ செய்தவன் வேகாமாக தாவி தேவன் மீது விழுந்தான் உடனே சுதாரித்து பையை சித்தார்த்திடம் தூக்கிபோட்டான். சித்தார்த் தடுக்க வரும்போது முகவாய்கட்டையில் அடிவாங்கியவன் வலி தாங்காமல் ஓடி வந்தான் அவனை பார்த்து இவன் ஓட்டம் பிடிக்க அவனை துரத்தி கொண்டு இவன் ஓடினான்.

இப்போது வசமாக தான் மாட்டிக்கொண்டான் தேவன்.

“இந்தா உன் நண்பனுக்கு போன் போட்டு வர சொல்லு! பொருளோட” என்றான் போலிஸ்காரன். ஆம் அவன் போலிஸ்காரன் தான் இங்கு நடக்கும் பல விளையாட்டுகளில் சில விளையாட்டுகள் அவன் விளையாடியது தான். பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள் அரசு கொடுக்கும் சொற்ப சம்பளம் பத்துமா!.

அழைப்பை ஏற்று கொண்ட சித்தார்த் “டேய் ! தப்பிச்சிட்டுயா எங்க இருக்க” என்று படபடவென பொறிந்தான்.

போலிஸ்காரன் குறுக்கிட்டு “அவன் எனகிட்ட தான்டா இருக்கான் ஒழுங்கு மரியாதையா அத கொடுத்துரு இல்ல உன் நண்பன் என் கையால செத்துருவான்”

எதிர்முனையில் பதில் இல்லை மறுபடியும் கேட்டபோதும் நீண்ட அமைதி சட்டென “சாரிடா நண்பா” என்று துண்டித்தான்.

அந்த பதிலை இருவருமே எதிர்பார்க்கவில்லை. போலிஸ்காரனுக்கு கோபம் தலைக்கேறியது. “அவனுக்கு ரொம்ப தான் பேராசை” என்று தூப்பாக்கியை அவன் மார்பில் அழுத்தினான். மறுபடியும் சித்தார்த்தை அழைத்தபோது முற்றிலுமாக அனைக்கப்பட்டிருந்தது. போலிஸ்காரனுக்கு ஜிவ்வென்றேறியது ஜீவதாரண்யம்.

துப்பாக்கியின் முனை இப்போது தேவன் நெற்றியில் முத்தம் கொடுத்து கொண்டிருந்தது எப்போது அது தன் அன்பு பரிசை தரபோகிறதென்ன அவனுக்குள் அப்படி ஒரு ஆவல் அது இந்த புவி வாழ்கையின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாய் இருக்கலாம். போலிஸ்காரனின் விரல்கள் இப்போது அந்த டிரிகரை தழுவி கொண்டிருந்தது எப்போது நம்மை தெறிக்கவிடுவார்கள் என ஆவலோடு காத்திருந்தன தோட்டாக்கள் அச்சமயம் செல்லொளி கேட்டது தேவனின் கைப்பேசி அது அம்மா என்று பச்சையும் சிவப்பும் ஆர்பரித்தன.

“உன் அம்மா தான் எங்க என்னனு கேட்டா வெளில இருக்கேன் இப்போதைக்கு வரமுடியாதுனு சொல்லு” என்றான் போலிஸ்காரன்.

“ம்ஹும்” என தலையை வேகமாக ஆட்டினான்.

துப்பாக்கியின் கைப்பிடி முனையால் ஓங்கி மூக்கில் விட்டான் சில் உடைந்தது. “ஒழுங்கா பேசு என போனை காதில் வைத்தான்”

“மா!” என தழுதழுத்த குரலில் கூறும்போதே அவன் தாய் பதறிவிட்டாள்.

“என்னப்பா ஒரு மாறியா பேசுற”

“ஒன்னுமில்லமா இங்க ஒரு வேலையா இருக்கேன் வர லேட்டாகும் நீ தூங்கு”

“சரி பா சரி பா, ஏன்பா நீ சாப்டியா!”

அழுகை பீறிட்டு வந்தது வாய்விட்டு அழ வாய் துடித்தது ஆனால் நெற்றியில் வைத்த துப்பாக்கி இப்போது அவன் தொண்டைகுழியில் சொருக பட்டிருந்தது.

“ம்ம் சாப்டேன் மா நல்லா சாப்டேன்”

“சரி பா சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு, நான் போன வச்சுற்றேன்”

துப்பாக்கி மெல்ல மேல் ஏறியது. அவனால் வெறியை அடக்கமுடியவில்லை சித்தார்த்தனின் குரல் ரீங்காரமாக ஒலித்து கொண்டிருந்தது. இப்போது அது உச்சத்தை அடைந்தது.

ஓங்கி அவன் அடிவயிற்றில் ஒரு உதைவிட்டு சாவுடா என வெறிபிடித்தவன் போல கத்திக்கெண்டே டிரிகரை அழுத்த ஆயத்தமானான். சரியாக புள்ளி பதிமூன்று விநாடிகள் தான் இருக்கும் தோட்டா விடுதலையாவதற்கு அதற்குள் ஒரு குரல் குறுக்கிட்டது.

“ஏய் அவன ஒன்னு பண்ணாத விட்டுரு”

குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான் வாசகம்.

“ஓ நீயா! இவன விடமுடியாது இவன என் கையால கொல்லனும் இவன கொன்னுட்டு இவன் கூட்டாளிய கண்டுபிடிச்சு அவன அடிச்சே கொல்லனும்”

“சொன்ன கேளு!” என்றான் சித்தார்தை துரத்தி கொண்டு ஓடியவன்.

“போடாங்” என தன் நாக்கை துறுத்தி கொண்டு மீண்டும் தயாரானான் இப்போது தோட்டாவிற்கு ஆனந்த களிப்பு.

“வேனாம்டா வேனாம்டா” என கத்தி கொண்டிருந்தவன் திடிரென பாய்ந்து வாசகம் மீது விழுந்தான். யாரோ பின்னே நின்று குறுக்கிலே எத்தியிருக்க வேண்டும் பாவம் ஆஎனக் கத்தி கொண்டே விழுந்தான். துப்பாக்கியின் சத்தம் மட்டும் கேட்டது அந்த சத்தத்திற்கு பின் ஒரு அமைதி தோட்டா எதிரே இருந்த மரத்தை துளைத்து நின்றது. மூவரும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து விழுந்தார்கள்.

போலிஸ்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை இவனை துரத்தி கொண்டு போன தனது கூட்டாளி இவனிடம் வசமாக மாட்டியதையும் இவர்களின் பிரம்ம ரகசியத்தையும் மூன்றாம் கண்களில் படம் பிடித்தது மட்டுமில்லாமல் அவன் அசந்த நேரம் அவன் ஆறாம் விரலான துப்பாக்கியையும் கைப்பற்றியது அவனுக்கு தெரியாதல்லவா. தெரிந்தாலும் இனி எந்த பயனும் இல்லை தானே.

பரிசேயர்களால் சிலுவையில் அறைந்த இயேசு துளைத்த ஆணிகளை பிடுங்கி எறிந்து கிழே குதித்தது போல தேவன் குதித்தெழுந்தான். அச்சமயம் ஒரே எக்களாச்சிரிப்பொலி துப்பாக்கியை நீட்டி பிடித்தவாரே “என்ன நண்பா நல்லாருக்கியா!” என்றான் சித்தார்த்

“இரண்டே சேகன்ட் தான்…. லேட் ஆகிருந்துச்சு மொத்தமா முடிஞ்சிருக்கும்”

“விடுடா அதான் தப்பிச்சிடோம்ல” என்று  சொல்லிக்கொண்டே வாசகம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தேவனிடம் கொடுத்தான். கண்களில் பொறி பறந்த போலிஸ்காரனையும் அவன் கூட்டாளியையும் பார்த்து “ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க ! அனுபவிங்க” என்று கூறிவிட்டு சித்தார்த் தேவன் தோள் மேல் கைபோட்டு நடக்கலானான்.

“டேய் இத வச்சு என்னடா பண்ணப்போறாம்” என்று கவ்விய குரலில் கேட்டான் தேவன்.

“தெரிலயே”

“பேசாமா நல்ல போலிஸ்கிட்ட போய் கொடுத்துருவோமா

இல்ல நம்மளே ஆட்டைய போட்டுருவோமா” என பரபரப்பான குரலில் சொன்னான் தேவன்.

“யோசிப்போம்”

“நல்லவேளை எந்த சாமி புண்ணியமோ தப்பிச்சோம்” என்றான் தேவன்.

“போன ஜென்மத்துல நீ செஞ்ச புண்ணியமா தான் இருக்கும்” என்று கலகலவென்று சிரித்தான் சித்தார்த். அந்த சிரிப்பொலி அந்த இரவையே குதூகலமாக்கியது.
“ஹா ஹா” என்று சிரித்து கொண்டே சித்தார்த் முனுமுனுத்தான்.

‘ஊழிற்பெருவலி யாவுள’.

♥♥பிரசன்ன ரணதீரன் புகழேந்தி♥♥

Advertisements

பாவியர் சபைதனிலே

பாவியர் சபைதனிலே

அது ஒரு குலை நடுங்கும் குளிர். நள்ளிரவு ஒரு மணி இருக்கும் மணி துளிகள் கடக்க மறுத்த நேரமது. நால்வர் மூச்சிறைக்க துரத்தி கொண்டிருந்தனர். தாயும் மகளும் தலைதெறிக்க ஒடிய அந்த சாலையில் யாருமே இல்லை. இருவருக்கும் ஒடமுடியவில்லை பாதங்கள் கவ்வியது வெறுங்காலோடு ஓடுகிறார்கள் அல்லவா. துரத்திய அந்த நால்வரிடமே அகப்பட்டு கொண்டார்கள். இருவருக்கும் பயம் தொற்றி கொண்டது என்ன நடக்க போகிறதோ என நிமிடங்கள் கூட பரபரத்தன. இருவர் இருவராக பிரிந்து இருவரை பிரித்தனர். இருவரும் திமிறி சலசலத்தனர் அவர்களின் சலசலப்பை அந்த நால்வரால் சகிக்க முடியவில்லை சகிப்பின்மை காரணமாக இருக்கலாம்.

கொடி கம்பத்தின் கீழே அண்டைக்கு வைக்கப்பட்ட  கருங்கல்லை எடுத்து தாயின் தலையில் ஓங்கி வைத்தான். சிறிது நேரத்தில் கருங்கல் சிவப்பானது. மெள்ள மகளை நோக்கி வந்தான், தலையை பிடித்தவாரே மயங்கும் நிலையில் அலறினாள் தாய் “யாஜ்னா பாக் பாக்” என்று. முடியவில்லை என் செய்வாள் நான்கு திசைகளிலும் நரிகள் சூழ்ந்து கொண்டன. அனுதினமும் பார்த்து பழகியது என்றாலும் அந்த கபரி பசாரில் அவளுக்கு திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை இருந்தும் ஓட முயற்ச்சித்தாள், ம்ஹும்! முடியவில்லை. கருங்கல்லை முதுகிலே எறிந்தான் அடுத்த நிமிடமே சுருண்டு விழுந்தாள் மேலும் பூட்டிய கதவின் மேற்கூறையில் இருந்த மூன்றடி நீள இரும்பு கம்பியை எடுத்து அவள் பின்னந்தலையை பழுக்க வைத்தான் இன்னொரு பாதகன். இப்போது சர்வமும்  அடங்கியது மெள்ள அவள் மயங்க முனங்கல் சத்தம் மட்டுமே கேட்டது. அவள் ஆடைகளை மெதுவாக களைந்தார்கள் கயவர்கள், இன்னும் மயங்கி தான் கிடக்கிறாள்.

அங்கு ஒரே பேய் சிரிப்பொலி அந்த சிரிப்பொலியின் சத்தத்தை கேட்டு வண்டுகள் கூட தங்கள் ரீங்காரத்தை நிறுத்தி கொண்டன, அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்த நாய்களும் தங்கள் சப்த நாடியையும் அடக்கி கொண்டு தங்கள் இருப்பிடத்தில் ஒடுங்கி கொண்டன. சிறிது நேரம் நீள் அமைதி. தவளை தன் இணையை மயக்கும் சத்தம் மட்டும் அங்கு கேட்டு கொண்டிருந்தது அவள் முனங்கலும் தான். மயக்கம் மெள்ள தெளிந்தது போலும் வலியின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஆஆஆஆவென்று அலறினாள். கண்ணீர் அவள் காதோரம் வழிந்த உதிரத்துடன் கலந்தது. குளிரிடமிருந்து அடைகாத்த கடைசி ஆடையையும் உருவி எடுத்துவிட்டார்கள் பாவிகள். அவள் வாழ்க்கையின் முதல் அழுகையின் கோலத்தில் தான் இப்போது அவள் அழுகிறாள். அவள் மென்கைகள் அந்த பாவிகளின் கால்களின் கீழ் இருப்பதையே அப்போது தான் உணர்ந்தாள் என்பதே அவள் சுயநினைவின் வீரியம். ஆவென்று கதற கதற கண்ணீரும்; இரத்தமும்; வியர்வையும் அவளை நனைத்து அந்த குளிரில் அவள் மேனியை சிலிர்க்க செய்தது. அந்த ரணகளதத்திலும் வானத்தையே பார்த்து கொண்டிருந்தாள். எங்கு நமக்கு கண்ணன் துகில் ஏதும் அனுப்புவானா என்று. அதற்கெல்லாம் அவனுக்கு நேரமுமில்லை மனமுமில்லை என்று அந்த பாதகத்திக்கு எப்படி சொல்வது. அப்படி அனுப்புவானேயானல் இந்த பாரதமே துகிலால் நிறைந்திருக்காது.

அந்த கடுங்குளிரின் குளிர்ச்சியை தாங்காது அவள் கதறல் கேட்டுகொண்டே இருந்தது. அந்த குளிரையே தாங்க முடியாதவள் அடுத்து கடக்க இருக்கும் அந்த வன்தருணங்களை எப்படி தான் தாங்க போகிறாளோ அந்த கண்ணனுக்கே வெளிச்சம். தலைப்பு செய்திகள் கூட தலைப்பேற்க தயங்கும் இருந்தும் அதிகாலை தலைப்பு செய்திகளில் தெரியும் அவளுக்கு நடந்த அந்த வன்கொடுமை.

இத்தனைக்கும் எட்டு வீட்டிற்க்கு கேட்கும்படி அந்த தலைப்பு செய்தியை வாய்விட்டு படித்து கொண்டிருந்தார் இருந்தும் தண்ணீரில் விழுந்த கோழியின் இறகை போல அங்கு எந்த சலனமும் இல்லை படித்த அவருக்கே எந்த தாக்கமுமில்லை. எப்படி தெரியும் வெட்டியானுக்கு தெரியுமா வழியும் வேதனையும். அருகில் நின்று பார்க்கும்போது கூட அனுதாப கணைகள் வீசாத அற்ப மானிடர்கள் தானே. ஆகயால் வழக்கம்போல அவர் துனைவி இட்லி சட்டியின் ஆவியில் முகம் புதைத்து கிடந்தாள் மகன்  காபியை சப்பு கொட்டி குடித்து கொண்டிருந்தான். மகளோ பரபரக்க எங்கோ கிளம்பி கொண்டிருந்தாள்.

“மா சாப்பாடு வேனாம், நான் கிளம்புறேன்” என சடையை பின்னியவாரே சமையலறை நுழைந்தாள்.

“ஏய் என்னடி! செஞ்சுட்டேன் எடுத்துட்டு போ”

“வேணாமா! டைமாச்சு”

“ஏன்டி வெள்ளிகிழம அதுவுமா? போ போய் விளகேத்தி குங்குமம் வச்சுட்டு போ”

“மா! அதலாம் பண்ணக்கூடாது”

“ஏய்! சொல்லிட்டே இருக்கேன்”

“மா! புரிஞ்சுக்கமா வைக்ககூடாதுனா வைக்ககூடாது… ஈவ்னிங் வர லேட்டாகும் காலேஜ் போய்ட்டு அப்படியே ஜனனி வீட்டுக்கு போரேன்”

“சரி சரி பார்த்து பத்திரமா போ”

“சரி மா” என்று பையை எடுத்துக்கொண்டு அப்பாவின் கன்னங்களை கிள்ளிவிட்டு “பாய் பா” என்றாள்

“ம்ம் ஜாக்கிரதயா போடா” என்றார் அவர்.

அண்ணனை பின்னந்தலையில் தட்டிவிட்டு 
“டேய் அண்ணா பாய்”

“ம்ம்….

ஏய்! நான் வந்து டிராப் பண்ண வா”

“பாருடா! பிரதருக்கு பாசத்த நான் போய்குவேன்” என வாசல் வரை வந்து வழி அனுப்பிய அண்ணனுக்கு டாட்டா காட்டியபடியே போனாள். அவ்வளவு புன்னகை அவள் முகத்தில்.

தங்கை பார்த்தபடியே நின்று கொண்டிருந்த பரதனை கைப்பேசி அழைத்தது.

அலைப்பேசியில் அவன் ஆருயிர் நண்பன் தான்,
“டேய்! நேத்து பேசுனபடி இன்னைக்கு சாயங்காலம் அஞ்சு  மணிக்கு வந்துரு…”

“கண்டிப்பாடா உன்ன அசிங்கப்படுத்துனவள இன்னைக்கு நம்ம அசிங்கப்படுத்துறோம்… 
நான் வரேன்” என்றான் பரதன்

சாயும் காலமும் வந்தது பேசியபடியே இருவரும் சந்தித்தனர். அது ஒரு ஒத்தையடி பாதை இருசக்கர வாகனம் மட்டும் அதில் பயணம் செய்யலாம் பாதசாரிகளும் அவ்வபோது செல்வார்கள். ஆறு மணிக்கு மேல் ஆள் அரவம் நடவாத, தெருவிளக்கில்லாத, சேரும் சகதியும்  சேர்ந்து உறவாடிய அந்த கார்ப்பரேசனின் செல்ல சந்தின் முகட்டில் ஒரு பெரிய வேப்ப மரம் அதன் அருகில் இரண்டு நிழலாடியது அந்த நிழல்கள் பேசி கொண்டன.

“டேய் பரதா ! இன்னும் கொஞ்சம் நேரத்துல அவய்ங்களும் வந்தருவாய்ங்க

அவளும் வந்துருவா! ரெடியா இரு”

“அவள என்னடா பண்ணப்போறோம்” என அவன் காதாண்டை கூறினான் பரதன்.

“தெரில ஆனா அவள எதாச்சும் பண்ணனும்டா பெருசா! அவ இத வாழ்க்கையில மறக்க முடியாத மாறி”

சொன்னபடியே மேலும் இருவர் இணைந்தார்கள்.

“டேய்! என்ன தான்டா பிரச்சனை அவ பேரென்ன” என்றான் மூன்றாம் அவன்.

“அவ பேரு ஜனனி! வேற எதும் கேக்காத”

“என்ன ஜனனியா!” என நடுவே ஆச்சர்யபட்டான் பரதன்

“சரி எத இருந்தா என்ன இன்னைக்கு ஒரு கை பார்த்துருவோம்” என்றான் நாலாம் அவன்.

மணி ஐந்தை தாண்டியது ஆனால் அவள் வரவில்லை வழக்காமாக ஐந்து மணிக்கு டான்ஸ் கிளாஸுக்கு செல்லும் அவளை இன்னும் காணவில்லயே என கொஞ்சம் கடுப்பானார்கள். கடுப்பானாலும் நேரமாக ஆக அவர்கள் மனதில் கொஞ்சம் அச்சம் உறைந்தோடியது.

தூரத்து ஹெட்லைட் வெளிச்சத்தில் சேரும் சகதியும் தெரிக்க துப்பட்டாவில் முகம் மறைத்து செங்கண் பார்வை கொண்டு வந்தாள். அவளை பார்த்த போதே அவர்களுக்கு அல்லையை பிடித்தது இருந்தும் 

“டேய்! வாங்கடா” என பரதன் முன்மொழிய அவன் சொல்படி நடந்தனர்.

வேகமாக மறித்த அவளை தட்டு தடுமாறி நின்ற வண்டியில் இருந்து கார் கூந்தல் பற்றி இழுத்தான் பரதன். நான்காம் அவன் கிழே பிடித்து தள்ளிவிட இரண்டாம் அவன் ஓங்கி கன்னத்தில் அறைய மூன்றாம் நபர் அவள் தலையை தட்டினான். அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை முகத்தை கர்சிப்பால் மூடியதால் யாரென்று தெரியவில்லை. அடிக்க உதைக்க தடுக்க செய்தாள் ஒன்றும் முடியவில்லை கடைசியாக வாய்விட்டு கத்த அவள்  முயற்சித்தபோது வாயை பொத்தினான் ஒருவன் மற்றொருவன் கையை இறுக்கி பிடித்து கொண்டான். பரதன் நெருங்கி வந்தான் கழுத்தில் கை வைத்தான் மெள்ள கை கீழே இறங்கியது. அவள் கதறினாள் அலறினாள் பதறினாள் கண்ணீர் அவள் முகம் மறைத்த துப்பட்டாவை நனைத்தது. வேகமாக தலையை ஆட்டினாள் இன்னும் வேகமாக முடிச்சுகள் அவிழ்ந்தது அது விதியின் முடிச்சுகளாக கூட இருக்கலாம்.

அவள் முகத்தை பார்த்த அடுத்த கணமே நால்வருமே தேள் கடித்தாற்போல துடி துடித்தார்கள். பரதனுக்கோ உயிரோடு தன்னை தீ வைத்து கொளுத்தியதை போல எரிந்து சாம்பலாக பார்த்தான் யாராவது செய்யமாட்டார்களா என ஏங்கினான். அந்த பாவியை தீ கூட தீண்ட மறுக்கும் என்பதை அவன் அறிந்திருக்கமாட்டான். கடைசியாக வந்த இருவரும் வந்த தடம் தெரியமால் ஓடினார்கள். இவர்களை ஒருங்கினைத்தவனும் தலைதெறிக்க ஓடினான். பரதனுக்கு ஓடவும் முடியவில்லை ௐளியவும் முடியவில்லை கண்கள் கணத்தன கண்ணீர் சுரந்தன அவள் பரிதாபமான முகத்தை கண்டு கண்ணீர் பீறிட்டது. அவள் கிடத்தபட்ட இடத்தில் இருந்து நகரவே இல்லை உயிர் இன்னும் அவள் உடம்பில் இருக்கிறது ஆனாலும் இறந்து அழுகிறாள். அவனோ தலையில் அடித்து கொண்டே அழுகிறான் முகத்தை மறைத்த துணி விலகியது கூட தெரியாமல் அழுகிறான் கூனி குறுகி அழுகிறான் வாழும்போதே அழுகி அழுகி அழுகிறான்.

யார் தவறு என்று தெரியவில்லை காதல் சொல்ல வந்தவனை ஏசி பழித்தாளே அவள் தவறா,
தன் ஆற்றாமையை பூர்த்தி செய்ய அழைத்த நண்பனின் தவறா,
தோழியின் வீட்டிற்க்கு சென்று அவள் ஆடையை உடுத்தி அவள் வண்டியில் வந்த இவள் தவறா,
அவளை சிறுவயதில் தோளில் போட்டு சுமந்த இவன் தவறா,
இவர்களை படைத்த அந்த ஆண்டவனின் தவறா என்று, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அன்று பாவியர் சபைதனிலே பாஞ்சலியை கூந்தல் பற்றி இழுத்து வந்த துச்சாதனனுக்கும் இழுத்து வரச் சொன்ன துரியோதனனுக்கும் துச்சலையை அப்படி செய்திருந்தாள் எப்படி இருந்திருக்குமோ அந்த கார்மேக கண்ணன் திரௌபதிக்கு பதிலாக துச்சலையை இடம்மாற்றி துச்சாதனன் கையினாலே அந்த லீலையை செய்திருந்தாள் துரியோதனனுக்கு எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையில் தான் இப்போது இருக்கிறான் பரதன். அதற்கு வியாசர் கூட விடையளிக்க முடியாது. முகத்திரை விலகிய பரதனை பார்த்து அவள் கேட்ட கேள்வியில் இன்னும் கொஞ்சம் அழுகை பீறிட்டது இனி அவன் எவ்வளவு நீரை இரைத்தாலும் அந்த பாபத்தை கழுவ முடியாது இருந்தும் அவள் பரிதாபமாக கேட்டாள்

“அண்ணா, நீயா!!!”

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

கம்பன் கஞ்சனடி – சிறுகதை

கம்பன் கஞ்சனடி – சிறுகதை

யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என அன்று நடந்ததை நினைத்து புலம்பியபடியே கண்ணாடி முன் நின்று யோசித்து கொண்டிருந்தாள் பர்வதம்.

அச்சமயம் “மா! மா! அம்மா” என வாசலில் நின்று கத்தி கொண்டிருந்தான் பலதேவா.

“டேய் என்னடா பிரச்சனை” என்று வினவியபடியே வந்தாள்.

“எதுக்கு மா கார்லாம் புக் பண்ணிருக்க ஆட்டோல போய்ட்டு வந்துருக்கலாம்ல”

“டேய் மானத்த வாங்காத டா வாடா” என்றாள் அவன் தாய் பர்வதம்.

நடுவே பலதேவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துட்டு “டேய் இதுதான் கடைசி இதுக்கு மேல எங்களுக்கு தெம்பில்ல பேசமா சந்நியாசி ஆகிறு” என சிரித்து கொண்டே காரின் பின் சீட்டில் அமர்ந்தாள் பலதேவனின் அக்காள்.

“உங்களுக்குளாம் என்ன பார்த்த நக்கலா இருக்கு ம்ம்” என கடுகடுத்துக் கொண்டே பார்த்தான் பலதேவன்.

“என்னப்பா போலமா” என அவன் முதுகில் தட்டிவிட்டு காரின் முன் சீட்டில் ஏறினார் அவன் அப்பா பரந்தாமன்.

வண்டி புறப்பட்டது வழி நெடுக ஒரே புலம்பல். புலம்பி கெட்ட குடும்பம் போலும். “இந்த இடமாவது நல்லபடியா அமையனும் அதுக்கு அந்த காமாட்சி தான் அருள் புரியனும்” என்றாள் பர்வதம்.

“மா இதுவரைக்கும் இவனுக்கு 12 பொண்ணுங்கள பாத்துருக்கோம்…

அதுல 5 பொண்ணுங்க இவன பிடிக்கலனு சொல்லிருச்சுக …

4 ஜாதகம் சரில்ல 2 நிச்சயதார்த்ததோட முடிஞ்சு..

இன்னும் 1 கல்யாணம் வரைக்கும் போய் நின்றுச்சு..

எனக்கு என்னமோ இவனுக்கு கல்யாணம் ஆகும்னு நம்பிக்க இல்ல” என படபடவென பொறிந்தாள் பலதேவனின் அக்காள்.

“மா இவள பேசாம வர சொல்லு” என எச்சரித்தான் பலதேவன்.

“அடியேய் சும்மா இரேன்டி”

“ஏன்டா இந்த லவ் கிவ் பண்ணி எங்காவது ஓடகூடாது ஆனா அதுக்கும் உனக்கு திறமை இல்ல, வேஸ்ட் பெல்லோடா நீ”

“மாஆஆஆஆஆ” என மறுபடியும் ஒரு எச்சரிக்கை குரல்.

பரந்தாமனும் திரும்பி முறைப்பு காட்ட ஒருவாறு பேச்சு அடங்கியது சேர வேண்டிய இடமும் வந்தது.

வாசலிலே நல்ல வரவேற்பு, பெண்னை பெற்றவளும் வளர்த்த தமையனும் வாய் நிறைய வாங்க என்று அழைத்து குசலம் விசாரித்தனர்.

“சடகோப தரகர் தான் சொன்னாரு போட்டோலே பிடிச்சு போச்சு அதான் வந்துட்டோம்” என்றார் பரந்தாமன்.

“ரொம்ப சந்தோஷம்ங்க!

மா காப்பி டிபன்” என்றபடி அம்மாவை பார்த்தான்.

அவன் அம்மாவும் காப்பியுடன் கொஞ்சம் மிக்சரும் வைத்து கொடுத்து கொண்டே வந்தாள் கடைசியாக மாப்பிள்ளையிடம் வந்தாள்.

“ம்ஹூம் நான் காப்பி டீ லாம் சாப்புடுறது இல்லங்க”என மிக்சரை மட்டும் எடுத்துக்கொண்டு நெளிந்தான் பலதேவன்.

“ஆமாங்க என் பிள்ளைக்கு காப்பி டீ மட்டுமில்ல வேற எந்த கெட்ட பழக்கமும் இல்ல இந்த வயசுலே அநாவசியமா எதும்  செலவழிக்கமாட்டானா பாத்துக்கோங்க! நிறையா சேர்த்து வைப்பான் கொஞ்சம் கஞ்சம் தான் ஆனா தனக்கு மனைவியா வர போறவளுக்கு நிறையா இப்பவே சேர்த்து வச்சுருக்கான்” என தன் மகனை பற்றி ஒரு நீண்ட புகழ் பாடினாள் எல்லாம் குட் புக்ஸில் இடம் பெற தான்.

மெள்ள பர்வதம் காதில் வந்து கிசுகிசுத்தான் “மா நீ பொண்ணு பாக்க வந்தியா இல்ல என்ன அசிங்கப்படுத்த வந்தியா…

இப்ப எதுக்கு இதலாம் உளறிட்டு இருக்க”

“டேய் நீ சும்மா இருடா” என மகனின் தொடையில் கிள்ளினாள்.

“ஏங்க பொண்ணு ஊருக்கு எதும் போய்ருக்காங்களா!

ஏன்னா… ஆபிஸுக்கு 2 அவர் தான் பர்மிஷன் போட்டுருகேன் லேட்டா போனா லாஸ் ஆப் பே ஆகிரும் அதான் கேட்டேன்” என பரபரத்த குரலில் கேட்டான் பலதேவன்.

“டோட்டல் டேமேஜ்…

இவன எதுக்குமா கூட்டிட்டு வந்த”
என பர்வதத்தின் காதாண்டே முனங்கினாள் அக்காள்.

“அப்படிலாம் ஒன்னுமில்லங்க பொண்ணு இங்க தான் இருக்கு..
இந்தா வர சொல்ரேன்…
மா” என கண்ணசைவிலே அன்னையிடம் 
சொன்னான் அண்ணன்.

மெல்லிய கொளுசின் இனிய ஓசை, மல்லிகையின் மயக்கும் மன்மத வாடை என அவள் வரும் முன்னே அவ்விடம் கொஞ்சம் சிலிர்த்தது. எலுமிச்சை மஞ்சள் பட்டு புடவையில் அகண்டு சிவந்த சிவப்பு ஜரிகை. முந்தானையின் சரி பாதியை அவள் கார்கூந்தல் அளந்தது, இடுப்பு சீலையின் இடத்தே சில சுருக்கங்கள் ஓளிந்திருந்தன அநேகமாக இதை மூன்றாவது முறையாக உடுத்திருப்பாள். தொண்டை குழியின் நடுவே அந்த சிறிய மச்சத்தின் இடயே வியர்வை முத்துகள் வழிந்தோடின. மாதுளை செவ்விதழ்கள் சிவக்க மூக்குத்தியின் சுடெரொளியில் அவள் கயல்கள் நஞ்சு குழம்பாக மின்ன கதவோரம் கடைக்கண் பார்வை கொண்டே வந்தாள். கண்ணுக்கிட்ட காஜல் இரு புருவம் இணைக்க வைத்த கோபால பொட்டு வகுந்தெடுக்காத மயிரிழையின் நடுவே அந்த சுட்டி காதோரம் ஆட்டமிட்ட ஜிம்மிக்கி என அவள் ரதி வதனம் அவளை தேவலோக கண்ணிகை போல  காட்சிப்படுத்தியது.

இராமனே அவளை பார்த்திருந்தால் கொஞ்சம் சபலப்பட்டிருப்பான் சூர்ப்பனகையை கண்டதுபோல் இவனோ அற்ப மானுடன் தானே நஞ்சை வெகுவாக அவன் உள்ளத்தில் பாய்ச்சி கொண்டான்.

பலதேவன் விஷம் குடித்தவன் போல துடிதுடித்தான். எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறான் ஆனால் இவளை போல எவளும் அவன் மனதில் நஞ்சை செலுத்தியதில்லை. அது உண்மையிலே ஒரு ரசாயன மாற்றம் தான் எங்கோ தலைக்குள் முனுமுனுத்து கொண்டே இருக்கும் ‘இவள் எனக்கானவள்’ என்று.

“பொண்ண நல்ல பாத்துக்கடா அப்புறம் நான் சரியா பாக்கலனு சொல்லிராத” எனக் கூறி பரந்தாமன் ஓங்கி சிரித்தான்.

“நீயும் தான்மா மாப்பிள்ளைய நல்லா பாத்துக்கோமா… மாப்பிள்ளைய பிடிச்சிருக்குல” என எதோ கவலை தொனித்த குரலில் கேட்டான் அவள் அண்ணன்.

“நான் அவர்ட்ட தனியா பேசனும்” என கவ்விய குரலில் கூறினாள் அவள்.

சட்டென அவள் தாய்க்கு என்ன சொல்வதென தெரியவில்லை அவளை பார்த்து முறைத்தாள்.

“இதுல என்ன இருக்கு பேசட்டும் நாளபின்ன வாழபோறவங்க…

போடா போய் பேசிட்டு வா” என அதட்டினார் பரந்தாமன்.

நடுவே “மா! இந்த பொண்ணும் இவன பிடிக்கலனு சொல்ல போது” என பர்வதம் காதில் எச்சரித்தாள் பலதேவன் அக்காள்.

இப்போது இருவரும் தனிமையில். ஒரு நிமிடம் நீண்ட நிசப்தம். அவளே பேச்சை தொடங்கினாள்.

“என்ன பிடிக்கலனு சொல்லிறீங்களா!”

பலதேவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.

“ஏங்க என்ன பிடிக்கலயா”

“இல்ல, அப்படிலாம் ஒன்னுமில்ல”

“பின்ன ஏங்க அப்படி சொல்ல சொல்றீங்க!
வேற யாரயாவது லவ் பண்றீங்களா?”

“இல்லங்க! பிடிக்கலனா பிடிக்கலனு சொல்லுங்களேன்”

“அப்படிலாம் சொல்லமுடியாது… எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு…”

“புரிஞ்சுகோங்க ப்ளீஸ்”

“நோ… நான் போய் உங்கள பிடிச்சிருக்குனு சொல்ல போரேன்” என கூறி கதவோரம் வந்தான் திடிரென அவள் குரல் தடுத்தது அதை கேட்காமலே சென்றிருக்கலாம் ஆனால் கேட்டுவிட்டான்.

“எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிறுச்சு” என சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கின.

“என்னது புரில”

ஆம் அவளுக்கு கல்யாணமாகிவிட்டது. கல்யாணமாகி பின்பு தாயாகி இப்போது தனியாகி  நிற்கிறாள். நூற்றில் பத்து பெண்களுக்கு நடக்கும் கதை தான் அது கடைத்தெருவில் சீலை எடுக்க நூறு கடையேறி இறங்கும் பெண்கள் தன்னவனை தேர்ந்தெடுக்கும் போது அந்த ஆண்ணின் மனதை கூட ஏறி பார்த்ததில்லை பார்ப்பதுமில்லை பார்க்கபோவதுமில்லை. அவள் கதையை அவள் வாயால் சொன்னால் அவள் மனம் ஆறுதலடையும். ஆகயால் அவளே சொல்லட்டும். தொண்டையில் வார்த்தை வராமல் சிக்கிய போதும் மடையை திறந்து அனைத்தையும் கொட்டினாள்.

“ஆமா! எனக்கு கல்யாணமாச்சு மூனு வருஷத்துக்கு முன்னாடி அம்மா அப்பா ஆசை ஆசையா பண்ணி வச்சாங்க…

நானும் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தேன் ஒரு ஆறு மாசம் அப்புறம் இன்னும் சந்தோஷமா…

ஏன்னா அப்ப நான் இரண்டு உயிரா இருந்தேன் ஆன எதிர்பாராத விதமா என்னோட இன்னொரு உயிரு என்னோடையே போயிருச்சு…

அப்ப ஆரம்பிச்சது தான், ஒரு வருஷம் வரைக்கும் போச்சு அப்புறம் சுத்தமா நின்றுச்சு கோர்டே அத செஞ்சிருச்சு…” இப்போது அவள் கண்ணீர் அவள் மூக்குத்தியின் வழியே வழிந்து வியர்வையுடன் கலந்தது.

“இப்பலாம் எனக்கு ஆம்பளைங்கனாளே ஒரு வெறுப்பு, அவங்ககுள்ள ஒரு பேய் இருக்கு அது ஒரு சந்தேக பேய்….

பின்ன! சந்தேகப்படுற ஆம்பளயவே கடவுளா வச்சு கும்பிட்டா அப்படி தான இருப்பாங்க….

போதும்ங்க இதுக்கு மேல எதுவும் வேனாம். எங்க வீட்ல இதலாம் சொல்லியிருக்க மாட்டாங்க. உங்களுக்கு கண்டிப்பா ஒரு நல்ல பொன்னு கிடைப்பா. என்ன வேணாமுனு சொல்லிருங்க ப்ளீஸ்…” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் அழட்டும் சுமார் மூன்றாண்டுகள் தேக்கி வைத்ததெல்லாம்  கொட்டி தீர்க்கட்டும். இனி அவள் கண்களில் கண்ணீர் வரத்தின்றி வறண்டு தான் போகட்டுமே.

அவள் சொன்னதெல்லாம் அவனை என்னனவோ உண்டு பண்ணியது. தீர்க்கமாக அவனுக்குள் ஒரு முடிவு இல்லை. மெள்ள வந்து அமர்ந்தான் கொஞ்சம் தண்ணீர் கேட்டான். இதன் நடுவே பர்வதம் காதுகளில் வந்து கிசுகிசுத்தாள் அவள் மூத்த மகள் ‘மா பொன்னு வந்து பிடிக்கலனு சொல்லும் பாரு’.

அவள் அண்ணன் கொஞ்சம் இறங்கி “மாப்பிள்ள பொண்ண பிடிச்சுருக்கா?” என்றான்.

கொஞ்சம் அமைதி நிலவியது. மீண்டும் கேட்டான் அண்ணன். எல்லோரும் ஆவலுடன் இருந்தனர். ஒரு வழியாக ஒரு பெரு மூச்சு விட்டு தயாரானான்.

“இந்த கல்யாணதுல எனக்கு இஷ்டமில்ல! 
உங்க பொண்ண எனக்கு பிடிக்கல…
மா வா போலாம்” என சரமாரியாக பதிலளித்துவிட்டு சென்றான்.

வாசலில் நின்று திரும்பி பார்த்தான் உட்கதவோரம் விரக்திசிரிப்பை உதிர்த்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். சீதையை பார்த்த இராமனை போல அந்த பார்வை ஆயிரம் கதைகள் சொன்னது.

மெள்ள நாட்கள் சென்றன. சுமார் பதிமூன்று நாட்கள் கடந்துவிட்டன. அது ஒரு மாலை பொழுது. அவள் வீட்டு கதவு தட்டப்பட்டது வாசலில் அவன் தான் பலதேவன். அவனை பார்த்தவுடனே கோபாக கேட்டாள் அவள் அம்மா “பிடிக்கலைனு போனிங்க இப்ப எதுக்கு வந்திங்க” 

“எனக்கு எல்லா உண்மையும் தெரியும், இன்ஃபாக்ட் என்ன பிடிக்கலனு சொல்லிருங்கனு சொன்னதே உங்க பொன்னு தான்”

இதை கேட்ட அந்த நிமிடமே ஸ்தம்பித்தாள் பெண்னை பெற்றவள். மேற்கெண்டு பேச அவள் வாய் வரவில்லை.

பின்பு அவளிடம் தனியாக பேசவேண்டுமென வேண்டுகோள் விட்டான் கோள் கிடைத்துவிட்டது போலும் அன்று பேசிய அதே அறை காத்து கொண்டிருந்தது. பலதேவன் இரண்டு கட்டையில் பேச ஆரம்பித்தான்.

“என்னடா அன்னைக்கு பேசாமா போனவன் இன்னைக்கு வீடு தேடி வந்துருக்கேனு பாக்குறீயா…

சத்தியமா! என்னால முடியல அன்னிக்கு நீ சொன்னத சொன்னேனே தவிர என் அடிமனசுல இருந்து அத நான் சொல்லல…

எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு என்ன கல்யாண செஞ்சுகிறியா???

ம்ம் செஞ்சுகிறியா..

என்ன கஞ்சம்னு அம்மா சொல்லிருப்பாங்க. ஆமா! நான் கஞ்சம் தான். என் மூளவேன கஞ்சமா இருக்கலாம் ஆனா என் மனசு கஞ்சமில்ல அதுல எந்த வஞ்சமுமில்ல… உன் பதிலுக்காக தான் காத்திருக்கேன் சொல்லு”

இதை கேட்ட அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை நவரசத்தை தாண்டி தசரசத்தை எதும் முயற்ச்சித்தாளோ என்னவோ அவனை இன்னும் ஏறெடுத்து அவள் பார்க்கவில்லை. அவள் அடர்குழல் தவிர அவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை பெண்களை நேருக்கு நேர் பார்த்து பேசும்போதே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாதபோது அவள் பின்னழகை கொண்டு என்ன கனித்துவிடமுடியும். ‘என்ன கல்யாணம் செஞ்சுகுறியா’ என்ற வார்த்தை அவள் காதுகளை சுற்றி வட்டமிட்டு எதிரொலித்த காரணத்தினால் தானோ அவன் பிற்பாடு கூறியதை அவள் காதுகள் கேட்க தவறிவிட்டது. அது மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் எதிரொலித்து மந்தமாக்கியது. ஆனால் அவன் மறுபடியும் இசைத்தான் “என்ன கல்யாணம் செஞ்சுகுறியா”.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

நயன மொழி – சிறுகதை

நயன மொழி – சிறுகதை

‘படார்’ என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான் கார்க்கிக்கு “என்னாடா இது சாவு கூட நமக்கு சதி பண்ணுது தூக்குல தொங்கி போய் சேரலாம்னா இப்படி ஆயிருச்சு… ச்சீ”

என தன்னை தானே நொந்து கொண்டு புலம்பினான். நள்ளிரவு இரண்டு மணி இருக்கும் சாகவும் முடியாமல் தூங்கவும் முடியாமல் தத்தளித்தான். இவன் புலம்பலை பார்த்தவர்களுக்கு இவன் செத்தே போய்ருக்கலாம் என்று தான் தோன்றும் ஆனால் அதற்கும் ஒரு கொடுப்பனை வேண்டுமே அது தான் இவனுக்கு வாய்க்கவில்லையே. இவன் செத்தாலும் இவனுக்காக கண்ணீர் சிந்த ஆளில்லாத போது இவன் வாழ்ந்து யாருக்கென்ன லாபம் ஒருவேளை இவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால் அந்த அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டிருப்பானோ என்னவோ அதற்கும் கொடுத்து வைக்கவில்லை இருவரும் குடும்பஸ்தன் ஆகிவிட்டார்கள்.

செய்து வந்த வேலையும் இல்லை காதலித்த காதலியும் இல்லை. கல்யாணம் செய்து வைக்ககூட ஆளில்லை என விரக்தியினால் தான் சாகவும் துணிந்தான் ஆனால் சாவுக்கு கூட இவனை கண்டால் பிடிக்கவில்லை என்ன காரணமோ யாருக்கு தெரியும்.

புலம்பி கொண்டே தூங்கிவிட்டான் விடியலும் வந்தது கதவை தட்டியது திறந்து பார்த்தான் பக்கத்து வீட்டு நாரயணன் தான் அது “தம்பி! குடும்பத்தோட திருப்பதி போரோம், வர நாலஞ்சு நாள் ஆகும் யாரவது கேட்டாங்கனா சொல்லிருங்க தபால் வந்தாலும் வாங்கி வைங்க தம்பி” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

“இது வேரயா” என தலையில் அடித்து கொண்டு உள்ளே போனான், கைப்பேசி அழைத்தது அழைப்பில் அவன் நண்பன்.

“என்னடா எப்படி இருக்க? பேசி ரொம்ப நாளாச்சு, நல்லா இருக்கியா!”

“நேத்து நான் சூசைடு பண்ண டிரை பண்ணேன்”

கரகரத்த குரலில் “என்ன என்ன சொன்ன”

“தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி பண்ணேன் கயிறு அருந்துறுச்சு”

கோவமாக “டேய்! நீ என்ன லூசா இப்ப எதுக்கு நீ இப்படிலாம் பண்ணிட்டு இருக்க?”

“என்னால முடிலடா காதலிச்சவலும் வேணாம்னு வேரொருத்தன கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா இருந்த வேலையயையும் தூக்கிட்டாய்ங்க இனி என்னடா பண்றது நான் இந்த உலகத்துல இருந்து என்ன பண்ண போறேன்”

“டேய் சாவு எல்லாருக்கும் வர தான் போது அது எப்ப வருதுனு தெரியாம இருக்கறதுல தான் சுவாரஸ்யமே…. உன்ன வாரி அனச்சுக்க அவன் விரும்பல அதுனால நீ இந்த பூமிக்கு பாராமா இருந்து தான் ஆகனும். முட்டாள்தனமா யோசிக்காம வேற வேலைய தேடு”

“நீ எவ்ளோ சொன்னாலும் என் மனசு ஆற மாட்டேங்குது. எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது”

“டேய் எல்லாரும் இங்க நொம்பலத்துல தான்டா இருக்கோம் இதலாம் சமாளிச்சுட்டு தான்டா முன்னேறனும்… ரோட்ல போய் ஒவ்வொருத்தன் முகத்தையும் பாரு ஆயிரம் கத சொல்லும்”

“இருந்தாலும் எனக்கு வந்த தனிமையும் வெறுமையும் என்ன கொல்லுதுடா!”

“இங்க பாரு ஒன்னுமில்ல சௌஹந்திய அவுங்க அம்மாகிட்ட சொல்லி உனக்கு நல்ல பொன்னா பாக்க சொல்லிருக்க அடுத்த மாசம் நாங்க இந்தியா வரோம் வந்து உன் கல்யாணத்த முடிச்சிட்டு தான் மறுவேளை சரியா… அதுவரைக்கும் மனச போட்டு குழப்பிக்காமா டூரு கீரு போய்ட்டு வா நம்ம படிக்கும் போது போவம்ல அங்கலாம் போ”

“ம்ஹூம்”

“டேய் சொல்ரத கேளு போய்ட்டு வா நாங்க ஊருக்கு வரதுக்கும் நீ போய்ட்டு வரதுக்கும் கரக்டா இருக்கும்… பணம் இருக்க இல்லனா அம்மாகிட்ட வாங்கிகோ”

“இல்ல அதலாம் இருக்கு”

“சரி பாத்துக்க நான் நாளைக்கு பண்றேன் பாய்”

“ம்ம் சரிடா பாய்”

வெகுவாக யோசித்தான் “ம்ம் அவன் சொல்றத தான் கேட்போமே, அங்க பேனானாச்சும் எதாவது வழி கிடைக்குதானு பார்ப்போம், போய் சேர்றதுக்கு” என முனுமுனுத்தான்

கையில் இருந்த பணத்தையெல்லாம் அள்ளி போட்டுக் கொண்டு கிளம்பினான்.

மறுமுனையில் ராதா கதறி கொண்டிருந்தாள் “ஏங்க நமக்கு தான் குழந்த பொறக்க போதுல அப்புறம் இது எதுக்குங்க நமக்கு, பேசாமா இத எங்காயவது அனுப்பிவிடுங்க”

“ஏய் பாவம்டி வாயில்லா பூச்சி அதுப்பாட்டுக்கு இங்க இருக்கட்டுமேடி” என்றான் ரங்கநாதன்.

“முடியவே முடியாது எனக்கு இது இங்க இருக்ககூடாது எங்காயவது போய் தள்ளிவிட்டு வாங்க”

இருவரின் சம்பாஷனைகளும் கண்மணிக்கு புரிந்துவிட்டது போலும் வெளியே சென்றாள் சில வேடிக்கை மனிதர்களை பார்த்து கொண்டிருந்தாள் மறுபடியும் உள்ளே சென்று ஒரு ஓரமாக அமர்ந்தாள் இன்னும் அதே பேச்சுதான் “நம்மள பிடிக்கல போல” என்று தனக்குள்ளே பேசி கொண்டாள்.

“சரி சரி கொண்டு போய் விட்டுரேன் நீ கொஞ்சம் வாய மூடுறியா தாயே” என அலுத்து கொண்டான் ரங்கன்.

எங்கே கொண்டு போய் விடுவது என ரங்கனுக்கு குழப்பம் எங்காவது போய் தொலைச்சுட்டு தான் வரனும் என முடிவு கட்டினான்.

“கண்மணி! வா போலாம் அப்பா உன்ன வெளிய கூட்டிட்டு போரேன்”

அதற்கு என்ன தெரியும் வாய் பேச தெரியாத ஒரு அற்ப ஜீவன் ஆனால் இரண்டு கண்கள் இருக்கிறதே அதில் எல்லாம் தெரிகிறதே கண்மணியின் கண்களில் நீர் தேங்கியது இருந்தும் தந்தை சொல் கேட்டு பின்னே ஓடியது.

இரவு பத்தாகிவிட்டது இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர். வழியில் எங்கே விடுவதென ரங்கனுக்கு ஒரே குழப்பம். சட்டேன இவர்களை கடந்து சென்றது பேருந்து. காரும் சரிசமமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பேருந்தின் ஜன்னல் வழியே ஒன்று அடிக்கடி எட்டிப்பார்த்தது பின்பு முற்றுமாக தலையை நீட்டிவிட்டது.

இப்பனாச்சும் நமக்கு சாவு வருதானு பாப்போம் என ஜன்னலின் வழியே பார்த்தபடி எண்ணி கொண்டிருந்தது.

“டேய் சாவனும்னா ரோட்ல வந்து சாவுடா” என கார்க்கியை பார்த்து முனங்கினான் ரங்கன் அப்போது தான் பேருந்தை கவனித்தான் பேசாமா இங்க கொண்டு போய்விட்டுறுவோம் இது தான் கரக்ட் என பேருந்தை துரத்தினான்.

நள்ளிரவு ஒரு மணி இருக்கும் பேருந்து திருப்பதி பேருந்து நிலையத்தை அடைந்தது. நள்ளிரவானாலும் ஜனகூட்டம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன எதோ ஒரு தேடலுக்காக தான் அத்தனை கூட்டமும் சுற்றி கொண்டிருக்கிறது.

ஒரே களைப்பு கார்க்கி பேருந்து நிலையத்திலே அமர்ந்துவிட்டான் பக்கத்தில் குஜராத்தி மராத்தி என வட வாடை கொஞ்சம் தெலுங்கு வாடையும் அடித்தது.

ரங்கனும் பேருந்து நிலையத்திற்கருகே காரை நிறுத்தினான். கண்மணியை அழைத்து கொண்டு நிலையத்தை நிலை கொள்ளாமல் சுற்றினான். அப்போது கழட்டிவிடலாம் இப்போது ஏமாற்றிவிடலாம் என நப்பாசையில் இருந்தான் ரங்கன் ஆனால் கண்மனிக்கு கொஞ்சம் புத்தி கூர்மை அதிகம் அவன் நடையசைவை அப்படியே கவனித்து பின் தொடர்ந்தாள். இருந்தாலும் ரங்கனுக்கு அடித்தது யோகம் மூன்று பேருந்துகள் உள்ளே வந்தன. ஜனகூட்டம் முந்தியடித்து வந்தது அதற்குள் நுழைந்தான் கண்மணியும் நுழைந்தாள். ஒருகட்டத்தில் கண்மணி நம்மள தான் பிடிக்கலயே என்ற தன்னிலை உணர்ந்தாள். கூட்டம்  மெள்ள கரைந்தது ரங்கனை காணவில்லை கண்மணி மட்டும் அங்கும் இங்குமாக அலைந்தாள். பேருந்து நிலையத்தையே சல்லடையிட்டு தேடினாள் கார் நிறுத்திய இடத்தில் கூட தேடிவிட்டால் ஆனால் எங்கும் காணவில்லை. கண்கள் சுறுங்கின கண்ணீர் பெருக்கெடுத்தது கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்துவிட்டாள் அவளும் என்னதான் செய்வாள் அவளுக்கு தான் தெரியுமே அதனால் தான் அப்பா இங்கு கொண்டு வந்து நம்மை விட்டுவிட்டார் இனி நாம் யாரும் இல்லாத அனாதை சோறு போட்டு அரவனைக்க எந்த நாதியுமில்லை. அவன் விட்டு சென்றதில் தவறொன்றுமில்லை  பெற்றால் தானே பிள்ளை, நாட்டில் அநேகம் பேர் இப்படி தான் செய்கிறார்கள் அதில் ரங்கன் மட்டும் விதிவிலக்கா என்ன? இனி யாரை தேடியும் பிரயோஜனமில்லை என தனக்குதானே ஆறுதல் கூறிகொண்டாள்.

கதிரவன் கண்விழித்த நேரம், இன்னும் ஓயவில்லை மக்கள் கூட்டம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது திருப்பதி.

கார்க்கிக்கு முழிப்பு வந்தது தலைமாட்டில் கண்மணி உறங்கி கொண்டிருந்தாள் அவளை பார்த்த கணமே சட்டென எழுந்தான் அவன் எழுந்த அதிர்வு அவளையும் எழுப்பிவிட்டது. கார்க்கி தன்னைதானே ஆசுவாசப்படுத்தி கொண்டான். பையில் இருந்த வாட்டர் பாட்டிலில் வாயை கொப்பளித்து விட்டு ஒரு டீயும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கி அங்கிருந்த பயணிகள் இருக்கையில் அமர்ந்தான் மெள்ள கண்மணியும் அவனை நொக்கி வந்தாள். அவனையே கண் கொட்ட பார்த்து கொண்டிருந்தாள். பாவம் பசி போலும் இரண்டு பிஸ்கட்டுகளை கொடுத்தான் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் பார்த்தாள் இன்னும் ரெண்டு கிடைத்தது. 
ஏனோ தெரியவில்லை அவள் மீது இவனுக்கு அவ்வளவு கரிசனம் ஏதோ பெற்றெடுத்த பிள்ளையை போல ஆனார் அவளுக்குஅப்படி ஒரு நினைப்பு இல்லை இருக்கவும் வாய்ப்பில்லை. கண்மணி அவனையே சுற்றி சுற்றி வந்தாள் அவனுக்கும் ஒருவாறு கண்மணியை பிடித்திருந்தது கூட்டி கொண்டு போய் வளர்க்கலாம் என்று தோன்றியது “ஆனா அவனுக்கு பொறுக்காதே” என மலை உச்சியை பார்த்தான்.

அவளுக்கும் இவன் மேல் அளவு கடந்த அக்கறை தான், இரண்டு பேருந்துக்கு நடுவில் எலியை போல் சிக்கி சனநேரம் போய் சேர்ந்திருப்பான் ஆனால் அவள் குறுக்கிட்டு ஓட்டுனரை அலற வைத்தாள். ஒரு வழியாக இவன் வெறுமையும் தனிமையும் அவளால் மறைந்தது.

கார்க்கி இப்போது தயாராகினான், “மலைக்கு பஸ்ஸில் போகலாமா அல்லது நடைபாதை வழியாக போலாமா” என்று ஒரு சின்ன குழப்பம். பிறகு “சீக்கிரம் மலைக்கு போய் என்ன செய்ய போரோம்” என்று மலைபாதை வழியா போலாம் என முடிவெடுத்து நகர்ந்தான்.

திருப்பதி அருகிலுள்ளஅலிபிரி சோதனை சாவடியை நெருங்கினான் அதுவரை கண்மணியும் அவனை பின் தொடர்ந்து வந்தவள் இப்போது காணவில்லை அவனுக்கு ஒன்றும் புரியவில்லை  மேலும் சோதனை சாவடியில் சோதனைகளை முடித்து கொண்டு மலைபாதையில் ஏற தயாரானான். ஒரு நிமிடம் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தான் கண்மணியை காணவில்லை.

எங்கே போனதென்று தெரியவில்லை ஏனோ அவனுக்கு இனம்புரியாத பினைப்பு உண்மையிலே அது ஒரு இனம்புரியாத நயன மொழி. இருவருக்கும் பூர்வ ஜென்ம பந்தமாக இருக்கலாம். அந்த ஏகாந்த பார்வை, கண்கள் பேசும் நயன மொழி அந்த ஆத்மார்த்தமான உடல்மொழி என அவள் கனிவான சம்பாஷனை அவனை என்னனமோ செய்தது. காலையில் அவன் காலை சுற்றியே வந்து கொண்டிருந்தவள் இப்போது காணவில்லை. நிரந்திரமற்ற வாழ்வில் நிரந்திரமான உறவுகள் கிடைக்க ஏங்குவது நியாயமில்லை தானே.

இன்னும் சுமார் பத்து கிலோ மீட்டர் இருக்கிறது ஏழுமலையானை தரிசிக்க ஆகயால் மெள்ள நடக்க தொடங்கினான் ஒவ்வொன்றாக ரசிக்க தொடங்கினான். ரசனை இல்லாதவன் மனிதனே இல்லை தானே? சக பாதசாரிகளை பச்சையிலைகளை பொன் மேகங்களை வண்ணத்து பூச்சிகளை கலைநயமிக்க சின்னஞ்சிறிய வேலைபாடுகளை கண்டு மெய்சிலிர்த்தான்.

நேற்று நடந்ததிலுருந்து மீண்டு வந்தாலும் ஏதோ ஒரு தனிமை அவனை வாட்டி கொண்டே தான் இருந்தது. ஒய்வு அறை வந்ததும் அவன் உடல் ஓய்வு கொண்டது ஆனால் அவன் மனம் நிலை கொள்ளவில்லை. மலை ஏற தொடங்கினான் பாபவிநாசனம் வந்தவுடன் ஒரு குளியல் பின்பு அண்ண பிரசாதம் கொஞ்சம் இனிமையான பாடல்கள் என புங்கை மரத்தடியில் குயிலின் இனிய கீதங்களோடு அந்த மெல்லிய தருணங்களை ரசித்தான். திடிரென கண்மணி அவன் பின்னாலிருந்து வந்தாள் கொஞ்சம் ஆச்சர்யம் தான். இப்போது அவன் இதழோரம் ஒரு சிறிய புன்னகை. நமக்காக இறைவன் கொடுத்த வரமா என்ன “கூட்டிட்டு போய் நம்மளே வளர்த்துகளாமா, யாரவது வந்து கேட்டா? தேடுனா? தொலைச்சுட்டு போயிருந்தா? நம்மளயே சுத்தி சுத்தி வருதே”

“ஏய் உன் பேரு என்ன, என்கூட வர்றியா” அவளுக்கு தான் பேச வராதே பேசாவிட்டால் என்ன அந்த கண்கள் பேசிய நயன பாஷை தான் அவளுக்கு புரியுமே மெள்ள அவன் அருகில் வந்து தலையசைத்து பக்கத்தில் உட்கார்ந்துகொண்டது.

“ஏய் மணி ஏய் மணி” என ஒரு குரல் கூக்குரலிட்டு கொண்டே வந்தது கண்மணியை பார்த்து “ஏய் இங்க வந்துட்டியா” என வாயேடுக்கும் போது காரக்கியை பார்த்து கொஞ்சம் திடுக்கிட்டாள் அந்த இளம்பெண். அவளுக்கு எப்படி பேர் தெரியும் கண்மணியும் சொல்லியிருக்க முடியாது ஒருவேளை அவளுக்கு பிடித்த பெயராக இருக்கலாம் ம்ம்.

“நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்களா!” என்றாள்

“இல்லங்க நான் இல்ல”

“இல்ல காலைல இருந்து திரு திருனு முழிச்சிட்டு இருந்துச்சா, அதான் கேட்டேன்”

“இல்லங்க எனக்கு எதும் சம்பந்தமில்ல”

“ஃப் யூ டோன்ட் மைன்டு நான் கூட்டிட்டு..”
என இழுத்தாள்.

“தாராளமா” என வாய் வார்த்தையாக சொன்னான்.

“யார யாரு தாரைவார்க்குறீங்க” என்ற தொனியில் கண்மணி அவர்கள் உரையாடலை பார்த்து கொண்டிருந்தாள்.

ஏனோ கண்மணிக்கு கார்க்கியை பிரிய மனமில்லை. அவனுக்கோ அவளை பிரிய மனமில்லை அவள் பேச்சு அவள் கண்கள் என அவனை மறுபடியும் காதலெனும் கடலில் தள்ளப்பார்த்தது. அவளுக்கும் கூட இவனை எங்கோ பார்த்த ஞாபகம் ஒருவேளை அவனை புகைப்படத்தில் பார்த்திருப்பாள் அதை அவள் தாயே காட்டியிருப்பாள்.

“ஏதோ நமக்கு கடவுள் வரம் கொடுத்தான்னு நினச்சோம் ம்ஹூம்” என மனதிற்குளே நினைத்து கொண்டு மேலே செல்ல ஆயத்தமானான்.

அநேகமாக வந்து சேர்ந்துவிட்டான் ‘ஆஹா என்ன அழகு’ மேலேயும் மக்கள் கூட்டம் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருக்கிறார்கள் யாரை தேடுகிறார்களோ ஒருவேளை அந்த பாலாஜியையா! அவனை தேட சன்னதிக்கு தானே செல்ல வேண்டும்.

இயற்கையின் கொள்ளை அழகும் அந்த பரவசமும் என்னமோ செய்தது. நடு நடுவே அவள் முகம் வந்து போனது. இப்போது அவன் மனம் வாழ துடிக்கிறது அவள் கண்களுக்காக அவள் பேச்சுக்காக அவள் இதயத்திற்காக. கண்மணியை கூட மறக்க செய்த அவள் முகம் அவளை காண எத்தனித்தது. அவன் கீழே தான் இருப்பாள் அவனது சப்கான்ஷியஸ் சொல்லிகொண்டே இருந்தது அது அவனை கீழேயும் கொண்டு வந்து விட்டது. பார்வை அங்கும் இங்கும் பரபரத்தது.

திடிரென அவன் சமீபத்தில் அவளை போன்ற ஒரு கவிதை நிழல் உருவம் மெள்ள அருகில் வந்தது சட்டென கண்மணி அவன் காலருகே தாவினாள். “உங்கள தான் தேடுனோம் நீங்களே வச்சுக்கோங்க, அவளுக்கு உங்கள தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என குமட்டு புன்னகையுடன் எனக்கும் தான் என்ற தொனியில் சொல்லிவிட்டு கண்மணியை அவனிடம் விட்டுவிட்டு சென்றாள்.

வேகமாக பாய்ந்தோடி வந்த கண்மணி அவன் மீது தாவினாள் ‘படார்’ என கீழே சாய்ந்தான் முன்னங்கால்களால் அவன் மீது ஏறி அவன் முகத்தில் முத்த மழை பொழிந்தாள் அவனை தன் எச்சிலால் குளிப்பாட்டினாள் அவனுக்கும் அதில் மிக்க ஆனந்தம். அவனை முட்டி தள்ளி மூர்ச்சையற்றாக்கினாள். வாலை ஆட்டி கொண்டே அவனை பார்த்து குரைத்தாள் கொஞ்சினாள் கூத்தாடினாள். அந்த வால் ரோமங்களால் அவனை வருடினாள். இடைவிடாமல் அவனை பார்த்து குரைத்து கொண்டே இருந்தாள் ஆனால் அவன் கண்களோ அவளையே பார்த்துகொண்டிருந்தது.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements